Published:Updated:

திருச்சியில் மின்சாரம் தாக்கி பலியான விவசாயி!- காப்பாற்றச் சென்ற தாயும், மகனும் பலியான சோகம்

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய மகனைக் காப்பாற்ற முயன்ற தாய், பேரன் என 3 பேர் பலியான சம்பவம் திருச்சி மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராமமூர்த்தி , ஒப்பாயி மற்றும் குணசேகரன்
ராமமூர்த்தி , ஒப்பாயி மற்றும் குணசேகரன்

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த சத்திரப்பட்டி கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. வயலில், பாசனத்துக்காக வெட்டப்பட்ட கிணறும் அருகே மின் மோட்டார் இணைப்புக்காக அமைக்கப்பட்ட மின் கம்பமும் உள்ளது.

வயலில் உடல்களை மீட்கும் பொதுமக்கள்
வயலில் உடல்களை மீட்கும் பொதுமக்கள்

மின் மோட்டார் மூலம், வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி வந்தனர். அந்தவகையில் ராமமூர்த்தி, தற்போது வயலில் நெல் பயிரிட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிரிடப்பட்ட நெல் பயிர், கதிர் விடும் பருவத்தில் உள்ளது. இந்த நிலையில், வயலுக்கு உரம் தெளிக்க முடிவு செய்த ராமமூர்த்தி, வயலுக்குத் தண்ணீர் பாய்ச்சி வைத்திருந்தார். தொடர்ந்து அவர், உர மூட்டைகளுடன் நேற்று மதியம் அவரின் தாய் ஒப்பாயி மற்றும் மகன் குணசேகரன் ஆகியோர் சகிதமாகச் சென்றார்.

நேற்று மதியம் 2.30 மணியளவில் ராமமூர்த்தி வயலில் உரம் தெளித்துக்கொண்டிருந்தார். அவருக்கு ஒப்பாயும், குணசேகரனும் கலந்து வைக்கப்பட்டிருந்த உரத்தை எடுத்து வந்து கொடுத்துக்கொண்டிருந்தனர். ராமமூர்த்தி உரம் தெளித்துக்கொண்டிருந்தபோது, அப்பகுதியில் இருந்த மின்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த கம்பிகளில் இரண்டு கம்பிகள் மட்டும் அறுந்து வயலில் விழுந்தன.

பிணமாக ராமமூர்த்தி
பிணமாக ராமமூர்த்தி

ஏற்கெனவே, வயலில் தண்ணீர் தேக்கி வைத்திருந்ததால், ராமமூர்த்தி மீது மின்சாரம் பாய்ந்தது. அதனால் தூக்கி வீசப்பட்டு, உயிருக்குப் போராடினார். மகனின் அலறல் சத்தம் கேட்டு, வயலுக்கு வெளியே வரப்பில் இருந்த அவரின் தாய் ஒப்பாயும், குணசேகரனும், உயிருக்குப் போராடிய ராமமூர்த்தியைக் காப்பாற்ற வயலில் இறங்கினர். அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து சரிந்து விழுந்தனர். அடுத்தடுத்து மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வயல்களில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள், ஓடிவந்தனர். தொடர்ந்து அவர்கள், சூழலை உணர்ந்து வயலில் இறங்கவில்லை. அடுத்து, ராம்ஜிநகர் மின்வாரிய அலுவலத்துக்கு தகவல் கொடுத்து மின்சாரம் துண்டித்தபிறகே மக்கள் வயலில் இறங்கி மின்கம்பியை அப்புறப்படுத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ராம்ஜிநகர் போலீஸார் உடல்களைக் கைப்பற்றி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மின்சாரம் தாக்கி பலியான ராமமூர்த்தி, ஒப்பாயி மற்றும் குணசேகரன்
மின்சாரம் தாக்கி பலியான ராமமூர்த்தி, ஒப்பாயி மற்றும் குணசேகரன்

இறந்துபோன ராமமூர்த்தி, ஒப்பாயி, குணசேகரன் ஆகியோரின் உடலைத் திருச்சி அரசு மருத்துமனைக்கு எடுத்துச்சென்று பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிணமாக 
 சீனிவாசன் மற்றும் செந்தில்குமார்
பிணமாக சீனிவாசன் மற்றும் செந்தில்குமார்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை, திருச்சி ஈபி சாலை அண்ணா நகரை அடுத்த வேதாத்திரி நகரைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் அவரின் மகன் செந்தில்குமாரும் தச்சுவேலை செய்துகொண்டிருந்தபோது அவர்கள் பயன்படுத்திய மின் அறுவை இயந்திரம் மூலம் மின்சாரம் பாய்ந்ததில் தந்தையும் மகனும் பலியானார்கள்.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், சத்திரப்பட்டியில் 3 உயிர்கள் பலியாகியுள்ளது. அடுத்தடுத்த சம்பவங்களால் திருச்சி மாவட்டமே பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.