Published:Updated:

விபத்து ஏற்படும் இடங்களில் செக்‌ஷன் 304A! – தேனியில் புதிய முயற்சி!

சாலையில், மஞ்சள், வெள்ளை நிற பெயின்ட் மூலம் விபத்துப்பகுதி என எழுதி, அதில் ஒரு பொம்மை பொறிக்கப்பட்டு, 304A என எழுதப்படுகிறது.

விபத்துப் பகுதி
விபத்துப் பகுதி ( வீ.சக்தி அருணகிரி )

தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. தினமும், வியாபாரத்துக்காகவும், தொழில் சம்பந்தமாகவும், மலைத்தோட்டங்களில் வேலை செய்வதற்காகவும் ஆயிரக்கணக்கான மக்கள் தேனி எல்லையைக் கடந்து கேரளாவுக்குள் செல்கின்றனர். அதேபோல, மருத்துவம், வியாபாரம் போன்ற காரணத்துக்காக கேரளாவினரும் தேனிக்குள் வருகின்றனர்.

விபத்துப் பகுதி
விபத்துப் பகுதி
வீ.சக்தி அருணகிரி

இதனால், எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கிறது தேனி. இது ஒருபுறம் என்றால், இருக்கும் பரபரப்புக்கு இணையாக சாலை விபத்துகளும் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அதை சற்று குறைக்கும் நோக்கோடு தேனி மாவட்ட காவல்துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

அஜாக்கிரதையாக செயல்பட்டு மரணத்தை விளைவித்தால், அதற்கு இந்திய தண்டனைச்சட்டம் செக்ஷன் 304A-ன்படி தண்டனை வழங்கப்படுகிறது. இதை அறிவுறுத்தும் நோக்கோடு, தேனி மாவட்டத்தின் விபத்துப்பகுதிகளை கணக்கிட்டு, அந்தப் பகுதிகளில், சாலையில், மஞ்சள், வெள்ளை நிற பெயின்ட் மூலம் விபத்துப்பகுதி என எழுதி, அதில் பொம்மை பொறிக்கப்பட்டு, 304A என எழுதப்படுகிறது.

விபத்துப் பகுதி
விபத்துப் பகுதி
வீ.சக்தி அருணகிரி

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் பேசியபோது, ``தேனி மாவட்டத்தில் அதிகம் விபத்து ஏற்படுத்தும் பகுதிகளில், பேரிகேட், வேகத்தடை, ஒளிரும் பட்டை என எல்லாவற்றையும் பயன்படுத்திப் பார்த்தோம், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்துபவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. விபத்துகளின் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை. அதனால்தான், விபத்துப் பகுதிகளில் இதுபோன்று எழுதுகிறோம். ஏதோ எழுதியுள்ளனர் என தங்கள் வேகத்தை அப்போதாவது குறைப்பார்கள் என எண்ணித்தான் இதைச் செய்துள்ளோம். மேலும், அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தக் கூடாது. அது தண்டனைக்குரிய குற்றம் என அறிவுறுத்தவும் இதைச் செய்திருக்கிறோம். விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கிறோம்.” என்றார்.