Published:Updated:

படகில் மோதிய கப்பல்: ``இன்னும் 12 பேர் கடல்ல கிடக்கிறாங்கன்னு கதறினேன்!’’ - விவரிக்கும் மீனவர்

கப்பல் விபத்தில் உயிர் தப்பிய வேல் முருகன்
News
கப்பல் விபத்தில் உயிர் தப்பிய வேல் முருகன்

``கேனைப் பிடிச்சு நீச்சல் அடிச்சுக்கிட்டே மழையில நனைஞ்சோம். கப்பல்காரங்க திரும்பி வந்து லைட்டைப் போட்டாங்க. நான் கவிழ்ந்து கிடக்கிற போட்டுக்கு மேல ஏறி நின்னுக்கிட்டு கேனைத் தூக்கிப்போட்டு சிக்னல் கொடுத்தேன்’’ என்கிறார் விபத்தில் உயிர் தப்பிய வேல் முருகன்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறைமுகத்தெருவைவ் சேர்ந்த ஹென்லின் அலெக்சாண்டர் (38), அவரின் மாமானார் தாசன் (60), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், பழனி, பாலமுருகன், மாணிக்கம், தூத்துக்குடியைச் சேர்ந்த டென்சன் மற்றும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் என மொத்தம் 14 பேர் கேரள மாநிலம், வேப்பூரைச் சேர்ந்த ஜாபர் என்பவரின் விசைப்படகில் கடந்த 11-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர்.

கடந்த 12-ம் தேதி நள்ளிரவு கர்நாடகா மாநிலம், மங்களூரிலிருந்து 55 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் சிங்கப்பூர் சரக்குக் கப்பல் ஒன்று இந்த விசைப்படகு மீது மோதியது. இதில் அனைத்து மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களில் ராமநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்காளத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். குளச்சலை சேர்ந்த ஹென்லின் அலெக்சாண்டர், தாசன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மாணிக்தாஸ் ஆகியோர் பலியாயினர். அவர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமான ஒன்பது மீனவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது.

இந்தநிலையில், குளச்சல் மீனவர்கள் ஹென்லின் அலெக்சாண்டர், தாசன் ஆகியோரின் உடல்கள் மங்களூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இன்று காலை இருவரது உடல்களும் குளச்சல் வந்தடைந்தன. பின்னர் குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலயத்தில் திருப்பலியுடன் அவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

கப்பல் விபத்தில் இறந்த தாசன், ஹென்லின் அலெக்சாண்டர்.
கப்பல் விபத்தில் இறந்த தாசன், ஹென்லின் அலெக்சாண்டர்.

ஹென்லின் அலெக்சாண்டருக்கு சுமதி (32) என்ற மனைவியும், இரண்டு ஆண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். சுமதியின் தந்தைதான் தாசன். சுமதி தந்தையையும் கணவரையும் இழந்த சோகத்தில் கதறி அழுதார். ஹென்லின் அலெக்சாண்டருக்கு வரும் மே 2-ம் தேதி பிறந்தநாள். `மே 2-ம் தேதி பிறந்தநாளைக் கொண்டாடுவதா அல்லது இறந்தநாளைக் கொண்டாடுவதா... சொல்லிவிட்டுப் போங்க’ என உடலைப் பார்த்து சுமதி கதறி அழுதது அனைவைரையும் கலங்கவைத்தது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தநிலையில் படகிலிருந்து உயிர் தப்பிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த வேல் முருகனைச் சந்தித்துப் பேசினோம். ``என் மனைவி இறந்து மூணு வருஷம் ஆச்சுது. சின்னப் பிள்ளைக்கு காதுகுத்துக்கு பத்திரிகைவெச்சுட்டு வந்த சமயத்துல விபத்துல இறந்துட்டாங்க. நாலு பிள்ளைங்களை நான்தான் வேலை செஞ்சு காப்பாத்துறேன். நான் இதுக்கு முன்னாடி முனம்பம் துறைமுகத்திலிருந்து மீன்பிடித் தொழிலுக்குப் போனேன். வேப்பூர்ல இருந்து இப்போதுதான் முதல்ல மீன்பிடிக்கப் போனேன். ராமநாதபுரம் மாவட்டத்துலருந்து நான், என் மாமா பழனி, சித்தப்பா பாலமுருகன், தம்பி மாணிக்கம் என நான்கு பேர் கடந்த 9-ம் தேதி ராமநாதபுரத்துல பஸ் ஏறி குளச்சல் வந்தோம். மணப்பாடு டென்சன் அண்ணனும் வந்திருந்தார்.

