Published:Updated:

இந்தோனேசிய விமானத்துக்கு என்ன ஆனது? - நேரில் பார்த்த மீனவர் பகிர்ந்த திக்திக் நிமிடங்கள்

இந்தோனேசிய விமான விபத்து
இந்தோனேசிய விமான விபத்து

ஸ்ரீவிஜயா (SJ182) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாருடனான தொடர்பை இழந்து, விமானத்துக்கும் தரைக் கட்டுப்பாடு நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தோனேசிய லயன் ஏர் விமானம் ஜகார்த்தா நகரிலிருந்து புறப்பட்ட சுமார் 12 நிமிடங்களுக்குள் கடலில் விழுந்ததில் மொத்தம் 62 பயணிகள் உயிரிழந்தனர். அந்த விபத்துக்கு விமானத்தின் வடிவமைப்பில் இருந்த பிரச்னையும், விமானிகளின் தவறுகளும்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் போயிங் 737-500 ரக (எஸ்.ஜே.182) விமானம் ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா (Soekarno-Hatta) விமான நிலையத்திலிருந்து நேற்று உள்ளூர் நேரப்படி மதியம் 2.36 மணிக்கு புறப்பட்டது. உள்நாட்டு விமான சேவையை வழங்கிவரும் அந்த நிறுவனத்தின் விமானம், மேற்கு காளிமந்தனின் (West Kalimantan) மாகாணத் தலைநகரான போன்டியனாக் (Pontianak) நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட நான்கு நிமிடங்களில், 2.40 மணியளவில் விமானம் நடுவானில் திடீரென மாயமாகியது.

இந்தோனேசிய விமான விபத்து
இந்தோனேசிய விமான விபத்து

ஸ்ரீவிஜயா (SJ182) விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாருடனான தொடர்பை இழந்து, விமானத்துக்கும் தரைக் கட்டுப்பாடு நிலையத்துக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது குறித்து பேசிய இந்தோனேசியாவின் தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்தின் (National Search and Rescue Agency) தலைவர் ஏர் மார்ஷல் பாகஸ் புருஹிட்டோ (Bagus Puruhito), ``அந்த விமானத்திலிருந்து கடைசி நேர டிஸ்ட்ரஸ் சிக்னல் கூட அனுப்பப்படவில்லை" என்று தெரிவித்தார்.

130 பயணிகள் வரை பயணம் செய்யும் வசதி கொண்ட அந்த விமானத்தில், 7 சிறுவர்கள், மூன்று குழந்தைகள், 12 விமான பணியாளர்கள் உட்பட 62 பயணிகள் பயணித்திருக்கிறார்கள். விமானத்தில் இருந்த அனைவரும் இந்தோனேசியர்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பயணிகளின் உறவினர்கள் போன்டியனாக்கில் உள்ள விமான நிலையத்திலும், ஜகார்த்தாவின் சோகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்திலும் செய்வதறியாது திகைத்து சோகத்துடன் காத்திருக்கும் துயரக் காட்சிகளை இந்தோனேசிய ஊடகங்கள் பதிவு செய்திருக்கின்றன.

``மாயமான விமானம், 26 வருடங்கள் பயன்பாட்டில் இருந்துவரும் போயிங் 737-500 ரக விமானம். விமானம் நல்ல நிலையில்தான் இருந்தது. பலத்த மழை காரணமாக விமானம் புறப்பட 30 நிமிடங்கள் தாமதமாகிவிட்டது" என்று ஸ்ரீவிஜயா ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜெபர்சன் இர்வின் ஜாவேனா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்தோனேசியா விமான விபத்து
இந்தோனேசியா விமான விபத்து
Tatan Syuflana

ஸ்ரீவிஜயா ஏர் விமானம், ஒரு நிமிடத்துக்குள் 10,000 அடிக்கு மேல் தன் உயரத்தை இழந்து கீழ் நோக்கி இறங்கியிருக்கிறது என்று விமான கண்காணிப்பு வலைதளமான ஃபிளைட்ரேடார் 24 (FlightRadar24) தெரிவித்திருந்தது. மாயமான விமானத்தைத் தேடும் பணியில் இந்தோனேசிய பேரிடர் மீட்புப்படை உள்ளிட்ட பல்வேறு ஏஜென்சிகளும் நேற்று மாலை முதல் ஈடுபடத் தொடங்கினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மீனவர் சோலிஹின் (Solihin) என்பவர், விமானம் கடலில் விழுந்ததைத் தாம் பார்த்ததாகக் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில்,``விமானம் விபத்துக்குள்ளான காட்சியை நான் பார்த்தேன். அதனால், உடனடியாக கரைப்பகுதிக்குத் திரும்ப முடிவு செய்தேன். விமானம் மின்னல் போல் கடலில் விழுந்து தண்ணீரில் வெடித்தது. இச்சம்பவம் எங்களுக்கு மிகவும் அருகில் நடந்ததால், விமானத்தின் பாகம் ஒன்று என் கப்பல் மீது தாக்கியது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

விமானம் மாயமான இடத்துக்கு அருகிலுள்ள தீவில் வசிப்பவர்கள் பலரும் விமானத்தின் பாகங்களைப் போன்ற பொருட்களைக் கடலில் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர்.

விமானத்திலிருந்து வந்ததாகக் கருதப்படும் சிக்னல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, கடற்படை வீரர்கள் கொண்ட 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ``நாங்கள் இரண்டு சிக்னல்களைக் கண்டறிந்துள்ளோம். அவை விமானத்தின் கறுப்புப் பெட்டியாக இருக்கலாம்" என்று இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்புப் படையின் தலைவர் பாகஸ் புருஹிட்டோ கூறியுள்ளார்.

ஒரு சக்கரம் உட்பட விமானத்திலிருந்து சிதைந்ததாக அதிகாரிகள் நம்பும் பொருட்களையும், விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று கூறப்படுவது குறித்தும் விசாரண்ணை நடத்தப்பட்டு வருகிறது.

தேடல் மற்றும் மீட்பு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இரண்டு பைகள் குறித்து பேசிய ஜகார்த்தா போலீஸின் செய்தித் தொடர்பாளர் யூஸ்ரி யூனுஸ், "ஒரு பையில் பயணிகளின் உடைமைகள் இருந்தன,. மற்றொரு பையில் மனித உடல் பாகங்கள் இருந்தன" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விமானத்தைத் தேடும் பணியில் நான்கு விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு