Published:Updated:

`பூஜை புகையால் வட்டமடித்த மலைத் தேனீக்கள்'- அணை திறப்பு சம்பவத்தில் அதிகாரிகளுக்கு நேர்ந்த துயரம்!

திண்டுக்கல்லில் அணை திறப்பதற்காக நடந்த பூஜையில் மலைத் தேனீக்கள் கொட்டி, அதிகாரிகள், விவசாயிகள், செய்தியாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

மருதா நதி அனை
மருதா நதி அனை

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது அய்யம்பாளையம். இங்கு மருதா நதி அணை உள்ளது. இந்த அணை பாசனத்துக்காக நேற்று காலை திறப்பதாக அரசு அறிவித்தது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல்ல் சீனிவாசன் தலைமையில் காலை அணை திறப்பதற்கான ஏற்பாடுகளைப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில், அயோத்தி தீர்ப்பு காரணமாக அமைச்சர் நேற்றைய நிகழ்ச்சிகள் முழுவதையும் ரத்து செய்துவிட்டார்.

தேனீ தாக்குதல்
தேனீ தாக்குதல்

இதனால் ஆட்சியரும் விழாவில் கலந்துகொள்ளவில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளையே திறக்க அனுமதி கொடுத்தார்கள். இந்த நிலையில், காலையில் அணை திறப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர்.

அணை திறப்பதற்கான பூஜை ஏற்பாடுகள் தொடங்கின. அப்போது ஊழியர் ஒருவர் சாம்பிராணி கொளுத்தினார். அதிலிருந்து கிளம்பிய புகை, அந்தப் பகுதியில் பரவத் தொடங்கியது. அது தேனீக்கள் கூட்டைக் கலைத்துவிட்டது.

தேனீ கொட்டியவருக்கு முதலுதவி
தேனீ கொட்டியவருக்கு முதலுதவி

மலைத்தேனீக்கள் படையாகக் கிளம்பி, அந்தப் பகுதியில் வட்டமடிக்கத் தொடங்கின. சற்று நேரத்தில் அங்கிருந்த அனைவரையும் கொட்டத் தொடங்கின. இதனால் அங்கு கூச்சலும், பதற்றமும் நிலவியது. தேனீக்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்தவர்கள் தலைதெறிக்க ஓடத் தொடங்கினார்கள். ஆனாலும், தேனீக்கள் விடாமல் துரத்தின.

அணை காவலாளி பாண்டியைச் சுற்றிக்கொண்ட தேனீக்கள் கடுமையாகக் கொட்டின. இதனால் மயக்கமடைந்த அவர் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுந்தரப்பன், உதவி செயற்பொறியாளர் சௌந்தரம், உதவிப் பொறியாளர் மோகன்தாஸ் மற்றும் விவசாயிகள் செய்தியாளர்கள் உட்பட 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மருதா நதி அணை
மருதா நதி அணை

அந்தப் பகுதியில் திடீரென மழையும் பெய்ததால் காயம்பட்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தேனீக்கள் கொட்டியதில் செய்தியாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். அணை திறப்பதற்கு முன்பே தேன்கூடு இருப்பதைப் பார்த்து, கவனமாக இருந்திருந்தால், இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது என விவசாயிகள் குற்றம்சாட்டினார். தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு, தேனீக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பிறகு அணை திறக்கப்படும் எனப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர்.