Published:Updated:

`பெட்ரோல் இல்லை; தனியார் மருத்துவமனை!' - சேலம் ஆம்புலன்ஸ் டிரைவரின் அலட்சியத்தால் நேர்ந்த விபரீதம்?

சேலம் மாவட்டம் ஓமலூரில் நடந்த விபத்து

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

சேலத்தை அடுத்த ஓமலூர் மெயின் ரோட்டில் இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிரெதிரே மோதி விபத்துக்குள்ளானது. இதில் அக்கா பத்மாவதி, தம்பி கோகுல்ராஜ் படுகாயமடைந்தார்கள். பத்மாவதியின் நிலை மோசமாக இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர், தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் கமிஷன் கிடைக்கும் என்பதால் அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் அடாவடி செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிகிச்சைக்குக் கால தாமதம் ஏற்பட்டு பத்மாவதி உயிரிழந்தார்.

பத்மாவதி
பத்மாவதி

இதுபற்றி பத்மாவதியின் தம்பி ராமலிங்கம் கூறுகையில்,``எனக்கு மூணு அக்கா, நான் ஒரு பையன். பத்மாவதி நடு அக்கா. அவுங்களுக்கு திருமணமாகி ஒரு பையன், ஒரு பொண்ணு இருக்கிறார்கள். மாமா லாரி டிரைவராக இருக்கிறார். நாங்கள் தொப்பூர் ஆர்.எம்.மஹால் அருகே குடியிருக்கிறோம். அக்காவும், அம்மாவும் தொப்பூர் அருகே ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் கடை வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் ஃபைல் கேட்டதால் அதை வாங்குவதற்காகப் பத்மாவதி அக்காவும், என் சித்தப்பா பையன் கோகுல்ராஜும் டூ வீலரில் சேலத்திற்குப் போகும் போது ஓமலூர் பிரிவு தாண்டியதும் எதிரே வந்த டூ வீலர் மோதியது. இதில், பத்மாவதியும் கோகுல்ராஜும் படுகாயமடைந்தார்கள்.

அதையடுத்து இருவருக்கும் ஓமலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்யப்பட்டது. பத்மாவதி நிலை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக உடனே சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போகச் சொன்னார்கள். ஸ்பீட் என்ற தனியார் ஆம்புலன்ஸ் உடனே வந்து அக்காவையும் எங்களையும் ஏற்றிச் சென்றது. ஆம்புலன்ஸ் டிரைவர் செல்போனில் பேசிக்கொண்டே வந்தார். ஓமலூர் டோல்கேட் வந்ததும் `பெட்ரோல் இல்லை' என்று மெதுவாக ஓட்டினார். `ஆம்புலன்ஸுல பெட்ரோல் இல்லையென்று சொல்றீங்களேன்'னு சொல்லி ரூ.500 கொடுத்தோம். ஆனால், பெட்ரோல் போடாமல் மெதுவாகவே ஓட்டினார்.

ராமலிங்கம்
ராமலிங்கம்

மணிப்பால் மருத்துவமனை வந்ததும் ஆம்புலன்ஸ் நிறுத்திவிட்டு, `இங்கு சேர்க்கலாம். நல்ல சிகிச்சை கொடுப்பார்கள்' என்றார். `இல்லை, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போங்கள்' என்று கத்திக் கதறி அழுதும் அவர் கேட்கவில்லை. அதன்பிறகு வேறு ஒரு டிரைவர் வந்து ஆம்புலன்ஸை குறிஞ்சி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். மருத்துவமனைக்குச் சென்றதும் எங்க அக்காவின் உயிர் போய்விட்டது'' என்று கதறி அழுதவர்.

சற்று நேரம் கழித்து, ``என் அக்காவின் மரணத்திற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்தான் காரணம். அவர் தனியார் மருத்துவமனையில் கொடுக்கும் கமிஷனுக்காக காலதாமதம் செய்ததால் என் அக்கா இறந்துவிட்டார். அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்'' என்று கண்ணீர் வடித்தார்.

ஒடிசாவில் எரிபொருள் இல்லாமல் வழியிலேயே நின்ற ஆம்புலன்ஸ்! - கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

இதுபற்றி ஸ்பீட் ஆம்புலன்ஸ் உரிமையாளர் மணியிடம் கேட்டபோது, ``விபத்து நடந்ததாக போன் வந்ததும் உடனே எங்க ஸ்பீட் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் தூக்கிச்சென்று ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். முதலுதவி செய்ததும் பத்மாவதி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்தார்கள். உடனே, சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். மணிப்பால் மருத்துவமனை தாண்டியதும் பெட்ரோல் இல்லை. வழக்கமாக பெட்ரோல் போடும் நேரம். உடனே, பெட்ரோல் அடித்து விட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அவர்கள் முதலில் தரண் மருத்துவமனைக்கும் பிறகு குறிஞ்சி மருத்துவமனைக்கும் கொண்டு போகச் சொன்னதால் இறுதியில் குறிஞ்சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்'' என்றார்.