Published:Updated:

சாலை தடுப்புச் சுவரில் மோதிய கார்! - நடிகர் மனோ மரணம்; உயிருக்குப் போராடும் மனைவி

எந்நேரமும் ஒரு வேகத்துடனேயே துறுதுறுனு இருப்பார். இவ்ளோ வேகமா இந்த உலகத்தை விட்டுப் போயிடுவார்னு யாருமே எதிர்பார்க்கலை.

tv fame mano
tv fame mano

`மானாட மயிலாட', `லொள்ளு பா' உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகள் மூலம் பரிச்சயமான மனோ சென்னையில் நேற்று (28.10.19) நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். மனோவுடன் காரில் பயணித்த அவரது மனைவி லிவியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

பாடகர், டான்ஸர், நடிகர்னு அவரது திறமைக்கான எல்லை விரிவடைஞ்சபடியே இருந்தது. பெரிசா சாதிப்பார்னு நான் நம்பினவங்கள்ல அவரும் ஒருவர்.
மதுரை முத்து

சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர் மனோ. நடிப்பு, நகைச்சுவை, நடனம் ஆகிய தனது பன்முகத் திறமையால் சின்னத்திரைக்கு வந்தார். கலைஞர் டிவியில் `மானாட மயிலாட', விஜய் டிவியில் `சாம்பியன்ஸ்', சன் டிவியில் `லொள்ளு சபா' சன் லைஃப் சேனலில் `மசாலா கஃபே' என ஒரு ரவுண்டு வந்தவருக்கு சில வருடங்களுக்கு முன் சினிமா வாய்ப்புகளும் வந்தன. `புழல்' என்ற படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானவர், விஷால் நடித்த `தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்திலும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

நேற்றைய தினம் காரில் மனைவியுடன் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சென்னை ஆவடி அருகே சாலையின் தடுப்புச் சுவரில் இவரது கார் பலமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார் மனோ. பலத்த காயமடைந்த மனோவின் மனைவி லிவியா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

மனோ - லிவியா தம்பதிக்கு ஒரே மகள். யு.கே.ஜி படித்து வருகிறார். மனோ உடல் இன்று (29.10.19) பிற்பகல் அடக்கம் செய்யப்படுகிறது.

madurai muthu
madurai muthu

`என்னுடன் கத்தார் உள்ளிட்ட நாடுகளுக்கு `ஷோ'க்கு வந்திருக்கார். பாடகர், டான்ஸர், நடிகர்னு அவரது திறமைக்கான எல்லை விரிவடைஞ்சபடியே இருந்தது. பெரிசா சாதிப்பார்னு நான் நம்பினவங்கள்ல ஒருத்தரா இருந்தார். எந்நேரமும் ஒரு வேகத்துடனேயே துறுதுறுனு இருப்பார். இவ்ளோ வேகமா இந்த உலகத்தை விட்டுப் போயிடுவார்னு யாருமே எதிர்பார்க்கலை' என மனோ தன்னுடன் பயணித்த நாள்களை நினைவு கூர்கிறார் `மதுரை' முத்து.