Published:Updated:

கிரிக்கெட் பந்துக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த மாணவன்! - கூடலூர் அரசுப் பள்ளியில் நடந்த சோகம்

ரா.சதீஸ்குமார்
கே.அருண்

கூடலூர் புளியம்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஹரிஹரன் பள்ளி வளாகத்துக்குள்ளேயே மின்சாரம் தாக்கி பரிதாபமாகப் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hariharan
Hariharan

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகில் புளியம்பாறை அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பழங்குடி மற்றும் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளே அதிக எண்ணிக்கையில் பயின்றுவருகின்றனர். இதே பள்ளயில் மரப்பாலம் அட்டிக்குளி பகுதியில் வசிக்கும் தோட்டத் தொழிலாளி வடிவேலுவின் 9 வயது மகன் ஹரிஹரனும் 4-ம் வகுப்பு படித்துவந்தான்.

Hariharan
Hariharan

வழக்கம்போல் நேற்று பள்ளிக்குச் சென்றுள்ளார். இன்று ஓணம் பண்டிகை என்பதால் நேற்று மதியம் 2.3௦ மணிக்கே பள்ளிக்கு சிறப்பு விடுமுறை அளித்துவிட்டு ஆசிரியர்கள் சென்றுவிட்டனர். மாணவர்கள் அனைவரும் நேரத்தில் வீட்டுக்குச் செல்ல ஹரிஹரன் மட்டும் மற்ற மாணவர்கள் அனைவரும் செல்லும் வரை பள்ளிக்கு அருகில் நின்றான்.

பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். அப்படி விளையாடும்போது அருகில் உள்ள மேற்கூரையில் பந்துகள் மாட்டிக்கொள்ளும். கூரை என்பதாலும் மின்கம்பி தாழ்வாகச் செல்வதாலும் மேலே ஏறி பந்துகளை எடுக்கச் சென்றால் ஆசிரியர்கள் திட்டுவார்கள் என்ற பயத்தில் மாணவர்கள் பந்துகளை எடுக்காமல் அப்படியே விட்டுவிடுவது வழக்கம்.

Puliyambarai govt school
Puliyambarai govt school

நேற்று மாணவர்கள் யாரும் இல்லாத சமயத்தில் பந்துகளை எடுப்பதற்காகக் கூரையில் ஏறிய ஹரிஹன், கூரையையொட்டி தாழ்வாகச் சென்ற மின் கம்பத்தில் உரசியதால் நொடிப் பொழுதில் சடலமாகக் கீழே விழுந்தான். இதைக் கண்ட பொதுமக்கள் அவசரமாக ஆட்டோவில் தூக்கிப்போட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், ஹரிஹரன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்..

மாணவனின் இறப்பு குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், “ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று மதியம் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு மாணவ - மாணவிகளை வளாகத்தைவிட்டு வெளியில் அனுப்பிவிட்டுச் சென்றோம். அடுத்த அரைமணி நேரத்தில் மாணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாகத் தகவல் வந்தது” என்றனர்.

Hariharan
Hariharan

புளியம்பாறை பகுதியைச் சேர்ந்த சுக்ரீசன் கூறுகையில், “ பள்ளிக் கட்டடத்தின் மீது உயர் அழுத்த மின்கம்பி தாழ்வாகச் செல்வது குறித்து பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பொதுமக்களும் மின்வாரியத்துக்கு புகார் அளித்து கம்பிகளை மாற்றும்படி பலமுறை வலியுறுத்தினோம். மேலும், பள்ளி நிர்வாகத்தின் சார்பிலும் மின்வாரிய அலுவலகத்துக்கு மின்கம்பிகளை மாற்றியமைக்குமாறு தகவல் அளித்துள்ளனர். எனினும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தால் 4-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்துள்ளான். குழந்தைகள் படிக்கும் பள்ளி வளாகத்தில்கூட பாதுகாப்பை உறுதி செய்ய முடியவில்லை” என்றார் வேதனையுடன்.

இந்த சம்பவம் குறித்து புளியம்பாறை பள்ளியில் கூடலூர் கல்வி மாவட்ட அலுவலர் பாரதி விவேகானந்தன், கூடலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜனார்த்தனன், வட்டாட்சியர் ரவி மற்றும் காவல்துறை அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.