Published:Updated:

`உலகம் எப்படிப் பார்த்தால் என்ன.. இது என் வாழ்க்கை!' -வேலூர் மாற்றுத் திறனாளி இளைஞரின் நம்பிக்கை

கால்களை இழந்த இளைஞர் பாலமுருகன்
கால்களை இழந்த இளைஞர் பாலமுருகன்

`இரண்டு கால்களும் இல்லை. ஆனாலும், எழுந்து நடக்க ஆசைப்படுகிறேன்’ என்று மனம் திறந்துபேசுகிறார், விபத்தால் வாழ்க்கையை இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர்.

வேலூர் மாவட்டம், குடியாத்தம் கொண்டசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வவிநாயகம். ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரின் மகன் பாலமுருகன் (37). ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரயிலில் பயணித்தபோது, தவறிவிழுந்ததில் இரண்டு கால்களும் முழுமையாகத் துண்டாகின. அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்த இந்த இளைஞரின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்ந்தவை எல்லாமே துன்பங்கள்தான். ஆனாலும், இதுநாள் வரை தனக்கான குறையை அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. மனம் தளராத பாலமுருகனுக்கு ஓர் ஆசையும் இருக்கிறது.

பாலமுருகன்
பாலமுருகன்

`எழுந்து நடக்க வேண்டும்’ என்பதுதான் அவரின் நெடுநாள் கனவாக உள்ளது. நம்மிடம் மனம் திறந்து பேசிய அவர், ``நான், பி.சி.ஏ படித்துள்ளேன். இப்போது, தொலைதூர கல்வி மூலம் எம்.சி.ஏ படிக்கிறேன். 2011-ல் எனக்குத் திருமணம் நடைபெற்றது. சென்னை அடையாற்றில் உள்ள ஓர் வங்கியில் வேலைசெய்தேன். மனைவியுடன் ஆவடியில் தங்கியிருந்தேன். எங்களுக்குக் குழந்தை கிடையாது. 2013 மார்ச் 11-ம் தேதியை நான் சாகும் வரை மறக்க மாட்டேன். அன்றுதான் அந்தத் துயரமான சம்பவம் எனக்கு நடந்தது. எல்லோருமே பிறந்தநாளைத்தான் நினைவில் வைத்திருப்பார்கள்.

என்னைப் போன்றோர்தான் வாழ்க்கையை இழந்த நாள்களை நினைவில் வைத்திருப்பார்கள். அன்று காலை மனைவியிடம் ஆசையாய் சிரித்துப் பேசிவிட்டு வழக்கம்போல் வேலைக்குப் புறப்பட்டேன். ஆவடி ரயில் நிலையத்திலிருந்து பெரம்பூருக்கு டிக்கெட் எடுத்துக்கொண்டு ரயிலில் ஓடிச்சென்று ஏறினேன். கூட்டம் அதிகமாக இருந்தது. நான் இருந்த பெட்டியில் நிறைய பயணிகள் முண்டியடித்து ஏறினர். நெரிசலில் சிக்கிய நான், ரயில் புறப்பட்ட அடுத்த சில நொடிகளில் தவறி கீழே விழுந்தேன். அதுவரை நடந்த சம்பவங்கள்தான் எனக்கு கண்முன் வந்துபோகிறது. அதன்பிறகு, நடந்தவற்றை மற்றவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும்.

குடியாத்தத்தில், சட்ட ஆலோசனைகள் வழங்கும் இடம்
குடியாத்தத்தில், சட்ட ஆலோசனைகள் வழங்கும் இடம்

கண் விழித்துப் பார்த்தபோது, என்னுடைய இரண்டு கால்களும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன். கதறி அழுதேன். என்னுடைய பெற்றோர் அருகில் இருந்தனர். அவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரிந்தது, விபத்து நடந்து 10 நாள்கள் ஆகியிருந்தன. சுயநினைவில்லாமல் கிடந்திருக்கிறேன். எனக்குக் கால்கள் இல்லாததைப் பார்த்த என் மனைவி, `இனியும் உன்னுடன் வாழ முடியாது’ என்று உதறித் தள்ளிவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். அவருக்கு வேறொரு வாழ்க்கை அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். அவரின் பெயரைக்கூட நான் யாரிடமும் சொன்னதில்லை. யாரும் அவரைத் தவறாகப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

எங்கிருந்தாலும் அவர் நலமுடன் இருக்கட்டும். நான், மறந்தால்தானே அவரை நினைப்பதற்கு. அவருடன் இருந்த நாள்களை நினைத்துக்கொண்டே எல்லாவற்றையும் கடந்துசெல்கிறேன். அதைத்தவிர, ஆண்டவனுக்கு நிகரான என் தாய், தந்தை இருக்கிறார்கள். அவர்கள்தாம் என்னை பச்சிளம் குழந்தையைப்போல் பார்த்துக்கொள்கிறார்கள். ரயில்வே தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறேன். வீல் சேர் கிரிக்கெட், பேஸ்கட் பால், வாலிபால், கேரம் போன்ற உள்விளையாட்டு அரங்கில் விளையாடும் அத்தனை விளையாட்டுகளையும் விளையாடுகிறேன். எனக்கான வேலைகளை நானே செய்துகொள்கிறேன். யாரையும் நான் தொந்தரவு செய்வதில்லை.

கால்களை இழந்த இளைஞர் பாலமுருகன்
கால்களை இழந்த இளைஞர் பாலமுருகன்

வாழலாம் என்றால் வாழலாம். உலகம் என்னை எப்படிப்பார்த்தால் என்ன, நான் என் வழியில் செல்கிறேன். எழுந்து நடக்க ஆசைப்படுகிறேன். அது, சாத்தியமாகுமா என்பது தெரியவில்லை. அரசின் மாதாந்தர உதவித்தொகை 1,000 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அந்த சிறு தொகையை வைத்து எதையும் செய்ய முடியாது. நான்கு நாள் சாப்பாட்டுக்கே செலவாகிவிடுகிறது. என் வாழ்க்கை திசை மாறும் என்று நான் நினைத்துகூடப் பார்க்கவில்லை. 6 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஏதாவது, தொழில் செய்ய அரசு உதவிசெய்தால் என் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்வேன்’’ என்றார் உருக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு