செங்கல்பட்டு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோயில் பகுதியிலிருக்கும் பாரதியார் தெருவில் அசோக்(24), மோகன்(17), பிரகாஷ்(17) என்ற மூவரும் வசித்து வந்தனர். நண்பர்களான இவர்கள் மூவரும் இணைந்து அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்து பதிவிடுவது வழக்கமாம்.

இவர்கள் மூவரும் தாம்பரம் செங்கல்பட்டு இடையே அமைக்கப்பட்டிருக்கும் மூன்றாவது ரயில் பாதையில் அமர்ந்து பேசுவதையும், அங்கேயே வீடியோ எடுத்துப் பதிவேற்றியும் வந்திருக்கிறார்கள். அந்த ரயில் பாதையில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே செல்லும் என்பதால், அதிகமாக ரயில்கள் செல்லாது. இந்த நிலையில்தான், நேற்று மாலை இந்த மூவரும் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அப்போது, தாம்பரத்திலிருந்து விழுப்புரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. வீடியோ எடுத்துக்கொண்டிருந்ததால் ரயில் வந்ததை அந்த மூவரும் கவனிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ரயில் மோதியதில் விபத்துக்குள்ளான மூவரும் உடல் சிதறி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக தகவலறிந்து வந்த ரயில்வே போலீஸார், மூன்று பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள். இறந்த மூன்று பேரில் அசோக் என்பவருக்கு மட்டும் திருமணம் ஆகியுள்ளது. ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.