Published:Updated:

சிவகங்கை: `சாதி மறுப்பு திருமணம்; கொலையா... விபத்தா?’ - ராணுவ வீரர் மரணத்தில் சந்தேகம்

ராணுவ வீரர் அஜித்
ராணுவ வீரர் அஜித்

விபத்து என்று கோணத்தில் மட்டும் விசாரிக்காமல், கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கனும் அப்பதான் உண்மை தெரியவரும் என ராணுவ வீரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் 'வைகை பட்டாளம்' என்ற பெயரில் ராணுவ வீரர்கள் இணைந்து பல்வேறு சமூக பணிகளைச் செய்து வருகின்றனர். கொரோனா முழு ஊரடங்கு சமயத்தில் பொதுமக்களுக்கு அளப்பரிய உதவிகளைச் செய்து கை கொடுத்து வருகின்றனர். இந்தச் சமயத்தில் கடந்த 14-ம் தேதி காளையார்கோயில் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் குடும்பத்தில் அவரின் மனைவி மற்றும் தாய் நகைக்காகக் கொலை செய்யப்பட்டனர். 22-ம் தேதி சிங்கம்புணரி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை வீரர் வீட்டில் கத்தி முனையில் கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

ராணுவ வீரர் அஜித்
ராணுவ வீரர் அஜித்

இந்நிலையில் மானாமதுரை பகுதியில் ராணுவ வீரர் ஒருவர் சாலை விபத்தில் பலியானதாகச் சொல்லப்படும் செய்தி ராணுவ வீரர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மானாமதுரை அடுத்த கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் அஜித்குமார். விடுமுறைக்கு ஊருக்கு வந்த இவர், சில வாரங்களுக்கு முன்தான், சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று இரவு மானாமதுரை வைகை புதுப்பாலம் அருகே செல்லும்போது விபத்து ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் உடல் கைப்பற்றப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்து, ``என் சித்தி மகன்தான் அஜித். எந்த விஷயத்திலும் முதல் நபராக வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பான். எங்க கிராமத்தில் தற்போது அவன்தான் ராணுவ வீரன். அதனால் அவனை நாங்கள் பெருமையாக நினைப்போம். ஓட்டப் பந்தயத்தில் அவனை விஞ்ச முடியாது. அந்தளவுக்கு சுறுசுறுப்பாக இருப்பான். தனது முயற்சியால் ராணுவத்தில் இணைந்து பணி செய்தான்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

லீவுக்கு வந்த அவன், காதலித்த பெண்ணை கைவிடக் கூடாது என்று பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் கல்யாணம் செஞ்சுகிட்டான். தற்போது மனைவியுடன் வேறு இடத்தில் குடியிருந்து கொண்டு, கல்குறிச்சியில் புது வீடு கட்டிக்கிட்டு இருக்கான். நேத்து வீட்டு வேலை முடிச்சுட்டு, மானாமதுரையில் இருந்து கிளம்பும்போதுதான் அவனுக்கு இப்படி ஆயிருச்சு. முதலில் கொலை என்று சொன்னார்கள், இப்ப ஆக்ஸிடன்ட் என்று சொல்றாங்க. எது உண்மைனு தெரியல. போலீஸ்தான் விசாரணை செய்யுணும்" என்றார்.

உ.பி: `பணத்துக்காகக் கடத்தல்; காவலர்களின் அலட்சியம்’ - அதிரவைத்த இளைஞர் கொலை

ராணுவ வீரர்கள் வட்டாரத்தில், ``சிவகங்கையில் தொடர்ந்து ராணுவ வீரர்களுக்கு எதிராக அநீதிகள் நடக்கிறது. நேற்று நடந்த அஜித் விபத்தில், அவன் வாகனத்தில் மஞ்சள் கலர் பெயின்ட் ஒட்டி இருக்கு. அதனால் ஆட்டோ மூலம்தான் விபத்து ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு இருக்கு. மண்டையில் சந்தேகப்படும்படியா வெட்டுக்காயம் இருக்கு. மேலும், அவன் திருமணம் எதிர்ப்புக்கு இடையே நடந்துள்ளது குறிப்பிட த்தக்கது. இப்படி பல சந்தேகம் அஜித் இறப்பில் உள்ளது. எனவே, போலீஸார் விபத்து என்று கோணத்தில் மட்டும் விசாரிக்காமல், கொலையாக இருக்குமோ என்ற கோணத்திலும் விசாரிக்கணும். அப்பதான் உண்மை தெரியவரும்’’ என்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனை
சிவகங்கை அரசு மருத்துவமனை

காவல்துறை செய்திக் குறிப்பில், ``கல்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் அஜித் (24) என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனத்தால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத விசாரணைக்காக வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக வாட்ஸப்பில், ``வாலிபர் வெட்டிக்கொலை’ எனத் தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். இவ்வாறு செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு