தமிழக வானிலை ஆராய்ச்சி மையத்தின் எச்சரிக்கையின்படி விருதுநகர் மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில் நேற்று காலை சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. அதைத் தொடர்ந்து வெயில் தலைகாட்டத் தொடங்கியது. இந்நிலையில், மாலை சுமார் 4 மணி அளவில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு அடைமழைக்கு அச்சாரமிட்டன. சிறிது நேரத்திலேயே பயங்கர இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த மழையால் நகரின் முக்கியச் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையின்போது வெளிப்பட்ட பயங்கர மின்னல் தாக்கி விருதுநகர் கருப்பசாமி நகரில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து தகவலறிந்த விருதுநகர் ஊரக காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்னல் தாக்கியதில் காயமடைந்த ரோசல்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், சிவஞானபுரத்தை சேர்ந்த சங்கிலி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தியதில், அவர்கள் ரோசல்பட்டி அரண்மனைத் தெருவைச் சேர்ந்த ஜக்கம்மாள், கார்த்திக் ராஜா, முருகன், கொப்பிலியம்பட்டியைச் சேர்ந்த ஜெயசூர்யா ஆகியோர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்களின் உடல், உடற்கூறாய்வுக்காக விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விருதுநகரில் மின்னல் தாக்கி ஒரேநேரத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொரு சம்பவமாக, விருதுநகரில் கனமழை பெய்ததில் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தெப்பக்குளம் அருகே நின்றிருந்த மரமொன்று வேருடன் சாய்ந்து சுற்றுச்சுவர் மீது விழுந்ததில் தடுப்புக் கம்பிகளுடன் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து தெப்பகுளத்தில் விழுந்தது.