Published:Updated:

`அடுத்தடுத்து சரிந்த 6 வீடுகள்; குளத்துக்குள் மூழ்கிய பொருள்கள்!' - நாகை அதிர்ச்சி

6 வீடுகள்
6 வீடுகள்

ஆறு வீடுகளின் மண் சுவர்கள் அடுத்தடுத்து இன்று காலை 6 மணி அளவில் மளமளவென குளத்தில் சரிந்தது.

நாகையில் சிவன் கோயில் குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 6 வீடுகள் திடீரென அடுத்தடுத்து சரிந்து இடிந்து குளத்தில் விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

6 வீடுகள்
6 வீடுகள்

நாகப்பட்டினம் அருகே வெளிப்பாளையம் சிவன்கோயிலுக்குச் சொந்தமான குளத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து வந்த தண்ணீரின் காரணமாக சிவன் கோயில் குளம் படிக்கட்டுகளைத் தாண்டி நீர் நிரம்பி வழிகிறது. குளம் நீர் நிரம்பி வழிவதால், வடக்கரை பகுதியில் கட்டப்பட்ட சங்கர், கண்ணன், ஆனந்த், பாலு, சுகந்தி கலா ஆகியோரின் ஆறு வீடுகளின் மண் சுவர்கள் அடுத்தடுத்து இன்று காலை 6 மணி அளவில் மளமளவெனக் குளத்தில் சரிந்தது.

இதையடுத்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே ஓடி வந்தனர். அதைத்தொடர்ந்து வீட்டின் மறுபகுதி சுவர்களும், வீட்டில் இருந்த கட்டில், பீரோ, பாத்திரங்கள் என அனைத்தும் குளத்துக்குள் மூழ்கின. தாங்கள் குடியிருந்த வீடும் உடைமைகளும் அவர்களது கண் முன்னாலேயே குளத்து நீரில் மூழ்கியது கண்டு கதறினர். பொருள்களை மீட்க முடியாமல் அப்பகுதி மக்கள் பரிதவித்தனர்.

6 வீடுகள்
6 வீடுகள்

விபத்து குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினர் உடனடியாக வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். காலை நேரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் பிடிக்க பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததன் காரணமாக உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு