மும்பை டாக்யார்டு ரோடு கடற்படைத்தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் ரன்வவீர் போர்க்கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் கடற்படை வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்தனர். அவர்கள் கடற்படைக்குச் சொந்தமான மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடற்படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்து, தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். கப்பலுக்கு பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று கடற்படை வீரர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்தியில், ``மும்பை டாக்யார்டு ரோடு கடற்படைத் தளத்தில் ஏற்பட்ட சம்பவம் துரதிஷ்டவசமானது. கப்பலின் உள் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த மூன்று பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துள்ளனர். ஐஎன்எஸ் ரன்வீர் கப்பல் கிழக்கு கடற்படை மண்டலத்தில் பணியில் நிறுத்தப்பட்டிருந்தது.
கப்பலில் ஏற்பட்ட விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக கப்பலில் பெரிய அளவில் வெடிவிபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதம், 13-ம் தேதி மும்பை அருகே நடுக்கடலில் ஓ.என்.சி.ஜி. ஆயில் கிணறு அருகே ரோஹினி என்ற கப்பலில் தீப்பிடித்துக்கொண்டது. இதில் மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.