மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்திலிருந்து நேற்று 28 சுற்றுலாப்பயணிகள், இரண்டு ஊழியர்களுடன் உத்தரகாசியில் உள்ள யமுனோத்ரி தாமுக்கு பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பேருந்து, உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் 150 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்குச் சென்ற மாநில பேரிடர் மீட்புப் படை, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மீட்புப் படை அதிகாரிகள் அளித்த தகவலில் இதுவரை 25 பயணிகளின் இறந்த உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. ஐந்து பேர் படுகாயத்துடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, டேராடூனில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இந்த விபத்து தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில், "பன்னாவைச் சேர்ந்த யாத்ரீகர்கள் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. நானும் எனது குழுவும் உத்தரகாண்ட் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும், இறந்தவர்களின் உடல்களை மத்தியப் பிரதேசத்துக்குக் கொண்டுவரவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்த நெருக்கடியான நேரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உறுதுணையாக நாங்கள் அனைவரும் இருப்போம் ” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். ``காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்படும். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ள உள்ளூர் நிர்வாகம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முயல்கிறது” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தச் சம்பவம் குறித்து, "பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் விழுந்தது பற்றிய தகவல் வருத்தமளிக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் பேசிவருகிறேன்" என ட்வீட் செய்துள்ளார்.