Published:Updated:

சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிகிச்சையிலிருந்த இருவர் இறப்பு... பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

வெடிவிபத்து
News
வெடிவிபத்து

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கிறது.

சிவகாசி: பட்டாசு ஆலை வெடிவிபத்து; சிகிச்சையிலிருந்த இருவர் இறப்பு... பலி எண்ணிக்கை 5-ஆக உயர்வு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடிவிபத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கிறது.

Published:Updated:
வெடிவிபத்து
News
வெடிவிபத்து

விருதுநகர் மாவட்டம், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. ஆபத்து நிறைந்த இந்தத் தொழிலை விபத்தில்லாமல் மேற்கொள்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், பட்டாசு ஆலை உரிமையாளர்கள்‌ சங்கத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்துவருகின்றனர். ஆனாலும் எதிர்பாராதவிதமாக பட்டாசு ஆலைகளில் நிகழும் வெடிவிபத்துகள் விருதுநகர் மாவட்டம் முழுவதையும் வேதனைக்குள்ளாக்கி வருகின்றன. அந்த வகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பாக சிவகாசியை அடுத்த செங்கமலப்பட்டி, கனஞ்சாம்பட்டியில் செயல்பட்டுவந்த பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து வெடிவிபத்து ஏற்பட்டது. சம்பவத்தன்று இரு விபத்துகளிலும் சிக்கி மூன்று பட்டாசுத் தொழிலாளர்கள் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சாத்தூர், சிவகாசி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு
உயிரிழப்பு

இதில் குறிப்பிடும்படியாக, கனஞ்சாம்பட்டியில் நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவந்த பட்டாசுத் தொழிற்சாலையில் மூலப்பொருள் கலவை உராய்வினால் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி சத்திரப்பட்டியைச் சேர்ந்த முனீஸ்வரி (30), கருப்பசாமி (55) ஆகிய இரண்டு பேர் பலியாகியிருந்தனர். மேலும், ஜெயராஜ் (70) முருகன் (52), செல்லத்தாய் (45), குருசாமி (60), மகேஷ்வரன் (42), தங்கராஜ் (49), மாரியப்பன் (42), கருப்பசாமி (26), மாரிமுத்து (54), ராஜ்குமார் (38) உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்களில் கருப்பசாமி (26), மாரிமுத்து இருவருக்கும் உடலில் 100 சதவிகிதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டிருந்ததால், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். மற்றவர்கள் சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மதுரை மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த கருப்பசாமி, மாரிமுத்து ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.