Published:Updated:

`வேலை இருக்குன்னு எங்களை விட்டுட்டுப் போனார்!’ -மேட்டுப்பாளையம் சம்பவத்தால் நிர்கதியான குடும்பம்

குருசாமியின் மனைவி சுதா
குருசாமியின் மனைவி சுதா

மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டைச் சுற்றி 10 அடிக்குக் கருங்கற்களாலான சுற்றுச்சுவரை சிவசுப்பிரமணியம் கட்டியிருந்தார். இதை, 15 அடியாக உயர்த்தியுள்ளார். அவரது வீட்டிலிருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வந்துள்ளனர்.

குவிக்கப்பட்ட போலீஸ்
குவிக்கப்பட்ட போலீஸ்

இந்நிலையில், நேற்று அதிகாலை சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், மூன்று வீடுகளில் குடியிருந்த நான்கு குடும்பத்தினர் மற்றும் அவர்களின் உறவினர் என 17 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையே, ``17 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான சிவசுப்பிரமணியத்தை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும்.

`15 பேர் மரணத்துக்குக் காரணமான 80 அடிநீள சுற்றுச் சுவர்!’- அதிர்ச்சி விலகாத மேட்டுப்பாளையம்

இறந்த 17 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்" என்று உயிரிழந்தவர்களின் உறவினர்களும் அந்தப் பகுதி மக்களும் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கூட்டம் கலைந்த பிறகு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் கையொப்பம் வாங்கி சடலங்கள் ஒப்படைக்கப்பட்டு அனைத்துச் சடலங்களும் ஒரே இடத்தில் எரியூட்டப்பட்டன.

இறந்த குருசாமி
இறந்த குருசாமி

இதற்கிடையே, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த 17 பேரில் ஒருவர் குருசாமி. பெயின்டரான இவரின் சொந்த ஊர் அன்னூர் அருகே உள்ள காரைப்புதூர். திருமணம் முடிந்து ஒரு மகன், மகள் ஆகியோருடன் மேட்டுப்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். இவர், சம்பவம் நடப்பதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் சிறுமுகை அருகில் உள்ள ஆலாங்கொம்பு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்குக் குடும்பத்துடன் சென்றுள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மேட்டுப்பாளையத்துக்கு வந்துள்ளனர்.

`மழையில் நனைந்த சடலங்கள்; போராடியவர்கள் மீது தடியடி!' - மேட்டுப்பாளையம் பரபர

ஆனால், உறவினர்கள் ஆலாங்கொம்பிலேயே இருக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மனைவி, குழந்தைகளை மட்டும் அங்கே விட்டுவிட்டு தனக்கு வேலை இருக்கிறது என்றுகூறி குருசாமி மட்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்டுப்பாளையம் திரும்பியுள்ளார்.

இந்நிலையில், வீட்டில் தனியாகத் தூங்கிக்கொண்டிருக்கும்போது சுவர் இடிந்துவிழ குருசாமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரின் உயிரிழப்பால் அவரின் மனைவி, குழந்தைகள் தற்போது நிர்கதியாக நிற்கின்றனர். இதுதொடர்பாகப் பேசியுள்ள குருசாமியின் மனைவி சுதா, ``நாங்க இந்த ஊருக்கு வந்ததே என் கணவரை நம்பித்தான்.

குருசாமியின் குழந்தைகள்
குருசாமியின் குழந்தைகள்

இந்தச் சம்பவத்தால் நடுத்தெருவில் நிக்கறோம். கணவரை நம்பித்தான் இரண்டு குழந்தைகளுடன் இருந்தேன். இப்ப என்ன பண்ணுவதெனத் தெரியலை. தங்கறதுக்குக்கூட இடமில்லாமல் இருக்கோம். ஆதார் கார்டுல இருந்து அத்தனையும் போயிடுச்சு. மாத்துத் துணிகூட இல்லாம பக்கத்துவீட்டுக் குழந்தைகளோட துணியை வாங்கித்தான் குழந்தைகளுக்குக் கொடுத்துருக்கேன் " எனக் கதறி அழுதார். அருகில் இருந்த குழந்தைகளும் அப்பா, அப்பா என தந்தையை நினைத்துக்கொண்டு அழுத காட்சி வேதனையாக இருந்தது.

தந்தை உயிரிழந்தது குறித்துப் பேசிய குருசாமியின் மகள், ``எனக்கு புத்தகம், நோட்டு மட்டும் தந்தீங்கனாபோதும், நான் எங்க அம்மாவ காப்பாத்தி விட்ருவேன். எங்க அப்பாதான் மேல போய்ட்டாங்க" எனக் கூறி அழுதது பார்ப்போரைக் கலங்க வைத்தது.

17 பேர் இறப்புக்குக் காரணமான சுவருக்குச் சொந்தக்காரரான சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்ரமணியத்தைக் கைது செய்துள்ளது மேட்டுப்பாளையம் போலீஸ்.

மேட்டுப்பாளையம் ஆணவக் கொலையும்...நாம் பேசமறுப்பதும்...! - தீர்வு என்ன?
பின் செல்ல