Published:Updated:

`என் மகளுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்கக் கூடாது..ப்ளீஸ்!' - அழுதபடி அரசிற்கு கோரிக்கை வைக்கும் தந்தை

டாஸ்மாக் கடையால் ஏற்பட்ட விபத்து மகளின் உயிரை காக்க போராடும் தந்தை...

அப்ரா பாத்திமா
அப்ரா பாத்திமா

தஞ்சை மாவட்டம் மல்லிபட்டினத்தில் மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மதியம் சாப்பிடுவதற்கு வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்த நபர், அந்த பள்ளி மாணவி மீது மோதியிருக்கிறார். இதில் மாணவிக்கு தலையில் பலத்த அடிபட்டு சுயநினைவை இழக்கும் அளவிற்கு சென்று விட, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவியின் ஏழை தந்தை, தன் மகளின் உயிரை காக்க போராடி வருகிறார். இந்தநிலையிலும் என் பொண்ணுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்க கூடாது, உடனே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கெஞ்சியபடி அரசுக்கு அவர் கோரிக்கை வைக்கிறார்

சிக்கிசையில் அப்ரா பாத்திமா
சிக்கிசையில் அப்ரா பாத்திமா

பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் இவர் எலக்ட்ரீசன் கூலி தொழிலாளியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மகள் அப்ரா பாத்திமா, அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த புதன்கிழமை பள்ளிக்கு சென்ற அப்ரா, மதியம் தன் அண்ணனுடன் வீட்டிற்கு சாப்பிடச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு டூவிலரில் அதிவேகத்தில் வந்த போதை ஆசாமி, சாலையில் ஓரத்தில் வந்து கொண்டிருந்த அப்ரா மீது மோதியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்ட அப்ராவின் தலையில் பலமாக அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே அப்பகுதியில் இருந்தவர்கள் திரண்டு அப்ராவின் நிலையை கண்டு ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்து விட்டு பதறி துடித்தனர்.

இதற்கிடையில் நேரம் ஆச்சே இன்னும் மகள் சாப்பிட வரவில்லையே என்ன ஆச்சுன்னு தெரியலையே என படபடப்புடன் அவர் அம்மா சரபுநிஷா காத்திருந்தார். அப்போது மூச்சிறைக்க ஓடிவந்த அவரது மகன், `அம்மா பாப்பா மேல் பைக் மோதிவிட்டது. தலையெல்லாம் ஒரே ரத்தம்மா.. சீக்கிரம் வாம்மா' என அழுது கொண்டே கூறியிருக்கிறான். மகளின் நிலைகேட்டு பதறிய நிஷா, சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார். பின்னர், அங்கு இருந்தவர்கள் மாணவியின் அப்பாவிற்கும் தகவல் கொடுத்துள்ளனர்.

அபரா பாத்திமா
அபரா பாத்திமா

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் தன் மகளின் நிலையைப் பார்த்து கதறியது, அனைவரையும் கலங்க செய்தது. `அப்பா போயிட்டு வரேன் என டாட்டா காட்டி விட்டு பூ போல் பள்ளிக்கு சென்றவள், இப்படிக் கிடக்கிறாளே என கலங்கி துடித்த அந்த தந்தையை தேற்றுவதற்கு யாருக்கும் தைரியம் இல்லை. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிறுமியைக் சென்றனர். அங்கு அப்ராவை பரிசோதித்த டாக்டர்கள், `இதயதுடிப்பு குறைஞ்சுகிட்டே இருக்கு, உடனே தஞ்சாவூருக்கு அழைத்து செல்லுங்கள்' என கூற உடனே கிளம்பிய அவர்கள் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தன் மகளைச் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். ஏற்கெனவே வறுமையில் போராடிய அப்துல் ரஹ்மான், தற்போது தன் மகளை உயிரோடு மீட்கவும் போராடிக் கொண்டிருக்கிறார்.

இது குறித்து அப்துல்ரஹ்மானிடம் பேசினோம். ``நான் எலக்டீரிசியன் வேலை பார்த்துவருகிறேன். எனக்கு மூன்று பிள்ளைகள். அனைவருமே அரசு பள்ளியில் தான் படிக்கிறார்கள். எனக்கு தொடர்ந்து வேலை இருக்காது என்பதால் வறுமையின் பிடியில்தான் குடும்பம் இருக்கிறது. இந்தநிலையில் அளவிற்கு அதிகமாக மது குடித்துவிட்டு டூவிலரில் வந்த மாரிமுத்து என்பவர் என் மகள் மீது மோதிவிட்டார். இதில் தலையில் பலத்த அடிபட்டு என் மகளுக்கு மூளையில் எலும்பு குத்தி சுயநினைவு இல்லாத நிலைக்கு சென்று விட்டார். அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைத்து என் தகுதிக்கு மீறி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறேன்.

விபத்தை அருகில் இருந்து பார்த்தவர்கள் என் நிலையை உணர்ந்து சமூக வலைதளங்களில் உதவி கேட்டு பதிவிட்டனர் இதனை படித்த ஈரமனம் படைத்த பல்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அதை வைத்து சிகிச்சை அளித்து வருகிறேன். பொண்ணு மீண்டுவருவதற்கு பெரிய தொகை செலவாகும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். எப்படியாவது அந்த பணம் கிடைக்கும் என என் மகள் அருகிலேயே கிடக்கிறேன்.

அப்துல் ரஹ்மான்
அப்துல் ரஹ்மான்

மல்லிபட்டினத்தில் இருந்து இரண்டாம்புலிக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள அந்த டாஸ்மாக் கடையால் ஏகப்பட்ட விபத்து நடக்கிறது. என் பிள்ளை படிக்கிற பள்ளியிலேயே இதுவரை 4 பேருக்கு குடித்து விட்டு வருபவர்களால் விபத்து ஏற்பட்டு அடிபட்டிருக்கின்றனர். ஆனால் அந்த கடையை அகற்ற அரசு முன் வரவில்லை. இந்த விபத்தை நேரில் பார்த்த என் மகனும் இதனால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மீளாமல் அப்ராவை பார்த்தப்படியே இருக்கிறான். `நான் நல்லா படிச்சு வேலைக்கு போய் உன்னை கஷ்டபடாம பார்த்துக்குவேன்' என என் மகள் அடிக்கடி சொல்லுவாள். ஆனா, இப்ப கண் திறக்காம அப்படியே அசைவற்று கிடக்கா. அவ மீண்டு வரணும். என் பொண்ணுக்கு நடந்தது இனி யாருக்கும் நடக்க கூடாது. ப்ளீஸ் உடனே அந்த டாஸ்மாக் கடையை அகற்றி விடுங்கள்'' என அரசிற்கு அழுதபடியே கோரிக்கை வைக்கிறார்.