Published:Updated:

வீட்டில் பயன்படுத்தப்பட்ட கமர்ஷியல் சிலிண்டர் காரணமா?! - 5 பேரை பலிகொண்ட சேலம் சம்பவம்

ராஜலட்சுமி சமையல் அறைக்குச் சென்று காஸ் அடுப்பைப் பற்றவைக்க, வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது.

சேலம் கருங்கல்பட்டி, பாண்டுரங்கநாதசாமி கோயில் 3-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கட்ராஜன் (72). இவருக்குச் சொந்தமாக ஐந்து வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் வெங்கட்ராஜன் குடியிருக்க, மற்ற வீடுகளில் கோபி (52), கணேசன் (37), முருகன் (46), மோகன்ராஜ் (40) ஆகியோர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்துவந்தனர். கோபியுடன் அவரின் மனைவி ஜோதி (49), தாய் ராஜலட்சுமி (80), மாமியார் எல்லம்மாள் (90) ஆகியோர் வசித்துவந்தனர்.

இவர்களின் வீட்டுக்கு அருகிலேயே சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராக போக்குவரத்துப் பிரிவில் பணியாற்றிவந்த பத்மநாபன் (49) சொந்த வீடு கட்டி மனைவி தேவி (39), மகன் லோகேஷ் (18) ஆகியோருடன் வசித்துவந்தார்.

விபத்து நடந்த இடம்
விபத்து நடந்த இடம்

இந்த நிலையில் நேற்று ரம்மியமாக விடிந்த காலைப்பொழுது இவ்வளவு ரணமானதாக மாறும் என வீட்டிலிருந்தவர்கள் யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். காலை சுமார் 6:30 மணியளவில் கோபியின் தாயார் ராஜலட்சுமி சமையல் அறைக்குச் சென்று காஸ் அடுப்பைப் பற்றவைக்க, வீட்டிலிருந்த காஸ் சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது. இதில் அடுத்தடுத்து ஆரு வீடுகள் நொடிப் பொழுதில் சிதறி விழு, வீட்டுக்குள் இருந்தவர்கள் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்தனர். இடிந்த வீடுகளின் கான்கிரீட் துண்டுகள், 50 மீட்டர் தூரத்துக்குச் சிதறி பக்கத்தில் இருந்த மேலும் நான்கு வீடுகளில் விழுந்து சேதமடைந்தது.

சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீஸாருக்கும், செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்களும் போலீஸாருமாக 50-க்கும் மேற்பட்டோர் மீட்புப்பணியில் இறங்கினர். சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி கமிஷனர் கிறிஸ்துராஜ், மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல் ஹோடா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பணிகளை முடுக்கிவிட்டனர். குடியிருப்புப் பகுதிகள் நெருக்கமாக இருந்ததாலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடியதாலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதையடுத்து இடிபாடுகளில் சிக்கி பயங்கரக் காயத்துடன் போராடிக்கொண்டிருந்த கோபி (52), அவரின் தாயார் ராஜலட்சுமி, கணேசன் (37), அவரின் மகன் சுதர்ஷன் (10), வீட்டு உரிமையாளர் வெங்கட்ராஜன் (62), அவரின் மனைவி இந்திராணி (54), மோகன்ராஜ் (40), நாகசுதா (30), முருகன் மனைவி உஷாராணி (40), பத்மநாபன் மகன் லோகேஷ் (18) மற்றும் தெருவில் சென்ற பால் வியாபாரி கோபால் (70), எதிர்வீட்டில் வசிக்கும் தனலட்சுமி (64) என 12 பேர் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடம்
சம்பவ இடம்

இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே ராஜலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். 90 சதவிகித காயத்துடன் கோபியும் மற்ற 10 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மூன்று மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பூஜாஸ்ரீ என்னும் 10 வயது பெண் குழந்தை சிறு காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'நம்மைக் காக்கும் 48' திட்டம்: சாலை விபத்து ஏற்பட்டால் எவ்வாறு உதவும்?! - ஒரு விரிவான பார்வை

செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலராகப் பணியாற்றிவந்த பத்மநாபன், அவருடைய மனைவி தேவி, எல்லம்மாள், கார்த்திக் ராம் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். ‘இப்படியான பல துயரமான சம்பவங்களில் ஒரு தீயணைப்பு வீரராகக் களத்தில் இறங்கி பத்மநாபன் ஏராளமானோரைக் காப்பாற்றியிருக்கிறார். அவர் ஓர் அமைதியான, மனிதநேயம் மிக்கவராகவே இருந்தார். அவருக்கே இப்படி ஆகிவிட்டதே’ என மீட்புப் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் பத்மநாபன், அவரின் மனைவி தேவி இறப்பு குறித்து கண்கலங்கினர்.

சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.என்.நேரு
சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் கே.என்.நேரு

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்ததோடு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்து குறித்து சேலம் செவ்வாய்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கோபி தனது வீட்டில் ஹோட்டல் போன்ற வர்த்தக இடங்களில் பயன்படுத்தும் கமர்ஷியல் சிலிண்டரைப் பயன்படுத்தி இனிப்பு, பலகாரங்களை செய்துவந்திருக்கிறார். அந்த கமர்ஷியல் சிலிண்டர் வெடித்ததால்தான் வீடுகள் இடிந்து தரைமட்டமானதோடு, ஐந்து பேர் பலியான சோக சம்பவமும் அரங்கேறியுள்ளது என்பது தெரிந்தது. இதையடுத்து வீடுகளில் கமர்ஷியல் சிலிண்டர் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தச் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டதோடு, சிலிண்டர் வெடித்து பலியான ஐந்து பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு