தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை(சி.ஆர்.பி.எஃப்) வீரரான எம்.என்.மணி, காஷ்மீரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த 38 வயதான எம்.என். மணி, ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அதிகாரியாக பணியாற்றி வந்தார். நேற்று பணி முடித்துவிட்டு சக அதிகாரிகளுடன் மணி சென்ற வாகனம், ஹைடர்போரா சாலையில் எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மோதலிலிருந்து தப்பிக்க முயன்ற போது நிலைதடுமாறி பெட்ரோல் நிலைய சுவரில் மோதியது. இதில் ரத்தக்காயங்களுடன் படுகாயமடைந்த மணி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் உயிரிழந்த மணிக்கு, சி.ஆர்.பி.எஃப் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது சாலை விபத்தா? அல்லது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட செயலா? என்பது குறித்து விசாரித்து வருவதாக சி.ஆர்.பி.எஃப் கூறியுள்ளது. மேலும், மணியின் உடலை தமிழகம் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளும் நடந்து வருவதாக சி.ஆர்.பி.எஃப் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் மேலும் 2 பேர் பலத்த காயங்களுடனும், 7 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.