Published:Updated:

தூத்துக்குடி: திடீரென முறிந்து விழுந்த காற்றாலை! - பற்றிய தீயால் கிராம மக்கள் அச்சம்

தூத்துக்குடி காற்றாலையின் காற்றுச்சுழலி திடீரென ஒடிந்து விழுந்ததில் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அந்த எதிர்பாராத விபத்து நேரத்தில் அங்கு யாரும் இல்லை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கயத்தார், கோவில்பட்டி தாலுகாக்களின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் கம்பெனிகளின் காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுவருகிறது. இந்தப் பகுதிகளில் மழையை மட்டுமே நம்பிய மானாவாரி விவசாயம் நடைபெற்றுவருகிறது. இப்பகுதி விவசாயிகள், வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்காமல் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறார்கள்.

முறிந்து விழுந்த காற்றாலை
முறிந்து விழுந்த காற்றாலை

விளைநிலங்களிலும் காற்றாலை அமைக்கப்படுவதால் விவசாயமும், கால்நடை மேய்ச்சலும் பாதிக்கப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். விளைநிலங்களில் இது போன்று காற்றாலை அமைப்பது தொடர்பாக பலமுறை விவசாயிகள் போராட்டமும் நடத்தியிருக்கிறார்கள். இருப்பினும், தனியார் கம்பெனிகளின் காற்றாலைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது.

அதேபோல, காற்றாலை அமைப்பதற்கு எதிராக அப்பகுதி மக்களின் போராட்டமும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பசுவந்தனை பகுதியில் தனியார் கம்பெனிக்குச் சொந்தமான காற்றாலைகள் இயங்கிவருகின்றன. இந்தநிலையில், திடீரென ஒரு காற்றாலையில் மூன்று இறக்கைகளும் முன்புறமாக ஒடிந்து கவிழ்ந்து விழுந்தன. பலத்த சத்தத்துடன் தீ பரவி, புகை மூட்டமானது. இதையடுத்து அப்பகுதி மக்கள், தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்தனர். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டுள்ளது. அதிக மின்கசிவு ஏற்பட்டதால், காற்றாலையின் இறக்கைப் பகுதி உடைந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

முறிந்து விழுந்த காற்றாலை
முறிந்து விழுந்த காற்றாலை

திடீரென காற்றாலை முறிந்து விழுந்து தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். காற்றாலை தீ விபத்து குறித்து அவர்களிடம் பேசினோம். ``எங்க கிராமம் முழுவதுமே மானாவாரி விவசாயத்தை நம்பித்தான் இருக்கோம். இந்த விளைநிலத்துல தொடர்ந்து காற்றாலைகளைவெச்சுக்கிட்டு வர்றாங்க. இதனால விவசாயம் செய்ய முடியலை. இந்தக் காற்றாலை மின்விசிறியால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Vikatan

இதிலிருந்து வெளியாகும் சத்தத்துல பெரும் இரைச்சலும், அதனால காதுவலியையும் ஏற்படுது. காற்றாலைப் பகுதியில ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கும் பத்திக்கிட்டுப் போக முடியலை. இதுபோல இன்னும் நிறைய பாதிப்புகள் இருக்கு. அதனாலதான், காற்றாலைகள் அமைக்கக் கூடாதுன்னு ஊரு மக்கள் ஒண்ணாச் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிச்சு போராட்டம் நடத்திக்கிட்டு வர்றோம்.

முறிந்து விழுந்த காற்றாலை
முறிந்து விழுந்த காற்றாலை

அந்தக் காற்றாலை ஒடிஞ்சு விழுந்த சத்தமும், அதனால வெளியான தீக் கருகலும் பார்க்கவே பயங்கரமா இருந்துச்சு. தீ விபத்து நடந்த இடத்துக்குப் பக்கத்துலயே வீடுகள் இருக்கு. நல்லவேளையா குடியிருப்புப் பகுதியில எந்தச் சேதாரமும் இல்லை. வழக்கமா அந்தப் பகுதியில ஆடு, மாடு மேய்ச்சுட்டுப் போவாங்க. நல்லவேளையா அந்தப் பக்கம் ஆடு, மாடுங்க எதுவும் மேயாததுனால அந்த வாயில்லா ஜீவன்களோட உசுரும் தப்பிச்சுது. அரசு அதிகாரிங்க இனிமேலாவது இந்த மாதிரி காற்றாலைகளைச் செயல்பட அனுமதிக்கக் கூடாது” என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு