Published:Updated:

“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்!”

விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு...

பிரீமியம் ஸ்டோரி
மே 7-ம் தேதி, விசாகப்பட்டினம் மக்களுக்கு கறுப்பு நாளாகவே விடிந்தது. அங்கு அமைந்துள்ள நிறுவனம் ஒன்றிலிருந்து `ஸ்டைரீன்’ என்கிற கொடிய விஷவாயுக் கசிய, 11 பேர் மரணமடைந்தனர்; சுமார் 5,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2:30 மணியளவில், விசாகப்பட்டினம் அருகே உள்ள ராஜரத்தின வெங்கடாபுரம் என்ற கிராமத்தில் அமைந்திருந்த எல்.ஜி பாலிமர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில்தான் ஸ்டைரீன் என்கிற விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. இந்தக் கசிவு குறித்து அந்த நிறுவனம் மக்களை எச்சரிக்கவோ, கிராம மக்களை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்றவோ முயலவில்லை.

“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்!”

அதிகாலையில் ஏற்பட்ட இந்தக் கசிவு குறித்து அது கசியத் தொடங்கி ஒரு மணி நேரம் கழித்தே அந்தப் பகுதி மக்களுக்குத் தெரிந்தது. அப்போது சுற்றுவட்டாரத்தில் சுமார் மூன்று கிலோமீட்டர் பரப்பளவுக்கு விஷவாயு பரவியிருந்தது.

மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு அதிகாலை 3:30 மணியளவில் வீடுகளைவிட்டு வெளியேறத் தொடங்கினர். வெளியேறிய சில நிமிடங்களிலேயே மயங்கி கீழே விழுந்தனர். தகவல் அறிந்து காவல்துறை, தீயணைப்புத் துறை எனப் பலரும் அந்தப் பகுதிக்கு வந்து மக்களை அங்கிருந்து வெளியேற்ற ஆரம்பித்தனர், அதற்குள் பலரும் மோசமான விளைவுகளைச் சந்திக்கத் தொடங்கினர். அந்த விளைவுகளால் அடுத்த 13 மணி நேரத்திலேயே 11 பேர் மரணமடைந்தனர். சுமார் 5,000 பேர் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

`ஸ்டைரீன் மோனோமர்’ என்கிற ரசாயனப் பொருளைப் பயன்படுத்தி, நன்கு விரியக்கூடிய பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. ஸ்டைரீன் மோனோமரை 17 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவான வெப்பநிலையில் தான் வைத்திருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதுபோன்ற அபாயங்கள் நிறைந்த ஆலைகளின் பராமரிப்புப் பணிகளுக்குத் தடைவிதிக்கவில்லை. இந்த ஊரடங்கு காலத்தில் ஸ்டைரீன் வாயுவை உரிய வெப்பநிலையில் தக்கவைக்காததே, பிரச்னை தொடங்க காரணம். அந்த வாயுவைத் தேக்கிவைத்திருந்த டேங்கில் வெப்பநிலை அதிகமானதால், அதன் வால்வு உடைந்து, ஸ்டைரீன் வாயு கசியத் தொடங்கியுள்ளது.

விஷவாயு வெளியேறிய தொழிற்சாலை
விஷவாயு வெளியேறிய தொழிற்சாலை
“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்!”

