Published:Updated:

மதுரையில், சாலை அருகே உறங்கிய 3 தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்!

ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து
ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து

மதுரை ஸ்மார்ட் சிட்டி பணியில் நிகழ்ந்த கொடூரம்.

மதுரையில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக இரவு பகலாக வேலை செய்ய வந்த தொழிலாளர்கள் 3 பேர், வேலைபார்த்த இடத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது, லாரி ஏறி பலியானது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் பலி
தொழிலாளர் பலி
ஈ.ஜெ.நந்தகுமார்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநகராட்சி தேர்வுசெய்யப்பட்டு, பல கோடி ரூபாய் செலவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்த மே மாதத்தில் அனைத்து வேலைகளும் முடிக்கப்பட வேண்டும் என்றாலும், நெருக்கடியான நகரம் என்பதால், சிரமத்துக்கு இடையேதான் வேலை நடந்துவருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மதுரை வைகை ஆற்றின் கரையோரங்களில் சாலை அமைத்து அழகுபடுத்தும் பணி நடைபெற்றுவருகிறது. ஓபுளா படித்துறைப் பாலம் அருகே, நள்ளிரவில் பணி செய்துவிட்டு அங்கேயே தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தனர்.

ஸ்மார்ட் சிட்டி பணிகள்
ஸ்மார்ட் சிட்டி பணிகள்

இவர்கள் அங்கு படுத்திருப்பதைப் பார்க்காமல், அங்கு வந்த கான்கிரீட் கலவை ஏற்றி வந்த லாரி பின்நோக்கி வந்து, மூன்று பேர் மீதும் ஏறியுள்ளது. அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் பெரியசாமி இருவர் மீதும் லாரி ஏறி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்,

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து, அடிபட்டு துடித்துக்கொண்டிருந்த சென்னையைச் சேர்ந்த பாலு என்ற தொழிலாளரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரும் உயிரிழந்தார்.

ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து
ஸ்மார்ட் சிட்டி பணி விபத்து
ஈ.ஜெ.நந்தகுமார்

ஸ்மார்ட் சிட்டி பணிகளை வேகமாக முடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள், அதிக தொழிலாளர்களை வைத்துக்கொள்ளாமல் குறைந்த ஆட்களை வைத்து வேலை செய்வதால்தான், இதுபோன்ற கொடூரமான விபத்துகள் நடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். தற்போது, லாரி ஓட்டுநர் ஆரோக்கியசாமியைக் கைதுசெய்துள்ளது காவல்துறை. `இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் தொழிலாளர்களின் நலனில் ஸ்மார்ட் சிட்டி நிர்வாகம் அக்கறை செலுத்த வேண்டும்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு