Published:Updated:

`ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயற்சி'- அடுத்தடுத்த விபத்துகளில் உயிரைவிட்ட மாணவர்கள்!

தூத்துக்குடியில் பைக்கில் ஒருவரை ஒருவர் முந்திசெல்ல முயன்றபோது, லாரி மோதிய விபத்தில் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு மாலை போடச் சென்ற இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உடைந்து கிடக்கும் பைக்
விபத்தில் உடைந்து கிடக்கும் பைக்

தூத்துக்குடி சாந்திநகரைச் சேர்ந்தவர்கள் மணிசங்கர் மற்றும் அஜித்குமார். இருவரும் நண்பர்கள். அடுத்தடுத்த வீட்டைச் சேர்ந்தவர்கள். இதில், மணிசங்கர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஜித்குமார், தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவருகிறார். இரண்டு பேரும் தசரா திருவிழாவை முன்னிட்டு மாலை அணிவதற்காக இவர்களது நண்பர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 6 பேராக, 3 பைக்கில் இன்று காலை தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் அருகிலுள்ள குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் கோவிலுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

உயிரிழந்த 2 மாணவர்கள்
உயிரிழந்த 2 மாணவர்கள்

ஆறுமுகநேரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் உள்ள அடைக்கலாபுரம் பகுதியில் சென்றபோது, ஒருவரை ஒருவர் பைக்கில் முந்திச் செல்ல முயன்றதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் மணிசங்கரும், அஜித்குமாரும் முந்திச் செல்ல முயன்றபோது சாத்தான்குளத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி எதிரேவந்த மினிலாரி மீது மோதினர். இந்த விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

அதிக ரத்த இழப்பினால் மணிசங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜித்குமாரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து மினிலாரி டிரைவர், சாத்தான்குளத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரைக் கைது செய்தனர். கோயிலுக்கு மாலை அணியச் சென்றபோது, வழியில் லாரி மோதி 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தில் உடைந்த பைக்
விபத்தில் உடைந்த பைக்

இதேபோன்று ஒரு சம்பவம் நேற்று இப்பகுதியில் நிகழ்ந்தது. தூத்துக்குடி முத்தையாபுரத்தில் நேற்று, தந்தைக்கு உதவியாக புரோட்டா கடையில் வேலை பார்த்துவந்த, முகம்மது பயாஸ், தன் நண்பர்களுக்கு பிரியாணி கொடுப்பதற்காக பிரியாணி பொட்டலங்களுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தார். இதே போல, முன்னே சென்றுகொண்டிருந்த வாகனங்களை முந்திச் செல்ல முயன்றதால், எதிரே வந்த லாரி மோதி உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

``இரு விபத்துகளிலுமே பைக்கில் சென்றவர்கள் ஹெல்மெட் அணியவில்லை. விபத்தில் பலியானவர்களுக்கு முந்திச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர, சாலையில் பின்னே வரும் வாகனங்களையும், எதிரே வரும் வாகனங்களையும் கவனிக்கத் தவறிவிட்டனர். விபத்தில் தூக்கி வீசப்பட்ட பைக்கின் முன்பக்கச் சக்கரம் தனியாக கழண்டு கிடக்கிறது என்றால் எவ்வளவு வேகத்தில் வந்திருப்பார்கள்?

சாலையில் கிடக்கும் பைக்
சாலையில் கிடக்கும் பைக்

ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் பலமாக அடிபட்டு அதிக ரத்தம் வெளியேறியிருக்காது. ஒருவராவது பிழைத்திருக்க வாய்ப்பு உண்டு. ஹெல்மெட் அணியாததால்தான் பெரும்பாலான விபத்துகளில் உயிரிழப்பு எற்படுகிறது” என்கின்றனர் அப்பகுதியினர். தொடர்ந்து அடுத்தடுத்த நாள்களில் ஒரேமாதிரி நடந்த விபத்துகள் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.