கப்பல் மோதி கவிழ்ந்த படகு
கப்பல் மோதி கவிழ்ந்த படகு

எங்க ஸ்ராங்கு (படகு ஓட்டுபவர்) அலெக்ஸாண்டர். அவரோட மாமா தாசன் எல்லாருமா சேர்ந்து வண்டி பிடிச்சு கேரள மாநிலம் வேப்பூர் போனோம். அங்கே இருந்து 11-ம் தேதி நைட்டு 10 மணிக்கு விசைப்படகில் மீன்பிடித் தொழிலுக்குப் போனோம். மறுநாள் 12-ம் தேதி நைட்டு ஒரு 11:30 மணி இருக்கும். ஒரே மழையும் காத்துமா இருந்தது. கடல் அலை நாலு அடி உயரத்துக்கு வந்தது. மழையால முன்னாடி போன போட்டு தெரியல. எங்க படகுல லைட்டு போட்டிருந்தோம். ஆனா கப்பல்ல லைட்டு போட்டிருந்தாங்களான்னு தெரியலை. அந்த அந்தச் சமயத்தில வந்த கப்பல்ல ரெண்டு லைட்டுதான் போட்டிருந்தாங்கன்னு நினைக்கிறேன். திடீர்னு கப்பல் இடிச்சு விட்டுது. நான் கேன்களைப் பிடிச்சுக்கிட்டு ஒருவழியா கடல்ல மிதந்தேன். என் கூட மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுனில்தாஸும் கேனைப் பிடிச்சுக்கிட்டு மிதந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேனைப் பிடிச்சு நீச்சல் அடிச்சுக்கிட்டே மழையில நனைஞ்சோம். கப்பல்காரங்க திரும்பி வந்து லைட்லைப் போட்டாங்க. நான் கவிழ்ந்து கிடக்கிற போட்டுக்கு மேல ஏறி நின்னுக்கிட்டு கேனைத் தூக்கிப்போட்டு சிக்னல் கொடுத்தேன். அவங்க எங்களை நோக்கி லைட் அடிச்சாங்க. வலை போன்ற உபகரணங்கள் படகைச் சுற்றி மிதந்துகொண்டிருந்ததால மெதுவாகத்தான் படகு பக்கத்துல வந்தாங்க. அப்புறம் எங்களைக் கப்பல் பக்கத்துல வரச் சொன்னாங்க. நாங்க கேனைப் பிடிச்சு நீந்தி பக்கத்துல போனோம்.

உயிரிழந்தவர்கள் உடல் அடக்கம்
உயிரிழந்தவர்கள் உடல் அடக்கம்

கயிறைப் போட்டு கப்பல் கேப்டன் எங்களைக் காப்பாத்தி கப்பலில் ஏற்றினாங்க. விபத்து சமயத்துல நாங்க போட்டுல தூங்கிட்டுதான் இருந்தோம். படகு கவிழ்ந்ததும் என் கையில் ஏதோ பிடி கிடைச்சுது. அது பிளாஸ்டிக் கேன் என்பதால என்னைத் தண்ணிக்கு மேல கொண்டு வந்தது. அதனால உயிர் தப்பினேன். கை, கால்ல அடிபட்டதுனால வலி தாங்க முடியலை. உப்புத் தண்ணிய குடிச்சதால வயிறு வீங்கி, வலியா இருந்தது. அப்புறம் கப்பல்ல வாந்தி எடுத்தேன்.

சுமார் 11:30 மணிக்கு விபத்து நடந்தது. என்னை அவங்க காப்பாத்தும்போது 2 மணி இருக்கும். கப்பல்ல முதலுதவி செஞ்சாங்க. அப்புறம் ஜூஸ், உணவு கொடுத்து காப்பாத்தினாங்க. எனக்குக் கொஞ்சம் தெம்பு இருந்ததால என்ன நடந்ததுன்னு விசாரிச்சாங்க. `இன்னும் 12 பேர் கடல்ல கிடக்கிறாங்க அவங்கள எப்பிடியாவது காப்பாத்துங்க ஐயா'ன்னு கப்பல் கேப்டன்கிட்ட கதறினேன். அவங்க உடனே மத்த போட்டுகளுக்கு எல்லாம் தகவல் கொடுத்தாங்க. நேவிக்கும், கோஸ்ட் கார்டு-க்கும் தகவல் கொடுத்தாங்க.

வேல்முருகன்
வேல்முருகன்

அதிகாலை 5:30 மணிக்கு நேவி வந்தாங்க. 6 மணிக்கு என்கிட்ட பேசினாங்க. நேவி, கோஸ்ட் கார்டு எல்லாரும் போய்த் தேடினாங்க. ஹெலிகாப்டர்லயும் தேடிப் பார்த்தாங்க. எங்க போட்டு கவுந்து கிடந்த இடத்துல மற்ற மீன்பிடிப் படகுகளும் வந்தன. காலை 9 மணிக்கு கோஸ்ட் கார்டு கப்பல்ல எங்களை ஏத்தினாங்க. எங்ககூட மீன்பிடிக்க வந்த மூணு பேர் இறந்துட்டாங்க. எங்க போட்டை ஓட்டினவர் கையில போட்டிருந்த ரிங்கைவெச்சுதான் அவர் உடலை அடையாளம் கண்டுபிடிச்சேன்.

நாங்க படகுல மீன் பிடிக்கப் போகும்போது ஒவ்வொருத்தரும் குடும்ப கஷ்டங்களைச் சொல்லுவாங்க. அதைக் கேட்கும்போதே எனக்குக் கஷ்டமா இருக்கும். ஆனா, எல்லாருக்கும் இவ்வளவு பெரிய கஷ்டம் வரும்னு நினைக்கலை. ஒன்பது மீனவர்களை இன்னும் காணோம். அரசு முயற்சி எடுத்துக் காப்பாத்துங்க. ஊருக்குப் போய் அவங்க குடும்பத்துக்கு என்ன பதில் சொல்லுவேன்னு தெரியலை" எனக் கண்ணீர்விட்டுக் கதறினார் திகில் மாறாமல்.