Published:Updated:

தேனி: நேருக்கு நேர் மோதிய லாரி - ஆம்னி பேருந்து! -இரண்டு ஓட்டுநர்கள் பலி; சிகிச்சையில் 6 பேர்

நேருக்கு நேர் மோதி விபத்து
நேருக்கு நேர் மோதி விபத்து

தேனியில் தனியார் ஆம்னி பேருந்தும், மினி லாரியும் நால்முனைச் சந்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரண்டு வாகன ஓட்டுநர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்தது ராமநாதபுரத்திற்கு வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரியும், சென்னையில் இருந்தது கம்பம் நோக்கி வந்த தனியார் ஆம்னி பேருந்தும் வீரபாண்டி உள்ள அருகே உப்பார்பட்டி பகுதியிலுள்ள நான்குமுனைச் சந்திப்பில் நேருக்கு நேர் மோதின. இரண்டு வாகனமும் அதிவேகத்தில் மோதிக் கொண்டதால் லாரியின் முன்பகுதியும், பேருந்தின் முன் பகுதியும் முற்றிலுமாக சிதைந்தன. இதில் ஆம்னி பேருந்தின் ஓட்டுநரான அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் சேதமான பேருந்தின் முகப்பு பகுதி
விபத்தில் சேதமான பேருந்தின் முகப்பு பகுதி

லாரி ஓட்டுனரான சென்னையைச் சேர்ந்த துரை, படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்னி பேருந்தில் குறைந்த அளவு பயணிகள் இருந்ததால், பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது. பலத்த காயம் அடைந்த 6 பேர் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதல் தேனி மாவட்டத்தில் மிதமான சாரல் மழை பெய்து வரும் நிலையில் வீரபாண்டி அருகே உள்ள உப்பார்பட்டி நான்குமுனை சந்திப்பில் அமைக்கப்பட்டிருந்த பேரிக்காட்டை முந்தி செல்வதில் ஏற்பட்ட போட்டியால் ஆம்னி பேருந்தும், மினி லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த விபத்தினால் வாகனங்கள் செல்ல முடியாமல் தேனி – கம்பம் சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

காயம் அடைந்தவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்கள்
காயம் அடைந்தவர்களை மீட்க வந்த ஆம்புலன்ஸ்கள்

தேனி- கம்பம் சாலையில் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. வீரபாண்டி போலீஸார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி: கட்டுப்பாட்டை இழந்த கார்; லாரி மோதி விபத்து; கைக்குழந்தை உட்பட 6 பேர் பலியான பரிதாபம்!
அடுத்த கட்டுரைக்கு