Published:Updated:

`மரம் மட்டும் இல்லையென்றால்..!’ - ஹைதராபாத் கார் விபத்தை விவரிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

ஹைதராபாத்தில் மேம்பாலத்தை இடித்து விழுந்த கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கார் விபத்து
கார் விபத்து

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நேற்று எப்போதும்போல ஒரு சனிக்கிழமையாக இல்லை. அங்கு நடந்த கார் விபத்து மற்றும் அது தொடர்பான வீடியோ இன்றும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. பல அடி உயரத்திலிருந்து ஒரு கார் கீழே வந்து விழுந்ததில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கார் விபத்து
கார் விபத்து

ஹைதராபாத்தின் கச்சிபோலி பகுதியில் வாகன நெருக்கத்தைக் குறைக்கும் வகையில் சமீபத்தில் பயோடைவர்சிட்டி ஃப்ளை ஓவர் என்ற பெயரில் புதிய மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் அந்தப் பாலத்தில் நேற்று ஒரு சிவப்பு நிற காரும் சென்றுள்ளது. ஆனால் அது அசுர வேகத்தில் சென்று வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழுந்துள்ளது.

அசுர வேகம்; மேம்பாலத்தை உடைத்து பறந்த கார்- குலைநடுங்க வைக்கும் வீடியோ!

மேம்பாலத்தை உடைத்துப் பறந்து வந்த அந்த சிவப்பு கார், மேம்பாலத்துக்குக் கீழே இருந்த மரத்தைத் தகர்த்தெறிந்து அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் மீது விழுந்துள்ளது. அந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவில்லை. அதே பகுதியில் நின்றிருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கார் விபத்து பற்றிப் பேசும்போது, ``முதலில் பெரும் சத்தம் மட்டுமே கேட்டது. எங்கிருந்து அந்தச் சத்தம் வருகிறது என நாங்கள் உணர்வதற்குள் கார் நாங்கள் நின்றிருந்த பகுதிக்கு அருகில் விழுந்துவிட்டது. அங்கிருந்து அனைவரும் மூலைக்கு ஒருவர் எனத் தலைதெறிக்க ஓடினார்கள். இருந்தும் ஒரு பெண் உயிரிழந்துவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

கார் விபத்து
கார் விபத்து

ஆட்டோ ஸ்டாண்டுக்கு அருகிலிருந்த மரத்தால்தான் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. கார் வந்த வேகத்துக்கு அது நிச்சயம் அருகிலிருந்த கடைகள் என அனைத்தையும் உடைத்துத் தள்ளியிருக்கும். மரம் இருந்ததால் கார் அதில் சிக்கி நின்றுவிட்டது. என் வாழ்நாளில் இந்த நாளை மறக்கவே முடியாது” எனத் திகில் விலகாமல் கூறியுள்ளார்.

விபத்துக்குள்ளான அந்த மேம்பாலத்தில் 40 கி.மீ வேகத்தில் மட்டுமே கார் ஓட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த கார் 104 கி.மீ வேகத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது. பயோடைவர்சிட்டி மேம்பாலம் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக ஹைதராபாத் மேயர் அறிவித்துள்ளார். மேலும், நேற்றைய விபத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.