Election bannerElection banner
Published:Updated:

நடுக்கடலில் படகில் மோதிய கப்பல்.. குமரி மீனவர்கள் பலி; 9 பேர் கதி என்ன?! - தேடும்பணி தீவிரம்

கப்பல் விபத்து
கப்பல் விபத்து

``காலம்காலமாக மீனவர்களின் படகுகளை கப்பல் இடித்துத்தள்ளிவிட்டு தப்பிவிடும் நிலை உள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்” என்றார் ஜஸ்டின் ஆன்றணி.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள வேப்பூர் பகுதியைச் சேர்ந்த ஜாபர் என்பவருக்கு சொந்தமான ஐ.எப்.பி ரப்பா என்ற விசைப்படகில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 மீனவர்கள் மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றனர். சுமார் பத்து நாட்கள் ஆழ்கடலில் தங்கியிருந்து மீன்பிடிக்க திட்டமிட்டு சென்ற அந்த விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் என மொத்தம் 14 மீனவர்கள் இருந்தனர்.

அந்த விசைப்படகு கர்நாடக - கேரள எல்லையான மங்களூரில் இருந்து 55 கடல் மைல் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.பி.எல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) என்ற பெயர் கொண்ட கப்பல் விசைப்படகு மீது வேகமாக மோதியுள்ளது. இதில் விசை படகில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர். படகில் இருந்த 3 மீனவர்கள் மரணம் அடைந்ததாகவும், 2 மீனவர்கள் மீட்கப்பட்டதாகவும், மாயமான மீதமுள்ள மீனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மீட்கப்பட்ட மீனவர்கள்
மீட்கப்பட்ட மீனவர்கள்

கடலில் மாயமான மீனவர்களை மீட்பதற்காக கடலோர காவல் குழுவினர், ராஜ்தூத் என்ற விசைப்படகு உட்பட மூன்று விசைப்படகுகள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்களில் தேடும் பணி நடந்து வருகிறது. விபத்துக்குள்ளான விசைப்படகை குளச்சல் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் என்பவர் ஓட்டி சென்றதாகவும், அவரோடு அந்த படகில் குளச்சல் பகுதியைச் சேர்ந்த சில மீனவர்களும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாயமான மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி மற்றும் தெற்காசிய மினவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் ஆகியோர் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்றணி கூறுகையில், "கப்பல் மோதிய விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த இரண்டு மீனவர்களும், தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மீனவரும், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், மேற்குவங்கத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் என 14 மீனவர்கள் இருந்துள்ளனர். அதில் குளச்சலைச் சேர்ந்த அலெக்ஸாண்டர், தாசன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணிக்தாஸ் ஆகிய மூன்று மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்குவங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இருவர் உயிருடன் மீட்கப்படுள்ளனர். தூத்துக்குடியைச் சேர்ந்த டென்சன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மாணிக்கவேல், பாலமுருகன், பழனி மற்றும் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவர்கள் 5 பேரை தேடும் பணி நடந்து வருகிறது. காலம்காலமாக மீனவர்களின் படகுகளை கப்பல் இடித்துத்தள்ளிவிட்டு தப்பிவிடும் நிலை உள்ளது. எனவே இதற்கு மத்திய அரசு முற்றுபுள்ளி வைக்க வேண்டும். மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

விபத்துக்குள்ளான படகு
விபத்துக்குள்ளான படகு

தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச்செயலாளர் சர்ச்சில் கூறுகையில், "கடந்த 11-ம் தேதி புறப்பட்டுச் சென்ற விசைப்படகு மீது 13.4.2021 செவ்வாய்க்கிழமை சுமார் 2.30 மணி அளவில் சிங்கப்பூரை சார்ந்த சரக்குக் கப்பல் மோதியதில் படகு மூழ்கி பேராபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய கப்பல் ஆழ்கடலில் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. மாயமான மீனவர்களை விரைந்து மீட்க வேண்டும். ஆழ்கடல் மீன்பிடி விசைப் படகுகளுக்கு கப்பல்களால் ஏற்படும் விபத்துகளில் இருந்து மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு