Published:Updated:

`மனைவியுடன் வீடியோ கால்; வெடித்துச் சிதறிய டேங்கர்!’- சூடானில் பண்ருட்டி இளைஞருக்கு நேர்ந்த சோகம்

சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தாகக் கூறப்படும் தமிழக இளைஞர், அந்த நேரத்தில் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்த உருக்கமான தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

சூடான் தொழிற்சாலை விபத்து
சூடான் தொழிற்சாலை விபத்து

சூடான் தலைநகர் கார்டூமினில் செயல்பட்டுவந்த செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தார்கள். அதில், 18 பேர் இந்தியர்கள் என்ற நிலையில் பண்ருட்டியைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்திருக்கும் தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

உயிரிழந்த ராஜசேகர்
உயிரிழந்த ராஜசேகர்

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த மானடிக்குப்பம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகனின் மகன் ராஜசேகர் (35). இவருக்குத் திருமணமாகி கலைசுந்தரி (33) என்ற மனைவியும், ஷிவானி என்ற 3 வயது பெண் குழந்தையும் இருக்கிறார்கள். டிப்ளமா செராமிக் படித்திருந்த ராஜசேகருக்கு இங்கு சரியான வேலை கிடைக்காததால் வெளிநாடு செல்ல முடிவெடுத்திருக்கிறார்.

சிலிண்டர் வெடித்து தீ விபத்து! - சூடான் ஆலையில் தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் பலி

அப்போதுதான் சூடான் நாட்டில் செராமிக் தொழிற்சாலையில் வேலை இருக்கிறது என்று வீட்டில் கூறியிருக்கிறார். அப்போது ``அவ்வளவு தூரம் போய் கஷ்டப்பட வேண்டுமா? இங்கேயே நல்ல வேலையாக தேடுங்களேன்” என்று கூறிய மனைவியிடம், ``நமக்கு இருக்கறது ஒத்தப்புள்ள. அதுவும் பொம்பளப் புள்ள. அது படிப்புக்கும், கல்யாணத்துக்கும் நகை சேர்க்க வேணாமா ? சீக்கிரம் நம்ம கஷ்டம் தீர்ந்துடும்” என்று கூறிவிட்டு கடந்த 2017-ம் ஆண்டு இறுதியில் சூடான் சென்றிருக்கிறார்.

விபத்து
விபத்து

இந்த நிலையில்தான் அங்கு ஏற்பட்ட தீ விபத்து ராஜசேகரின் உயிரையும், அவரது கனவையும் ஒருசேர சிதைத்துப் போட்டிருக்கிறது.

நேற்று மாலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வனை சந்தித்த ராஜசேகரின் சித்தப்பா திருநாவுக்கரசு, ``2017-ம் ஆண்டு சூடான் நாட்டில் செராமிக் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்ற என் அண்ணன் மகன் ராஜசேகர், அங்கு கியாஸ் டேங்கர் வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்ததாகக் கூறுகிறார்கள். அப்படி அவர் உயிரிழந்திருந்தால் அவரது உடலை மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மனு அளித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் பேசிய அவர், ``எவ்வளவு வேலையாக இருந்தாலும் தன் மனைவியுடன் ஒரு நாளைக்கு 5 முறையாவது ராஜசேகர் பேசிவிடுவார். வீடியோ கால் செய்து தன் மகளுடன் கொஞ்சிப் பேசி விளையாட்டு காட்டுவார். அப்படித்தான் நேற்று முன்தினம் இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு கலைசுந்தரியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார்.

செராமிக் தொழிற்சாலை
செராமிக் தொழிற்சாலை

அப்போது ராஜசேகரின் பின்னால் திடீரென்று பெரும் சத்தத்துடன் தீப்பிழம்பு ஏற்பட்டிருக்கிறது. அதில் கலைசுந்தரி அதிர்ச்சியான நிலையில் உடனே வீடியோ காலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு ராஜசேகர் செல்போனுக்கு இணைப்பு கிடைக்கவில்லை. அதையடுத்து, சூடானில் தீ விபத்து என்று செய்தியைப் பார்த்துவிட்டுத்தான் இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டோம். அங்குதான் எங்கள் மகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்கள்” என்று கண் கலங்கினார்.