Published:Updated:

5-வது மாடியிலிருந்து தவறிவிழுந்த 8 மாதக் குழந்தை! -டூவிலர் மீது விழுந்ததால் தப்பித்த அதிசயம்

சென்னையில் 5-வது மாடியிலிருந்து தவறிவிழுந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தது. தற்போது அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

குழந்தை
குழந்தை

சென்னை சௌகார்பேட்டை தங்கச் சாலையில் 6 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்தக் குடியிருப்பின் 5-வது மாடியில் வசித்துவரும் உறவினர் வீட்டுக்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மேபால் என்பவர் மனைவி நீலம் மற்றும் 8 மாதக் குழந்தை தினிஷா ஆகியோருடன் வந்துள்ளார்.

கடந்த 9-ம் தேதி நீலம் சமையலறையில் இருந்தார். குழந்தை தினிஷா படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்துக்குப் பிறகு குழந்தை தினிஷா, தவழ்ந்தபடி பால்கனி பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்பு
அடுக்குமாடி குடியிருப்பு

அப்போதுதான் அந்த விபரீத சம்பவம் நிகழ்ந்தது. பாதுகாப்புக்கருதி பால்கனி பகுதி இரும்புக் கம்பியால் அடைக்கப்பட்டிருந்தது. அதன் கதவு திறந்து கிடந்ததால் தினிஷா தவறி கீழேவிழுந்தார். குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஆட்டோ டிரைவர் ஒருவர் அங்கு வந்தார். உடனடியாக அவர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு தினிஷாவை பரிசோதித்த டாக்டர்கள், 5-வது மாடியிலிருந்து விழுந்ததால் இடது கால், கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். டாக்டர்கள் அளித்த சிகிச்சை காரணமாக அவர் உயிர் பிழைத்துக்கொண்டார். 5-வது மாடியிலிருந்து விழுந்த குழந்தை உயிர்பிழைத்த சம்பவம் சௌகார்பேட்டை பகுதியில் ஆச்சர்யமாக பேசப்பட்டு வருகிறது.

அடுக்குமாடி குடியிருப்புக்கள்
அடுக்குமாடி குடியிருப்புக்கள்

இதுகுறித்து யானைக்கவுனி போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸார், `` கடந்த 9-ம் தேதி காலை 10.30 மணியளவில் தினிஷா பால்கனியிலிருந்து தவறி விழுந்துள்ளார். 50 அடி உயரத்திலிருந்து விழுந்த தினிஷா, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் சீட்டின் மேல் விழுந்து அதன்பிறகு தரைக்கு வந்துள்ளார். இதனால்தான் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார்.

குழந்தை விழுந்ததும் உடனடியாக அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 30 நிமிடத்துக்குள் குழந்தைக்குத் தேவையான மருத்துவ உதவிகள் கிடைத்ததால் அவர் பிழைத்துக்கொண்டார்" என்கின்றனர்.