Published:Updated:

`திடீர் தீ விபத்து; தரைமட்டமான 3 அறைகள்!' - சாத்தூர் அருகே 3 தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்

விபத்தில் தரைமட்டமான அறைகள்
விபத்தில் தரைமட்டமான அறைகள்

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் ஒரு சிறுவன் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில், 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 750-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. வருடத்தில் தீபாவளி, தசரா பண்டிகைக்காக சீசன் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வந்த பட்டாசு உற்பத்தித் தொழில், கடந்த சில ஆண்டுகளாக ஆண்டு முழுவதும் உற்பத்தி செய்யப்படும் தொழிலாக மாறியது.

தீயை அணைக்கும் வீரர்கள்
தீயை அணைக்கும் வீரர்கள்

நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 95 சதவிகித தேவையை இந்தப் பகுதிகளில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலைகளே பூர்த்தி செய்கின்றன. இத்தொழிலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தியைப் பாதுகாப்பாக மேற்கொண்டு வந்தாலும் திடீர் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன்பட்டி கிராமத்தில் பிரபாகரன் என்பவருக்குச் சொந்தமான `சூரியபிரபா’ என்ற பட்டாசு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 25-க்கும் மேற்பட்ட அறைகளில் பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். பட்டாசுகளை தொழிலாளர்கள் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்த போது, ஏற்பட்ட திடீர் உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களின் சிதறிய சாப்பாட்டுப் பாத்திரங்கள்
தொழிலாளர்களின் சிதறிய சாப்பாட்டுப் பாத்திரங்கள்

இந்த வெடி விபத்தால் பட்டாசு தொழிற்சாலையில் உள்ள அனைத்து அறைகளிலும் தீ மளமளவென பரவவே, பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இதில், மூன்று அறைகளில் இருந்த பட்டாசுகள் முழுவதும் வெடித்ததால், அந்த அறைகள் தரைமட்டமாகின. இந்த வெடிவிபத்தில் கார்த்திக் (வயது 16), பாண்டியராஜன் (வயது 28) மற்றும் வெள்ளைச்சாமி (வயது 55) ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 வாகனங்களில் வந்த சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போரட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். விதிமீறலாக பேன்சி ரக பட்டாசுகளைத் தயாரித்து வந்ததாகவும் ஆலையின் உரிமையாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தரைமட்டமாகிய கட்டடத்தின் அருகில் தொழிலாளர்கள் மதிய உணவிற்காக எடுத்து வந்த சாப்பாட்டுப் பாத்திரங்கள் சிதறிக்கிடப்பதைப் பார்த்து அப்பகுதியினர் கலங்கினர். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம்.

பட்டாசு ஆலை விபத்து
பட்டாசு ஆலை விபத்து

``ஒரு சில ஆலைகளில் உற்பத்தியைப் பெருக்கி அதிக லாபம் பார்ப்பதற்காக, சட்டத்தை மீறி பட்டாசு உற்பத்தி அறைகளில் கூடுதலாகத் தொழிலாளர்களை வைத்து வேலை வாங்குகிறார்கள். சில நேரங்களில் மரத்தடியில் அமர்த்தி பட்டாசில் மருந்து செலுத்தும் பணியும் நடக்கிறது. வேதிப் பொருள்களின் வீரியத்தன்மை தெரியாமல் மருந்துகளைக் கையாளப்படுவதே பெரும் விபத்துகளுக்குக் காரணமாகிறது. உற்பத்தியாளர்கள் விதிமுறைப்படி பட்டாசு ஆலைகளை நடத்துவதும் தொழிலாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே வெடி விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு