Published:Updated:

`எதுக்குப்பா இவ்வளவு வேகமா போற..?' - மதுபோதையால் மகன் கண்முன்னே தந்தைக்கு ஏற்பட்ட சோகம்

விபத்தில்  இறந்த ரவிச்சந்திரன்
விபத்தில் இறந்த ரவிச்சந்திரன்

`மது போதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் கார், டூவீலர் என இரண்டுமே பலத்த சேதமடைந்தன. அப்படியென்றால் வண்டியை ஓட்டியவருக்கு எப்படி அடிபட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை’.

தஞ்சாவூர் அருகே மதுபோதையில் இருந்த தந்தை டூவீலரில் தனது மகனை அழைத்துக்கொண்டு சென்றபோது ஏற்பட்ட விபத்தில் மகன் கண்முன்னே இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் வரும் காட்சிகளை விஞ்சும் அளவுக்கு இந்த விபத்து இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

Vikatan

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மன்பேட்டை கிராமம் வாணியர் தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மற்றும் மண்பானை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவரது மகன் சந்தோஷ் (19). டூவீலர் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் ரவிச்சந்திரன் தனது இரண்டு சக்கர வாகனத்தில் பள்ளியக்கிரஹாரம் பைபாஸ் சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்று மது குடித்துள்ளார். பின்னர் மதுபோதையிலேயே ஹோட்டலுக்குச் சென்று மீன் குழம்பு, சிக்கன் 65 போன்றவற்றை வாங்கிக்கொண்டு வேலைக்குச் சென்றிருந்த தனது மகனை அழைத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பியுள்ளார்.

ரவிச்சந்திரன் போதையில் இருந்ததால் வண்டியை வேகமாக ஓட்டியுள்ளார். `அப்பா கொஞ்சம் மெதுவாகவே போ' என சந்தோஷ் கூறியிருக்கிறார். இந்தநிலையில் மனக்கரம்பை என்ற இடத்தில் நிலைதடுமாறிய ரவிச்சந்திரன் எதிரே வந்த கார் மீது மோதினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். இதில் ரவிச்சந்திரன் இறந்துவிட அவரது மகன் சந்தோஷ் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சையில் இருக்கிறார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சேதமடைந்த கார்
சேதமடைந்த கார்

இந்தச் சம்பவம் குறித்து விபத்தை நேரில் பார்த்த சிலரிடம் பேசினோம். `` ரவிச்சந்திரன் படு ஸ்பீடாக வண்டியை ஓட்டி வர, அவரது மகன் சந்தோஷ், மெதுவா போ எனக் கூறிக்கொண்டே வந்துள்ளார். ஆனால் அவர் போதையில் இருந்ததால் மகன் சொல்வது அவர் காதில் கேட்கவே இல்லை. இந்த நிலையில் எதிரே வந்த கார் மீது ரவிச்சந்திரன் ஓட்டிச் சென்ற டூவீலர் வேகமாக மோதியது. இதில் ரவிச்சந்திரன் பாய்ந்து சென்று காரின் முன்பக்கம் உள்ள கண்ணாடியை உடைத்துக்கொண்டு விழுந்தார்.

சந்தோஷ் காரின் மேல் பகுதிக்குத் தூக்கி வீசப்பட்டார் கிட்டத்தட்ட சினிமாவில் வரும் காட்சிகளையே விஞ்சும் அளவுக்கு இந்த விபத்து நடந்தது. ரவிச்சந்திரன் வாங்கி வந்த மீன் குழம்பு, சிக்கன் 65 சாலையில் சிதறிக் கிடந்தது. இதில் இரண்டு பேருக்குமே பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால் ரவிச்சந்திரன் உயிரிழந்தார். காரின் மேல் பகுதியில் கிடந்த சந்தோஷ், `மெதுவா போ மெதுவா போ எனச் சொன்னதைக் கேட்காமல் போனீயே. ஆசையா வாங்கின சாப்பாட்டைக்கூட சாப்பிடாம போயிட்டீயே' எனக் கதறியது அருகில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

டூவீலர்
டூவீலர்

மது போதையினால்தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் கார், டூவீலர் என இரண்டுமே பலத்த சேதமடைந்தன. அப்படியென்றால் வண்டியை ஓட்டியவருக்கு எப்படி அடிபட்டிருக்கும் என நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோது இதுபோன்ற விபத்துகள் நடக்கவில்லை. மதுக்கடைகளைத் திறந்த பிறகு விபத்து நடப்பதுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருவது வேதனையை அளிக்கிறது" என்றனர் சோகத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு