Published:Updated:

தஞ்சாவூர்: நிற்காமல் சென்ற லோடு ஆட்டோ; கடத்துவதாக நினைத்து குதித்த மாணவர்கள்! - அதிர்ச்சி சம்பவம்

சிகிச்சையில் மாணவர்கள்
சிகிச்சையில் மாணவர்கள்

25 மாணவர்களையும் லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு டிரைவர் ராஜசேகரன் சென்றிருக்கிறார். ஆனால் மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும், ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தஞ்சாவூர் அருகே பள்ளி சென்றுவிட்டு நடந்து வீட்டுக்குச் சென்ற மாணவர்களை ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ டிரைவர், மாணவர்கள் இறங்க வேண்டிய இடத்தில் நிறுத்தாமல் சென்றதால், டிரைவர் தங்களைக் கடத்திச் செல்வதாக நினைத்த மாணவர்கள், ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கும்போதே கீழே குதித்தனர். இதில் ஐந்து மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மருத்துவமனையில் மாணவர்கள்
மருத்துவமனையில் மாணவர்கள்

தஞ்சாவூர், செங்கிப்பட்டி அருகேயுள்ள உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளிக்கோட்டை பகுதியிலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் மாணவர்களுக்கு முட்டை, பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. அவற்றை வாங்குவதற்காக உசிலம்பட்டியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு 3-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சுமார் 25 பேர் பள்ளிக்கு நடந்தே சென்றுள்ளனர்.

அங்கு முட்டை உள்ளிட்ட பொருள்களை வாங்கிக்கொண்டு மீண்டும் நடந்தே வீட்டுக்குச் சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக லோடு ஆட்டோ ஒன்று சென்றிருக்கிறது. அங்கு நின்ற இளைஞர்கள் சிலர் அந்த லோடு ஆட்டோவை நிறுத்தி, அதன் டிரைவரான காவலர்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகரனிடம், `மாணவர்கள் நடந்து போறாங்க. அவங்களை ஏத்திக்கிட்டு உசிலம்பட்டியில் இறக்கிவிடுங்க’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

லோடு ஆட்டோ டிரைவர் ராஜசேகரன்
லோடு ஆட்டோ டிரைவர் ராஜசேகரன்

பின்னர் 25 மாணவர்களையும் லோடு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ராஜசேகரன் சென்றிருக்கிறார். ஆனால் மாணவர்கள் இறங்க வேண்டிய இடமான உசிலம்பட்டி வந்ததும் ஆட்டோ நிற்காமல் வேகமாகச் சென்றிருக்கிறது. இதையடுத்து டிரைவர் தங்களைக் கடத்திக்கொண்டு செல்வதாக நினைத்த மாணவர்கள் வண்டியில் இருந்தபடி `கடத்திக்கிட்டு போறாங்க’ என்று கூச்சலிட்டுக் கத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனாலும் அருகிலிருந்த மேட்டுப்பட்டி கிராமத்தையும் தாண்டி லோடு ஆட்டோ சென்றிருக்கிறது. இதில் பயந்துபோன மாணவ, மாணவிகள் ஆட்டோ ஓடிக்கொண்டிருக்கும்போதே கீழே குதித்துள்ளனர். இதில் மாரிமுத்து (13), ரம்யா (13), சரண்யா (13), சசிரேகா (13), கலைவாணி (12) ஆகியோர் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை உடனடியாக மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

சென்னை அண்ணா சாலையிலுள்ள கட்டடத்தில் தீ விபத்து! - மீட்புப் பணிகள் தீவிரம்

இதையடுத்து லோடு ஆட்டோ டிரைவர் குழந்தைகளைக் கடத்திச் சென்றதாக தகவல் பரவி, பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு என்ன ஆனதோ எனப் பதறியபடி மருத்துவமனைக்கு ஓடி வந்தனர். மாணவர்கள் குதித்ததும், அதிர்ச்சியடைந்த ஆட்டோ டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு, 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்து அடிப்பட்டவர்களை ஏற்றி அனுப்பிவைத்ததுடன் தானும் நேரடியாக மருத்துவமனைக்குச் சென்ற தகவல் தெரியவந்தது.

இது குறித்து டிரைவர் ராஜசேகரன் கூறுகையில், ``வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் பகுதியில் இறக்குவதற்காகச் சென்றேன். ஊருக்குத் திரும்பிவரும்போது என் ஆட்டோவை மறித்த சிலர் மாணவர்களை ஏற்றி அனுப்பிவைத்தனர். 25 பேர் இருந்ததால் நான் அப்போதே வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் அவர்கள் என்னிடம் தகராறு செய்து, ஒண்ணும் இல்லை என்று மாணவர்களை ஏற்றி அனுப்பிவைத்தனர். ஆனால் மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் எனக்குச் சரியாக தெரியாததால் வண்டியை நிறுத்தவில்லை. ஆனால் மாணவர்கள் பயந்துபோய் கீழே குதித்துவிட்டனர்.

விபத்தில் காயம்பட்ட  மாணவி
விபத்தில் காயம்பட்ட மாணவி

எனக்கு உடம்பெல்லாம் உதறல் எடுக்கத் தொடங்கிவிட்டது. அங்கிருந்த சிலர் நான் பிள்ளைகளைக் கடத்திக்கொண்டு சென்றதாக நினைத்து என்னைத் தாக்க முற்ப்பட்டனர். ஒரு ஆள் 25 குழந்தைகளைக் கடத்த முடியுமா என்று கேட்டு அவர்களிடம் புரியவைத்தேன். மேலும் 108 ஆம்புலன்ஸ் பிடித்து மாணவர்களை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தேன். இதையடுத்து லோடு ஆட்டோவை செங்கிப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்திவிட்டு, நானும் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சையில் உள்ள மாணவ, மாணவிகளுடன் இருந்தேன்” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் செங்கிப்பட்டி போலீஸார் இது குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு