Published:Updated:

கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதியது! - சிறுமிகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

பொன்னேரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், லாரியில் மோதி ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவிகள் இருவர் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தை அடுத்த பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு கனிஷ்கா (16), அஷ்விதா (14) என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும், பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு மற்றும் 9-ம் வகுப்பு படித்துவந்தனர். வழக்கமாகத் தனது மகள்கள் இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் குமார் இன்று வெளியே சென்றுவிட்டதால், காலை மாணவிகளின் தாய்மாமா நாகராஜ் என்பவர் தனது காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் காரனோடை அருகில் கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் மீது அசுர வேகத்தில் மோதியது.

விபத்து
விபத்து

அதில், மாணவி கனிஷ்கா, அவரின் மாமா நாகராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்பக்க சீட்டில் அமர்ந்திருந்த சிறுமி அஷ்விதா மட்டும் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை கார் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸில் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த சோழவரம் போலீஸார், உயிரிழந்த பள்ளி மாணவி கனிஷ்கா, அவரின் மாமா நாகராஜ் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

சோழவரம் காவல் நிலையம்
சோழவரம் காவல் நிலையம்

கோர விபத்து தொடர்பாக, சோழவரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி அஷ்விதாவும் இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பள்ளி மாணவிகள் இரண்டு பேர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு