Published:Updated:

ரயில் இன்ஜின்களுக்கு இடையில் சிக்கிய லோகோ பைலட்! -கச்சிகுடாவில் ரயில்கள் மோதலுக்குக் காரணம் என்ன?

ஹைதராபாத் கச்சிகுடா ரயில்நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ரயில்கள் மோதல்
ரயில்கள் மோதல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டம் கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில் சிக்னல் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்துக்குள்ளான ரயில்கள்
விபத்துக்குள்ளான ரயில்கள்

கச்சிகுடா ரயில்நிலையத்தின் 4-வது பிளாட்பாரத்தில் கொங்கு எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுகொண்டிருந்தது. கச்சிகுடா ரயில்நிலையத்துக்கு வந்த புறநகர் ரயில் நின்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலின்மீது மோதியது. இதில் புறநகர் ரயிலின் மூன்று பெட்டிகள் சேதமடைந்தன. ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் லோகோ பைலட் சந்திரசேகர் என்பவர் இன்ஜின்களுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.

கடுமையான காயங்களுடன் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்தினர். இதையடுத்து அந்தப்பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.