Published:Updated:

சென்னை: பைக்கின் மீது அமர்ந்திருந்த குழந்தை - நொடிப் பொழுதில் உயிரிழந்த சோகம்!

குழந்தை சிவலிங்கம்
குழந்தை சிவலிங்கம்

பைக்கின் மேல் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தாம்பரத்தில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை தாம்பரத்தை அடுத்த புதுப் பெருங்களத்தூர், மதுரகவியாழ்வார் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35); கூலித்தொழிலாளி. இவரின் 3 வயது மகன் சிவலிங்கம். கார்த்திகேயன், வேலைக்குச் செல்வதற்கு முன்னர் சிவலிங்கத்தைத் தன்னுடைய பைக்கில் வைத்து சிறிது தூரம் அழைத்துச் செல்வார். பிறகு குழந்தையை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு வேலைக்குச் செல்வார். அதேபோல இன்று காலை கார்த்திகேயன் வேலைக்குப் புறப்பட்டார்.

விபத்து
விபத்து
representational image

வழக்கம்போல குழந்தை சிவலிங்கத்தை பைக்கின் முன் உட்காரவைத்த கார்த்திகேயன், புறப்படத் தயாரானார். அப்போது லன்ச் பேக்கை எடுக்க மறந்ததால், குழந்தையை பைக்கில் அமரவைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார். பைக்கின் மேல் உட்கார்ந்திருந்த சிவலிங்கம், சந்தோஷமாகச் சிரித்தபடி விளையாடிக்கொண்டிருந்தான். இந்தச் சமயத்தில் திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டு கார்த்திகேயன் வெளியில் ஓடி வந்தார். அப்போது குழந்தையின் மேல் பைக் விழுந்திருந்தது. உடனே குழந்தையை மீட்ட கார்த்திகேயன், மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்.

அங்கு குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள், சிவலிங்கம் உயிரிழந்துவிட்டதை உறுதிப்படுத்தினர். அதைக் கேட்டு கார்த்திகேயனும் அவரின் குடும்பத்தினரும் கதறியழுதனர். இது குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் சடலத்தை மீட்ட போலீஸார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். குழந்தையின் மரணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

Vikatan
கைதான ரமேஷ்
கைதான ரமேஷ்

விசாரணையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பைக்கில் சிவலிங்கத்தை அமரவைத்துவிட்டு கார்த்திகேயன் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியாக சென்ற மினி லாரி ஒன்று, பைக்கின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றிருக்கிறது. அதனால் நிலைதடுமாறிய குழந்தை சிவலிங்கம் கீழே விழ, அவனின் மேல் பைக் விழுந்திருக்கிறது. இதில் காயமடைந்த சிவலிங்கம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறான். மினி லாரியின் டிரைவர் ரமேஷைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு