Published:Updated:

`இரு கால்களிலும் எந்த உணர்வும் இல்லை!’ - மின்சார விபத்தால் கலங்கும் சிவகங்கை எலக்ட்ரீஷியன்

சுரேஷ் குடும்பத்தினரோடு
சுரேஷ் குடும்பத்தினரோடு

சிறுநீர் கழிப்பதுகூட ஒரு போராட்டம்தான். தொடர்ந்து நான் வீட்டில் இருப்பதால் என் குழந்தைகளைக் காப்பாற்றச் சிரமமாக உள்ளது. முறையான வீடுகூட எங்களிடம் இல்லை.

சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் விரும்பிய அரசுப் பணி கிடைக்கவில்லை என்றாலும் தனியாக எலக்ட்ரீஷியன் பணி செய்துவந்தார்.

சிகிச்சை (கோப்புப் படம்)
சிகிச்சை (கோப்புப் படம்)

வீடுகளுக்கு வயரிங் செய்வது, மின்சார வயர்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வது என்று அரளிப்பட்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதியில் வேலை செய்துவந்த நிலையில் கடந்த ஆண்டு டிரான்ஸ்பாரத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார்.

இதில் இடுப்புப் பகுதியில் அடிபட்டு கால்கள் செயலிழந்ததால், வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார். இதனால் இவரது 4 குழந்தைகளையும் காப்பாற்ற வழிதெரியாமல் கண்ணீர் வடித்து வருகிறார்.

வீட்டில் இருந்த சுரேஷை நேரில் சந்தித்து பேசினோம்,``கடந்தாண்டு சித்திரை மாதம் எங்கள் கிராமத்தில் மின்சார கோளாறு ஏற்பட்டதால் டிரான்ஸ்பாரத்தில் ஏறி வேலை செய்துகொண்டிருந்தேன். எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன்.

சுரேஷ் தனது வீட்டில்
சுரேஷ் தனது வீட்டில்

முதுகு மற்றும் இடுப்பில் பலமாக அடிபட்டதால் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். ஒரு மாதத்துக்கு மேல் சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தேன். இடுப்பில் தொடர்ந்து வலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு என்னைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், `உங்களுக்கு இடுப்பு பக்கத்தில் வைத்த பிளேட் முறையாக வைக்கப்படவில்லை. இதை மீண்டும் சரி செய்வது கஷ்டம் நீங்கள் இனி நடக்க முடியாது' என்று தெரிவித்துவிட்டனர்.

அதன்படி என்னால் தற்போது வரை நடக்க முடியவில்லை. இடுப்புக்குக் கீழே எந்த உணர்வும் இல்லை. சிறுநீர் கழிப்பதுகூட ஒரு போராட்டம்தான். தொடர்ந்து நான் வீட்டில் இருப்பதால் என் குழந்தைகளைக் காப்பாற்றச் சிரமமாக உள்ளது. முறையான வீடுகூட எங்களிடம் இல்லை.

சுரேஷ் குடும்பத்தினரோடு
சுரேஷ் குடும்பத்தினரோடு

எனது மனைவி 100 நாள் வேலைக்குச் சென்று பெற்றுவரும் பணம் போதவில்லை. நான் மீண்டு வரவேண்டும் எனில் லட்சக்கணக்கில் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர் நான் என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை' என்றார்.

டிரான்ஸ்பாரத்தில் இருந்து கீழே விழுந்ததால் தனது இடுப்பில் முறிவு ஏற்பட்டு வீட்டில் செயல் இழந்து கிடக்கிறார் சுரேஷ். அவரின் நான்கு குழந்தைகளையும் எப்படிக் கரை சேர்ப்பதென்று தெரியாமல் கண்ணீர் வடித்து வருகிறார்.

இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள், ``மின்வாரியத்துக்கு சொந்தமான டிரான்ஸ்பார்மர்களில் தனியார் நபர்கள் வேலை செய்வது குற்றம். இதில் வேறு ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டு மின்வாரியத்திற்கு இழப்பீடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதை ஈடு செய்ய வேண்டும்" என்றனர் கண்டிப்போடு!

`இரு கால்களிலும் எந்த உணர்வும் இல்லை!’ - மின்சார விபத்தால் கலங்கும் சிவகங்கை எலக்ட்ரீஷியன்

இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், "தனியார் நபர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. இருப்பினும், பாதிக்கப்பட்ட நபரின் குடும்பம் வாழ்வாதாரம் இழந்துள்ளதால், இதில் பரிசீலனை செய்து உதவி வழங்கலாம். பாதிக்கப்பட்ட நபர் முறையாக மனு அளித்த பின் இதைக் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு