Published:Updated:

பின்தொடர்ந்த ஆடி கார்... மாயமான சிசிடிவி காட்சிகள்... மாடல் அழகிகள் விபத்தில் நடந்தது என்ன?

காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததால், ‘காரை ஓட்டிச் செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கவே காரைப் பின்தொடர்ந்து சென்றேன்

பிரீமியம் ஸ்டோரி

கேரளாவின் ஃபிலிம் சிட்டி கொச்சி. நள்ளிரவு பார்ட்டிகளுக்கும் கேளிக்கைகளுக்கும் குறைவில்லாத ஏரியா. அப்படியொரு நள்ளிரவு பார்ட்டியில் கலந்துகொண்ட மாடல் அழகிகள் இருவர், கார் விபத்தில் மரணமடைந்தார்கள். சாதாரண விபத்தாக மட்டுமே பதியப்பட்ட இந்த வழக்கில் திடீர் திருப்பமாக மாடல் அழகிகளைப் பின்தொடர்ந்த ஆடி கார், துரத்தச் சொன்ன ஹோட்டல் உரிமையாளர், ஹோட்டலில் அழிக்கப்பட்ட சிசிடிவி பதிவுகள், மாடல் அழகிகளை அடையத்துடித்த சினிமா, அரசியல் புள்ளிகள்... என்று அடுத்தடுத்து பகீர் தகவல்கள் வெளியாகி, கேரளாவை அதிரவைத்துள்ளன!

பின்தொடர்ந்த ஆடி கார்... மாயமான சிசிடிவி காட்சிகள்... மாடல் அழகிகள் விபத்தில் நடந்தது என்ன?

திருவனந்தபுரம், ஆற்றிங்கல் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஆன்சி கம்பீர்,, 2019-ல் ‘மிஸ் கேரளா’வாகத் தேர்வுசெய்யப்பட்டவர். இரண்டாமிடம் பிடித்தவர் 24 வயதான திருச்சூரைச் சேர்ந்த அஞ்சனா ஷாஜன். ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன், அவர்களின் நண்பர்கள் முஹம்மது ஆசிக், அப்துல் ரஹ்மான் ஆகியோர் கொச்சி போர்ட் சிட்டியிலுள்ள ‘நம்பர் 18’ ஹோட்டலுக்கு அக்டோபர் 31-ம் தேதி இரவு பார்ட்டிக்குச் சென்றார்கள். பின்னர், நள்ளிரவு 1 மணிக்கு ஹோட்டலிலிருந்து காரில் அதிவேகமாக வெளியே கிளம்பினார்கள். எர்ணாகுளம் பைபாஸ் சாலையில் சென்றபோது, மரத்தில் கார் மோதி அப்பளமாக நொறுங்கியது. இதில் ஆன்சி கம்பீர், அஞ்சனா ஷாஜன் இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்கள். முஹம்மது ஆஷிக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நவம்பர் 7-ம் தேதி இறந்தார். காரை ஓட்டிச் சென்ற அப்துல் ரஹ்மான் மட்டும் காயங்களுடன் உயிர்பிழைத்தார்.

குடிபோதையில் கார் ஓட்டியதாக அப்துல் ரஹ்மான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், ‘‘எங்கள் காரைப் பின்தொடர்ந்து 3333 என்ற எண்கொண்ட ஆடி கார் ஒன்று வேகமாக வந்தது. அந்த காரில் வந்தவர்களிடம் சிக்காமல் இருக்கவே, வேகமாகச் சென்றோம். அதனால்தான் விபத்து ஏற்பட்டது’’ என்று அவர் தெரிவித்துள்ளார். ‘ஆடி கார் பின்தொடர்ந்தது ஏன்?’ என்று போலீஸார் விசாரித்தபோதுதான், இந்த விவகாரத்தின் பின்னணியில் முக்கியப்புள்ளிகள் சிலர் இருப்பது தெரியவந்திருக்கிறது.

அஞ்சனா ஷாஜன்
அஞ்சனா ஷாஜன்

ஆடி காரை ஓட்டிச் சென்ற ஷைஜூவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ‘‘காரில் இருந்தவர்கள் மது அருந்தியிருந்ததால், ‘காரை ஓட்டிச் செல்ல வேண்டாம்’ என்று எச்சரிக்கவே காரைப் பின்தொடர்ந்து சென்றேன்’’ என்று கூறியிருக்கிறார். நம்பர் 18 ஹோட்டல் உரிமையாளர் ரோயி வயலாடியின் நண்பர்தான் இந்த ஷைஜூ. இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, சில நாள்களாகத் தலைமறைவாக இருந்தார் ரோயி வயலாடி. மேலும், அன்றைய தினம் இரவு பார்ட்டி நடந்த ஹாலிலுள்ள சிசிடிவி காட்சிகள் அடங்கிய டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் அகற்றப்பட்டிருப்பதையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். போலீஸ் விசாரணை தீவிரமானதைத் தொடர்ந்து, நவம்பர் 16-ம் தேதி போலீஸில் ஆஜரான ரோயி, ஹோட்டலிலுள்ள ஒரு டி.வி.ஆரை போலீஸிடம் ஒப்படைத்தார். அதை ஃபாரன்சிக் ஆய்வுக்கு போலீஸார் அனுப்பியபோதுதான் ரோயி ஒப்படைத்தது பழைய பதிவுகள் அடங்கிய டி.வி.ஆர் என்று தெரியவந்தது. அதையடுத்து, விசாரணையின் போக்கு மாறியது.

“இந்த விவகாரத்தில் என்னதான் நடந்திருக்கிறது?” என்பது பற்றி கொச்சி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்... ‘‘நம்பர் 18 ஹோட்டலில் மது விருந்து மட்டுமின்றி, போதைப்பொருள் விருந்தும் நடத்தப்படுகிறது. மாடல் அழகிகள் பார்ட்டிக்கு வந்த அன்று அரசியல் புள்ளி ஒருவரும், சினிமா நடிகர் ஒருவரும் ஹோட்டலில் இருந்திருக்கிறார்கள். ஹோட்டல் உரிமையாளர் ரோயியும் அங்கு இருந்திருக்கிறார். அன்றைய தினம் இரவு மாடல் அழகிகள் இருவரும் ஹோட்டலில் தங்கும் முடிவில் இருந்திருக்கிறார்கள். இந்த நிலையில்தான் அரசியல் புள்ளியும், நடிகரும் அவர்களை அடைய ஆசைப்பட்டு, பிரச்னை செய்ததாகச் சொல்லப்படுகிறது. இதையறிந்த மாடல்கள் இருவரும் காரில் ஏறி வேகமாகச் சென்றிருக்கிறார்கள். அவர்களை ஹோட்டலுக்குத் திரும்ப அழைத்து வருவதற்காக, தன் நண்பரை ஆடி காரில் ரோயி அனுப்பிவைத்திருக்கிறார்.

ஆன்சி கம்பீர்
ஆன்சி கம்பீர்

விபத்து நடந்த பிறகு, காரில் இருந்தவர்கள் மரணமடைந்ததை ஆடி காரிலிருந்து இறங்கிச் சென்ற ஒருவர் உறுதிசெய்திருக்கிறார். அவர்களைக் கொண்டுசென்ற மருத்துவமனைக்கும், ஆடி கார் பின்தொடர்ந்து சென்றிருக்கிறது. அப்போது ஆடி காரில் இருந்த ஷைஜூ, ஹோட்டல் உரிமையாளர் ரோயி மற்றும் ஊழியர்கள் சிலரை போனில் அழைத்துப் பேசியிருப்பது தெரியவந்திருக்கிறது. அதன் பிறகுதான் சிசிடிவி காட்சிகள் மாயமாகியுள்ளன. சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர் கொச்சியில் பிரபலமானவர் என்ற தகவல் மட்டுமே தற்போது தெரியவந்துள்ளது. அந்த நடிகர் யார் என்ற விவரம் தெரியவில்லை. ஹோட்டலில் நடந்த பிரச்னை குறித்த வீடியோ காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் அழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மாடல் அழகிகளின் மரணம் கேரளத்தில் அரசியல்ரீதியாகவும் புயலைக் கிளப்பும்’’ என்றார் விரிவாக. இதற்கிடையே நவம்பர் 17-ம் தேதி ஆதாரத்தை அழித்ததாக ரோயி மீது வழக்கு பதிவு செய்த கொச்சி போர்ட் போலீஸார், அவரைக் கைதுசெய்துள்ளனர்.

பின்தொடர்ந்த ஆடி கார்... மாயமான சிசிடிவி காட்சிகள்... மாடல் அழகிகள் விபத்தில் நடந்தது என்ன?

சிஸ்டர் அபயா கொலை வழக்கு, ஸாஜிதா காணாமல்போன வழக்கு, கோழிக்கோட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சயனைடு கொடுத்துக் கொல்லப்பட்ட வழக்கு... என கேரளத்தை உலுக்கிய பல வழக்குகள் பிரபலமானவை. அந்த வழக்குகள் வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது மாடல் அழகிகளின் மர்ம மரண வழக்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு