விழுப்புரம் மாவட்டம், கெங்கராம்பாளையம் பகுதியில் இயங்கிவருகிறது தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று. இந்தக் கல்லூரியின் பேருந்துகள், விக்கிரவாண்டி - கும்பகோணம் நெடுஞ்சாலையில் நேற்று (13.06.2022) மாலை அடுத்தடுத்து சென்றுள்ளன. வாணியம்பாளையம் அருகே சென்ற இரு கல்லூரிப் பேருந்துகள், ஒன்றை மற்றொன்று போட்டி போட்டு முந்தியுள்ளன. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த பண்ருட்டியை அடுத்த எம்.எம்.புரம் பகுதியைச் சேர்ந்த ரஜினி பலத்த காயமடைந்த நிலையில், அவருடன் வந்த 5 வயது இளம் சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்தச் சிறுவனுக்கு நேற்றைய தினம் பிறந்தநாள் என்றும் கூறப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஜினியையும், உயிரிழந்த நிலையில் சிறுவனையும் மீட்ட பொதுமக்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பதைபதைக்க வைக்கும் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் நேற்று மாலையே வெளியாகி, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான இரு பேருந்து மற்றும் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றி, சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர் வளவனூர் காவல்துறை அதிகாரிகள். தனியார் பொறியியல் கல்லூரியின் இரு பேருந்துகள் போட்டி போட்டு முந்திச் சென்றபோது ஏற்பட்ட கோர விபத்தில், 5 வயது சிறுவன் பரிதாபமான முறையில் உயிரிழந்திருக்கும் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.