Published:Updated:

சுவரில் மோதிய பேருந்து; 2 பேர் உயிரிழப்பு! - வடபழனி போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

கலிலுல்லா.ச

வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்து காரணமாக ஊழியர்களுடன் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட காரணத்தால், பல மணி நேரத்துக்குப் பின்னர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சுவர் இடிந்து விபத்து
சுவர் இடிந்து விபத்து

சென்னை வடபழனி அரசு பேருந்து போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவு 12:40 மணி அளவில் ஊழியர்கள் பணிகளை முடித்துக் கொண்டு பணிமனையில் இருந்த ஓய்வறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த அறைக்கு அருகிலிருக்கும் இடத்தில்தான் பேருந்துகளை பழுதுபார்க்கும் இடம் இருக்கிறது. அப்போது அங்கு பழுதுபார்ப்பதற்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. ஏற்கெனவே மோசமான நிலையில் இருக்கும் அந்தப் பேருந்து கட்டுபாட்டை இழந்து சுவரின் மீது மோதியுள்ளது. இதில் சுவர் இடிந்து விழுந்தில் பணிமனை ஓய்வறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஊழியர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து
விபத்து

இதில் சேகர், பாரதி என்ற இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாரதி என்பவருக்கு திருமணம் நடந்து 2 மாதங்கள்தான் ஆகிறது என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து விபத்து ஏற்பட்ட போக்குவரத்துப் பணிமனை போக்குவரத்துத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர்,``விபத்திற்கு காரணமான பேருந்தை இயக்கியவர் அனுபவமிக்க ஓட்டுநர் என்றும் பிரேக்கில் பழுது இல்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வந்துள்ளன. இருப்பினும்கூட முழு ஆய்வு நடத்திய பிறகே காரணம் என்ன என்பதைக் கூற முடியும். தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ள போக்குவரத்து பணியாளர்களும் நலமுடன் இருக்கிறார்கள், தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிற்சங்கள் முன்வைத்த கோரிக்கை அனைத்தும் போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” எனக் கூறினார்.

சுவரில் மோதிய பேருந்து; 2 பேர் உயிரிழப்பு! - வடபழனி போக்குவரத்து பணிமனையில் நள்ளிரவில் நடந்தது என்ன?

அரசு உரிய ஆய்வு செய்யாததன் காரணமாக இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், தமிழக போக்குவரத்துத்துறை இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும் என ஊழியர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், உரிய பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பராமரிப்புப் பணிகள் முறையாக செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இறந்த ஊழியர்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாகவும், உரிய நடவடிக்கை எடுக்க தவறிய அரசை கண்டித்தும் வடபழனி போக்குவரத்து ஊழியர்கள் பணி புறக்கணிப்பு செய்து பேருந்து எதுவும் காலை முதல் இயக்கப்படவில்லை.

இதில் சேகர், பாரதி என்ற இரண்டு ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பாரதி என்பவருக்கு திருமணம் நடந்து 2 மாதங்கள்தான் ஆகிறது.

அதன்பின் ஊழியர்களிடம் போக்குவரத்து மேலாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், வடபழனி பணிமனையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஊழியர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும், காயமடைந்த ஊழியர்கள் பணிக்குத் திரும்பும் வரை சிறப்பு விடுப்புகள் உள்ளிட்ட சலுகைகள் அளிக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டபட்டது.

விபத்து
விபத்து

பேச்சுவார்த்தையில் தங்கள் கோரிக்கையை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் பேருந்துகள் இயக்கப்படும் என தொ.மு.ச நடராஜன் தெரிவித்தார். இதையடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டன.