Published:Updated:

“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு

தேர்த்திருவிழா விபத்து
பிரீமியம் ஸ்டோரி
தேர்த்திருவிழா விபத்து

தேர் தீப்பிடிச்சு எரியுறதா நெனச்சு, ஊருக்குள்ள இருந்த எல்லாரும் ஓடி வந்தாங்க. யாருக்கும் கரண்ட் ஷாக் அடிக்கிறது தெரியலை.

“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு

தேர் தீப்பிடிச்சு எரியுறதா நெனச்சு, ஊருக்குள்ள இருந்த எல்லாரும் ஓடி வந்தாங்க. யாருக்கும் கரண்ட் ஷாக் அடிக்கிறது தெரியலை.

Published:Updated:
தேர்த்திருவிழா விபத்து
பிரீமியம் ஸ்டோரி
தேர்த்திருவிழா விபத்து

ஒரு சில மரணங்கள் வரலாற்றில் ஆறாத வடுக்களாகத் தங்கிவிடும். அப்படித்தான் தஞ்சை அருகேயுள்ள களிமேடு தேர்த்திருவிழா விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் மரணமும்.

“ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அப்பர் பிறந்த சதய நட்சத்திர தினத்தில், அப்பர் சதய விழாவைக் கொண்டாடிவந்தோம். தேவாரம் பாடி அப்பருக்குச் சிறப்பு பூஜை செய்வதுடன் தொடங்கும் விழா, அன்னம் பாலிப்பு என்ற பெயரில் அன்னதானம், மாலை ஆன்மிகச் சொற்பொழிவு என ஒவ்வொரு நிகழ்வும் உற்சாகமாக நடைபெறும். இந்தமுறையோ உற்சாகத்தில் தொடங்கி சோகத்தில் முடிந்திருக்கிறது” என்று கண்கலங்குகிறார், களிமேட்டைச் சேர்ந்த முனைவர் மணி.மாறன்.

“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு
“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு


மின்வாரியத்தில் ஒப்பந்தப் பணியாளராக இருக்கும் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானம், “எங்கள் ஊரிலேயே ஏழு பேருக்கு மேல் மின்சார வாரியத்தில் வேலை செய்றோம். தேர், ஊர் சுத்தி வந்து அப்பர் மண்டபத்தை அடையப்போற நேரத்துல வீட்டுக்குப் போயிட்டோம். அடுத்த சில நிமிடத்திலேயே ஐயோன்னு அலறல் சத்தம் கேட்டது. பக்கத்துலயே எங்கள் வீடு இருந்ததால் உடனே ஓடினேன். தேர்ச் சக்கரம் பள்ளத்தில் இறங்கியதுல, உயர் மின் அழுத்தக் கம்பியில தேரின் மேல் பகுதி உரசி மின்சாரம் பாய்ஞ்சிருக்கு. தேருக்குள்ள இருந்தவங்க, சின்னப்பசங்க எல்லாரும் தூக்கி வீசப்பட்டுக் கிடந்தாங்க. தேர் தீப்பிடிச்சு மளமளவென எரிய ஆரம்பிச்சது. தண்ணிய ஊத்தி ஈரமாக்குனதுல தேரைச் சுத்தி 20 அடிக்கு ரோட்டுலயும் மின்சாரம் பாய்ஞ்சிருந்தது. அந்த இடத்துல கால் வெச்ச உடனேயே நான் தூக்கி வீசப்பட்டேன்.

தேர் தீப்பிடிச்சு எரியுறதா நெனச்சு, ஊருக்குள்ள இருந்த எல்லாரும் ஓடி வந்தாங்க. யாருக்கும் கரண்ட் ஷாக் அடிக்கிறது தெரியலை. தேருக்குப் பக்கத்துல போனா என்னாகுமோன்னு பதறிய நான், பள்ளத்துக்குள்ள இருந்து எழுந்திரிச்சு, ‘யாரும் கிட்ட போகாதீங்க’ன்னு கத்தி, தடுத்து நிறுத்தினேன். இல்லைன்னா, நெனச்சுப் பார்க்கவே முடியாத அளவுக்கு பெரிய விபரீதம் நடந்திருக்கும். பலி எண்ணிக்கை கூடியிருக்கும்’’ என்றவரின் குரலில் அதிர்ச்சி இன்னும் விலகவில்லை.

“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு
“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு

உயிரிழந்த சிறுவன் ராஜ்குமாரின் அப்பா முருகேசனும், அவரின் தாய்மாமா சாமிநாதனும் அருகருகே வீடுகளில் வசித்துவருகின்றனர். இரண்டு அடி இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், இரண்டு குடும்பங்களுக்கும் கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை இல்லை. தேருக்குப் பக்கத்தில் அடிபட்டு விழுந்த ராஜ்குமார், தூரத்தில் நிற்கும் சாமிநாதனைப் பார்த்து, ‘‘மாமா காப்பாத்துங்க’’ என்று அலறியிருக்கிறான். பகைக்கு முன் பாசம் ஜெயிக்க... ஆபத்தை உணராமல் அவனைத் தூக்குவதற்கு ஓடிப் போயிருக்கிறார் சாமிநாதன். இதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.

ரேணுகா, சடலமாகக் கிடந்த தன் மகன் சந்தோஷ் உடலை மடியில் போட்டுக்கொண்டு, ‘`உங்க அப்பா செத்து ஒரு வருஷம்கூட ஆகலை. உனக்காத்தானே நான் உசுர கையில பிடிச்சிக்கிட்டு இருந்தேன். ‘நான் படிச்சு வேலைக்குப் போய் தார்பாய் போட்டு மூடியிருக்குற சின்னக் குடிசை வீட்டை இடிச்சுட்டு, மாடி வீடு கட்டித் தரேன்’னு அடிக்கடி சொல்லுவியேப்பா, என்ன நல்லா பார்த்துக்குவேன்னு சொல்லுவியே... இப்ப பேச்சு மூச்சு இல்லாம மடியில கிடக்குறியே... கொஞ்ச நேரம்கூட என்னைப் பிரியாம அம்மா அம்மான்னு சுத்தி வருவியே... என்ன விட்டுட்டுப் போக எப்படிடா உனக்கு மனசு வந்தது’’ எனக் கதறியது பலரையும் துடிக்கச் செய்தது.

“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு
“உறவுகளை இழந்துட்டோமே!” - கலங்கும் களிமேடு

மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் இருக்கும் நித்திஷ் என்ற சிறுவன், ‘‘நானும் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் தேர் பின்னாடி நடந்தோம். அப்ப யாரோ ஓங்கி அடிக்குற மாதிரி இருந்துச்சு. அப்படியே மூணு பேருமே மேலே பறந்து கீழே விழுந்தோம். அப்புறம் என்ன நடந்துச்சுனே தெரியலை. கண் முழிச்சுப் பார்த்தப்ப ஆஸ்பத்திரிப் படுக்கையில இருந்தேன். என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேரும் செத்துட்டாங்கன்னு அம்மா சொன்னாங்க” என்று சொல்லும்போதே உடல் நடுங்குகிறது.

பெயரில் மகிழ்ச்சியைக் கொண்டுள்ள அந்த ஊர் இப்போது மகிழ்ச்சியைத் தொலைத்து சோகத்தில் மூழ்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism