Published:Updated:

`ரயில் சக்கரத்துல சிக்கிய இளைஞரைப் பார்த்தப்போ..!’ - `திக் திக்' நொடிகளை விவரிக்கும் பெண் போலீஸ்

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் மீட்கப்படும் காட்சி
ரயில் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் மீட்கப்படும் காட்சி

ரயில் சக்கரத்தில் சிக்கிய அந்த இளைஞரை நொடிப்பொழுதில் ஓடிச்சென்று பெண் போலீஸார் இருவரும் காப்பாற்றியிருக்கின்றனர்.

சேலம் ரயில்வே ஜங்ஷன். ஜூலை 7-ம் தேதி, நள்ளிரவு 1.30 மணி. ஜார்க்கண்ட் மாநிலம் ஹாட்டியாவிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் (02409) சிறப்பு ரயில் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நிற்கிறது. நள்ளிரவுக்கான அமைதியுடன் ரயிலில் பயணிகள் ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கின்றனர். சில நிமிடங்களில் பச்சை விளக்கு காட்டப்பட, சேலம் ஜங்ஷனிலிருந்து ரயில் மெதுவாக நகரத் துவங்கி வேகமாக ஓட்டமெடுக்கிறது. அந்த நேரத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பதற்றத்தில் ரயிலில் இருந்து கீழே குதிக்கிறார்.

ரயிலில் சிக்கிய இளைஞரைக் காப்பாற்ற ஓடிவரும் ஆர்.பி.எஃப் பெண் போலீஸ்
ரயிலில் சிக்கிய இளைஞரைக் காப்பாற்ற ஓடிவரும் ஆர்.பி.எஃப் பெண் போலீஸ்
நீலகிரி: விபத்தில் பேச்சு மூச்சின்றி கிடந்த ஓட்டுநர்; சமயோசிதமாக உயிரைக் காப்பாற்றிய போலீஸார்!

ரயிலின் வேகத்தால் நிலைகொள்ள முடியாமல் போனவர், சில நொடிகளிலேயே பிளாட்ஃபார்முக்கும் ரயில் சக்கரத்துக்கும் இடையே சிக்கிக் கதற ஆரம்பிக்கிறார். பெரும் கோரமான சம்பவம் ஒன்று அரங்கேறுவதற்குள்ளாக, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்து ஆர்.பி.எஃப் பெண் போலீஸார் இருவர் நொடிப்பொழுதில் ஓடிச்சென்று அந்த இளைஞரை உயிருடன் மீட்டெடுக்கின்றனர்.

சேலம் ரயில்வே ஜங்ஷனில் நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் வைரலானது. அதனையடுத்து, துரிதமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு ரயில் சக்கரத்தில் சிக்கிய இளைஞரைக் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் பெண் போலீஸாரான மஞ்சு மற்றும் அஸ்வினி ஆகிய இருவரும் ரயில்வே பாதுகாப்புப்படை உயர் அதிகாரிகளிடம் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் பாராட்டினைப் பெற்றனர்.

விசாரணையில், ரயில் சக்கரத்திலிருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞருடைய பெயர் சிவன்குமார் என்பதும், அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்திருக்கிறது. சேலத்தில் இறங்க வேண்டியவர் லேசாக அசந்து தூங்கி, ரயில் நகரும் போதுதான் விழித்துள்ளார். இறங்க வேண்டிய இடத்தை தவற விட்டுவிட்டோம் என்ற பதற்றத்தில் ரயிலில் இருந்து அந்த இளைஞர் குதிக்கும் போதுதான் அந்தச் சம்பவம் நடந்துள்ளது.

ரயில் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் மீட்கப்படும் காட்சி
ரயில் சக்கரத்தில் சிக்கிய இளைஞர் மீட்கப்படும் காட்சி

இளைஞரைக் காப்பாற்றிய ஆர்.பி.எஃப் பெண் போலீஸான அஸ்வினியிடம் பேசினோம்.

``ராத்திரி ஒன்றரை மணி இருக்கும். 4-வது பிளாட்ஃபார்ம்ல பாதுகாப்புப் பணியில இருந்தேன். ஹாட்டியாவிலிருந்து எர்ணாகுளத்துக்குப் போற ரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்துலேயே, ரயில்ல இருந்து ஒரு இளைஞர் கீழ குதிச்சி, பேலன்ஸ் பண்ணி நின்னுட்டாரு.

திடீர்னு இன்னொரு இளைஞரும் ரயில்ல இருந்து கீழ குதிச்சாரு. ரயிலோட எதிர் திசையில குதிச்சதால, அவரால பேலன்ஸ் பண்ண முடியலை. தடுமாறிப்போய் பிளாட்ஃபார்முக்கும் ரயிலுக்கும் இடையில சிக்கிட்டாரு. பிளாட்ஃபார்முக்கும் ரயில் சக்கரத்துக்கும் இடையே அவரோட தலை மட்டும்தான் தெரியுது. ரயிலை பிடிச்சி தொங்கிட்டு இருந்தவருக்கும், தண்டவாளத்துக்கும் இடையே ஒரிரு அடி இடைவெளி இருந்ததால, எந்நேரமும் அவர் கீழ விழுந்து ரயில் சக்கரத்துல சிக்கிக் கொள்ற சூழல் இருந்தது. அதைப் பார்த்ததும் என் உடம்பெல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி.

ரயில் சக்கரத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இளைஞருடன் ஆர்.பி.எஃப் போலீஸார்
ரயில் சக்கரத்தில் இருந்து காப்பாற்றப்பட்ட இளைஞருடன் ஆர்.பி.எஃப் போலீஸார்
சேற்றுக்குள் உயிருக்குப் போராடிய பெண்... துணிந்து காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்... ஒரு நெகிழ்ச்சி கதை!

எப்படியாவது அவரை காப்பாத்தணும்னு சம்பவ இடத்துல இருந்த ஆர்.பி.எஃப் போலீஸான மஞ்சு மேடமும், நானும் ஓடிப்போய் அந்த இளைஞரை பிடிச்சு இழுத்து பிளாட்ஃபார்ம்ல தூக்கிப் போட்டோம். இடுப்புல சில காயத்தோட அந்த இளைஞர் பிழைச்சிட்டாரு. 20 வயதான அந்த இளைஞர் மெலிசா இருந்ததால ரயிலோட பக்கவாட்டை பிடிச்சிக்கிட்டே சில அடி தூரம் வந்துருக்காரு. கொஞ்சம் தடியான ஆளா இருந்திருந்தா இந்நேரம் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும். 20 வயசு சின்னப் பையன், ஏதாவது நடந்திருந்தா பாவமில்லையா? கடவுள்தான் அந்த இளைஞரைக் காப்பாத்தியிருக்காரு. தயவுசெஞ்சு யாரும் ஓடுற ரயில்ல இருந்து கீழ இறங்க முயற்சி செய்யாதீங்க. ஒரு சின்ன விபத்து உங்க வாழ்க்கையை மட்டுமில்லாம, உங்க குடும்பத்தோட வாழ்க்கையையும் புரட்டிப் போட்டுடும்” என்றார்.

`கடவுள்' இம்முறை காக்கி உடையில் வந்திருக்கிறார்!

அடுத்த கட்டுரைக்கு