Published:Updated:

`என் மகனுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு!’ - பள்ளிக் கட்டடத்தால் கையை இழந்த மாணவனின் தாய் உருக்கம்

செல்வக்குமார்
செல்வக்குமார்

பள்ளி வளாகத்திற்குள் இருந்த பழைய சத்துணவுக் கட்டடம் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் இடிந்தது. இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பொன்னன்படுகை கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், பழைய சத்துணவுக் கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு மாணவர்கள் படுகாயமடைந்தனர். அதில் ஒரு மாணவனின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.

Govt School
Govt School

பொன்னன்படுகை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சுமார் 100 மாணவ, மாணவிகள் பயின்றுவருகிறார்கள். பள்ளி வளாகத்திற்குள் இருக்கும் பழைய சத்துணவுக் கட்டடம் தொடர் மழை காரணமாக நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

தொடர் மழை; பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் - தேனி பள்ளி மாணவர்களைப் பதறவைத்த விபத்து!

அக்கட்டடத்தின் அருகே விளையாடிக்கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவன் செல்வக்குமார், ஏழாம் வகுப்பு மாணவன் ஈஸ்வரன் என இருவரும் படுகாயமடைந்தனர். மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த ஆசியர்கள், ஊர்க்காரர்களின் உதவியோடு படுகாயமடைந்த இரு மாணவர்களையும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இடிந்த கட்டடம்
இடிந்த கட்டடம்

இச்சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்தை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் நேரில் ஆய்வு செய்தார்.

செல்வக்குமாருக்குத் தலை, கை, கால், முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், தேனி கானாவிலக்கு மருத்துவமனையிலிருந்து எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கும் மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதையடுத்து செல்வக்குமார் மதுரை அழைத்துச்செல்லப்பட்டார்.

தொடர் மழை; பயன்பாடற்ற சத்துணவுக் கட்டடம் - தேனி பள்ளி மாணவர்களைப் பதறவைத்த விபத்து!

தனியார் மருத்துவமனையில் செல்வக்குமாரைப் பரிசோதித்துவிட்டு, `வலது கையில் எலும்பு நொறுங்கிவிட்டது. உடனே, அறுவை சிகிச்சை மூலம் கையை அகற்ற வேண்டும்' எனக் கூறியுள்ளனர். அதன்படி செல்வக்குமாரின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. தொடர்ந்து, `நுரையீரல் மற்றும் கல்லீரலில் ரத்தம் உறைந்துள்ளது. அதற்காகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்' என கூறியுள்ளனர்.

பொன்னன்படுகை கிராமத்தில் விவசாயக் கூலிகளான ரஞ்சித்குமார்-பூங்கொடி தம்பதியரின் ஒரே மகன் செல்வக்குமார். அருகே இருக்கும் தனியார் பள்ளியில் தனது மகனைப் படிக்க வைக்க ரஞ்சித்குமாருக்கு ஆசை. ஆனால், போதிய வருமானம் இல்லாததால், கிராமத்திலேயே இருக்கும் அரசு ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் படிக்க வைத்துள்ளார்.

Vikatan
செல்வக்குமார்
செல்வக்குமார்

இந்நிலையில்தான் இப்படி ஒரு விபத்து. மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செல்வக்குமாருக்கு சிகிச்சை அளிக்க சில லட்சங்கள் வரை கேட்டுள்ளனர். விவசாயக் கூலியான ரஞ்சித்குமாரால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

``என்னுடைய நகைகளை விற்றுதான் சிகிச்சைக்குப் பணம் சேர்த்தோம். மேலும், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். பணத்திற்கு நாங்கள் எங்கே போவது? பணம் இல்லை என்பதால்தானே அரசுப் பள்ளியில் எங்கள் மகனைச் சேர்த்தோம். என் மகனுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு'' என்று வேதனையோடு கூறினார் செல்வக்குமாரின் தாயார் பூங்கொடி.

`உங்களால் பெருமைப்படுகிறேன்!' - ரஷ்ய அதிபரை அசரடித்த ஒடிசா பள்ளி மாணவர்

இது தொடர்பாக தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் பேசியபோது, ``மழை காரணமாகவே கட்டடம் இடிந்துள்ளது, இதற்கு முன்பு இடிந்த கட்டடம் குறித்து எந்த ஒரு புகாரும் வரவில்லை. தற்போது மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளியிலும் பழைய கட்டடங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்து, அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மேலும், சிகிச்சை பெற்றுவரும் மாணவனுக்கு அரசு நிதி உதவி வழங்குவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு