Published:Updated:

`திடீரென வெடித்த எண்ணெய்க் கிணறு; பற்றியெரியும் தீ!’- வீரர்கள் 2 பேர் உயிரிழப்பால் பதறும் அஸ்ஸாம்

தீ
தீ ( Twitter )

``தீயணைப்பு வீரர்களின் உடல்கள் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஈரநிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது.”

அஸ்ஸாம் மாநிலம், டின்சுகியா எனும் பகுதியில் உள்ள ஆயில் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கிணற்றில் கடந்த சில நாள்களாக அதிகளவில் கசிவு இருந்துள்ளது. இதைச் சரிசெய்யும் பணிகளும் அங்கு நடைபெற்று வந்துள்ளன. இந்த நிலையில், எண்ணெய்க் கிணற்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயினால் எழுந்த கரும்புகையை 10 கி.மீ தூரத்துக்கும் அப்பால் இருந்து பார்க்க முடிந்ததாகக் கூறுகின்றனர். எண்ணெய்க் கிணற்றைச் சுற்றி சுமார் 1.5 கி.மீ பரப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்து சுமார் 2 கி.மீ சுற்றளவில் வசிக்கும் 6,000 பேர் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கசிவு தொடர்ந்து இருப்பதால் தீ இன்னும் எரிந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அஸ்ஸாம் தீயணைப்புத் துறை, தேசியப் பேரிடர் மீட்புக் குழு, இந்திய விமானப்படை மற்றும் ராணுவ வீரர்கள் எனப் பலரும் இந்தத் தீயை அணைக்க கடுமையாகப் போராடி வருகின்றனர். பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியை துணை ராணுவப் படையினர் சுற்றி வளைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பணியில் சிங்கப்பூரைச் சேர்ந்த நிபுணர்களும் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசின் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தீயணைப்பு பணியை மேற்பார்வையிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அஸ்ஸாமின் முதல்வர் சர்பானந்த சோனோவால், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடன் தீயணைப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், விரைவில் தீ கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், தீ விபத்தில் சிக்கி இரண்டு தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Vikatan

தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, தற்போது காணாமல் போன வீரர்களின் உடல்கள் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆயில் இந்தியா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் த்ரிதிவ் ஹசாரிகா, ``தீயணைப்பு வீரர்களின் உடல்கள் விபத்து ஏற்பட்ட இடத்துக்கு அருகில் அமைந்துள்ள ஈரநிலம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் தண்ணீரில் குதித்து நீரில் மூழ்கி இறந்ததாகத் தெரிகிறது. தீக்காயம் ஏற்பட்டு இறந்ததற்கான எந்த அடையாளமும் அவர்களின் உடலில் தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைகள் முடிந்த பின்பே அவர்கள் இறந்ததற்கான சரியான காரணங்கள் தெரியும்” என்று கூறியுள்ளார்.

தீ
தீ
Twitter

கவுகாத்தியிலிருந்து சுமார் 500 கி.மீ தொலைவில் இந்த எண்ணெய்க் கிணறு அமைந்துள்ளது. விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள கிராமங்களில் விவசாயம் நடைபெற்று வருகின்றது. தேயிலைத் தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப் புகையால் இவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். விபத்து நடந்துள்ள பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திப்ரு சைகோவா என்ற உயிரியல் பூங்கா உள்ளது. தீ விபத்தால் பூங்காவில் வாழும் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் நிலவி வருகிறது.

விபத்தால் பாதிப்படைந்துள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூபாய் 30,000 நிவாரணமாக வழங்கப்படும் என ஆயில் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கிணற்றில் தீப்பற்றி எரிவது, கரும்புகை எழும்பியுள்ளது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் கள நிலவரத்தை எடுத்துரைப்பதோடு அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.

`உருக்குலைந்த சேமிப்புக் கிடங்கு; 20,000 டன் எண்ணெய்; சிவப்பு நிறமான ஆறு!’- ரஷ்யாவில் அவசர நிலை
அடுத்த கட்டுரைக்கு