Published:Updated:

`நண்பன் நல்லா இருக்கான் கவலைப்படாதீங்க'-ஆற்றில் தத்தளித்த மாணவனைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறை!

தஞ்சாவூரில், ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். மயக்க நிலையில் மீட்கப்பட்ட நண்பனைப் பார்த்து சக மாணவர்கள், `மனோ எந்திரடா' என கத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Rescued students
Rescued students ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில், 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மூன்று பேர் ஆற்றுக்கு குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை தீயணைப்புத்துறையினர் கண்ணிமைக்கும் நேரத்தில் மீட்டதுடன், மயங்கி ஆபத்தான நிலையில் இருந்த மாணவனுக்கு, கரையிலேயே முதலுதவி சிகிச்சையும் அளித்தனர். அப்போது, மற்ற இரண்டு மாணவர்களும் `மனோ... எந்திரிடா எந்திரிடா' என கண்கள் கலங்க கத்திக்கொண்டே இருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Rescued students
Rescued students

தஞ்சாவூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் மனோஜ், வில்லியம், விஜய் ராகுல் என்ற மூன்று மாணவர்கள் 10-ம் வகுப்பு படித்துவருகின்றனர். இவர்கள், ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல், புது ஆறு என்றழைக்கப்படும் கல்லணைக் கால்வாய் ஆற்றில் பெரியகோயிலை ஒட்டியுள்ள படித்துறையில், இருட்டிய நேரத்தில், பள்ளிச் சீறுடையிலேயே குளிக்கச் சென்றுள்ளனர்.

ஆற்றில் கரையைத் தொட்டவாறே தண்ணீர் ஓடியது. இதைக் கண்ட மாணவர்கள் மூன்று பேரும் ஆனந்தமாக படித்துறையிலேயே குளிக்கத் தொடங்கினர். சிறிது நேரத்திலேயே தண்ணீரின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாத மாணவர்கள், ஒவ்வொருவராகத் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தத்தளித்துக்கொண்டே கரையோரமாகச் சென்ற மாணவர்களைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்து, உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல்கொடுத்தனர்.

Rescued students
Rescued students

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இளஞ்செழியன் தலைமையிலான தீயணைப்புதுறையினர், கரை ஓரத்தில் சுவற்றைப் பிடித்தபடி மூன்று பேரும் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டு பயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். இரவு நேரம், போதிய வெளிச்சம் இல்லை என்பதால் ஏற்பட்ட கடும் சிரமத்திற்கு இடையில் டார்ச் லைட் வெளிச்சத்தைக்கொண்டு கரையோரங்களில் மாணவர்களைத் தேட ஆரம்பித்தனர். சற்று நேரத்தில், ஆபத்தான கட்டத்தை எதிர்த்துப் போராடி, தத்தளித்துக்கொண்டிருந்த மாணவர்களைக் கண்டுபிடித்தனர்.

உடனே மாணவர்களை மீட்பதற்கு, நீளமான கயிற்றை கரையில் கட்டி ஆற்றுக்குள் இறங்கினர். தண்ணீரில் தவித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்களை ஒவ்வொருவராக கயிற்றைப் பிடித்துக்கொண்டு வரச்செய்து கரையேற்றினர். மற்றொரு மாணவன், தண்ணீரை அதிக அளவில் குடித்ததால் மயக்க நிலையில் இருந்தான். அவனை தோளில் தூக்கிக்கொண்டு கரையேறினார்கள். இதைப் பார்த்த மற்ற இரண்டு மாணவர்களும், `மனோ... எந்திரிடா எந்திரிடா' என கண்கள் கலங்க அதிர்ச்சியில் கத்தத் தொடங்கினர்.

fire forces
fire forces

`ஒண்ணும் இல்லடா பயப்படாதீங்க' எனத் தேற்றியபடியே மயங்கிய நிலையில் இருந்த மாணவன் மானோஜுக்கு முதலுதவி செய்தார்கள் தீயணைப்புப்படையினர். அதன்பிறகு, மெள்ள கண் விழிக்கத் தொடங்கினான். உடனே, அவனை அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து அருகில் இருந்தவர்களிடம் பேசினோம், ''இருட்டு நேரம் என்பதால், மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்ததை கண்டுபிடிப்பதில் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு சிரமம் இருந்தது. அதை ஒரு பொருட்டாக நினைக்காமல், விரைந்து செயல்பட்டு மாணவர்களைக் கண்டுபிடித்து மீட்டனர். மனோஜ் என்ற மாணவன் மட்டும் மயங்கிவிட்டான். அவனை மயங்கிய நிலையிலேயே கரைக்கு தூக்கிவந்தனர். இதைக் கண்ட வில்லியம், விஜய் இருவரும் அவனுக்கு என்ன ஆகுமோ என்ற பயத்தில் கத்திக்கொண்டே இருந்தனர்.

பின்னர், மனோஜின் மார்பின் மேல் கைவைத்து அழுத்தி, முதலுதவி செய்தனர். அப்போது, கண்கள் கலங்கியவாறே மயங்கிக் கிடந்த நண்பனைப் பார்த்து இரண்டு மாணவர்களும், `மனோ... எந்திரிடா' என உடைந்த குரலில் கத்தினார்கள். அதிர்ச்சியில் இருந்த மாணவர்களிடம், `ஒண்ணும் ஆகாதுடா நண்பன் நல்லா இருக்காண்டா' என அந்த நேரத்திலும் அவர்களை தேற்றினார்கள், தீயணைப்பு வீரர்கள்.

Rescued students
Rescued students

அப்படியும், அந்த இரண்டு பேரும் அழுகையை அடக்கிக்கொண்டே 'மனோ... மனோ...' என கூப்பிட்டுக்கொண்டே இருந்தனர். அடுத்த நொடிகளில் மனோ கண் விழித்தான். அதன் பிறகுதான் அவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். உடனே தீயணைப்புத்துறை வீரர்கள், மனோவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். பின்னாலேயே அந்த இரண்டு நண்பர்களும் ஓடினார்கள்.

மாணவர்களுக்கு நடக்க இருந்த அசம்பாவிதத்தைத் தடுத்து, அவர்களைக் காப்பாற்றிய தீயணைப்புத்துறையைச் சேர்ந்த அதிகாரி மற்றும் அலுவலர்களைப் பொதுமக்கள் மனதார பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதன்பிறகு, மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Rescued students
Rescued students

தீயணைப்பு துறையின் மாவட்ட அலுவலர் இளஞ்செழியனிடம் பேசினோம், ``தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்கள், 100 மீட்டர் தூரத்தில், கரையின் சுவற்றைப் பிடித்துக்கொண்டு தத்தளித்தனர். இரண்டு பேரை மீட்டுவிட்டோம். ஒரு மாணவன் மட்டும் நீரில் மூழ்கிவிட்டான். உடனே அவனை நீரில் மூழ்கிக் கண்டுபிடித்ததுடன், முதலுதவி சிகிச்சை கொடுத்து மருத்துவமனையில் சேர்த்தோம். பின்னர், பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்து வரவழைத்தோம். அவர்கள், தங்கள் பிள்ளைகளைக் கட்டி அணைத்துக் கொண்டு கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்'' என்றார்.