களத்தில் இருந்த ஆந்திர மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் சத்யநாராயணமூர்த்தியைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘எல்.ஜி நிறுவனத்தின் சுற்றுச் சுவரைச் சுற்றி வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க, அந்த நிறுவனத்தின் மெத்தனப்போக்குதான் காரணம். அதிகாலையில் இந்த விபத்து நடை பெற்றுள்ளது. வாயுக்கசிவு ஏற்பட்ட தருணத்தில், மக்களை உடனடியாக வெளியேற்றியிருக்க வேண்டும். ஆனால், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மோசமான மூச்சுத்திணறல் பிரச்னைகளுக்கு ஆளாகி, தாமாக அந்தப் பகுதியிலிருந்து மக்களேதான் வெளியேறத் தொடங்கினார்கள்’’ என்றார் ஆதங்கத்துடன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய தேசிய கடலோர ஆராய்ச்சி நிறுவனத்தின் வேதிம ஆய்வாளரான பேராசிரியர் பார்த்திபன், ‘‘ஸ்டைரீன் வாயு, மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. இதன் வெப்பநிலை அதிகரிக்கை யில், கார்பன் டை ஆக்ஸைடு, கார்பன் மோனோ ஆக்ஸைடு, பென்டேன் வாயு ஆகிய ஹைட்ரோ கார்பன் வாயுக்கள் உருவாகின்றன. இவை காற்றில் கலந்து நாம் சுவாசிக்க நேர்ந்தால், முதல் சில நிமிடங்களில் தலைச்சுற்றல், வாந்தி உணர்வு, உடல் நடுக்கம், கண் எரிச்சல் ஆகியவை ஏற்படும். அதுவே ஒரு மணி நேரத்துக்கும் மேல் சுவாசித்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும்; கடுமையான தலைவலி ஏற்படும்; மத்திய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்.

“எச்சரிக்காமல் விட்டதே மரணங்களுக்குக் காரணம்!”

இதுமாதிரியான ஸ்டைரீன் வாயுக்கசிவு ஏற்படும்போது, உடனடி நடவடிக்கையாக ஈரத்துணியால் மூக்கையும் வாயையும் மூடிக்கொள்ள வேண்டும். இந்த வாயு நீரில் கரையாது என்பதால், ஈரத்துணியைத் தாண்டிச் செல்லாது. ஆகவே, நாம் ஈரத்துணியைப் பயன்படுத்தும்போது ஸ்டைரீன் வாயுவையோ, கார்பன் மோனோ ஆக்ஸைடையோ நாம் நுகர முடியாதபடி தடுத்து நிறுத்திவிடும். ஒருவேளை அதற்கு வாய்ப்பில்லையெனில், திறந்தவெளிப் பகுதியான காற்றோட்டம் அதிகமுள்ள பகுதிக்குச் சென்றுவிட வேண்டும். இந்த மாதிரியான வாயுக் கசிவின்போது, நாம் அவசரப்படவோ தப்பிக்க வேண்டுமென்ற அச்சத்தோடு ஓடவோ கூடாது. ஏனென்றால், அவை இரண்டுமே நம்மைப் பதற்றப்படுத்தி வேகமாக மூச்சுவாங்கவைக்கும். அது, கசிந்துகொண்டிருக்கும் வாயுவை அதிகம் நுகரவே உந்தும். நிதானமாக எவ்வளவு குறைவாக மூச்சுவிட முடியுமோ அப்படி சுவாசிக்க வேண்டும்’’ என்றார்.

தமிழகத்தில் இதுபோன்ற ஸ்டைரீன் வாயு பயன்படுத்தும் பாலிமர் ஆலை எதுவும் இல்லை. சென்னை மணலி பகுதியில், ஸ்டைரீன் பாலிமர் ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஸ்டைரீன் வாயுவை நேரடியாகப் பயன்படுத்துவதில்லை. ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னை மணலியில் ரசாயனத் தொழிற்சாலைகள் நிறையவே உள்ளன. எங்குமே இதுபோன்ற வாயுக்கசிவு ஏற்பட்டால் எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கோ சுற்றுவட்டார நிர்வாகங் களுக்கோ பயிற்சியளிக்கப்படுவதில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜெகன்மோகன் ரெட்டி ஆறுதல்

இந்த விஷவாயுத் தாக்குதலால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இழப்பீடு என்பது முக்கியமே. அதைவிட முக்கியம், இழப்பீடு தருவது போன்ற சூழல் ஏற்படாமல் எப்போதுமே முன்னெச்சரிக்கையாக இருப்பது. ஆனால், மனிதர்கள், கால்நடைகள் மற்றும் பல்லுயிரிகள் என பல லட்சம் உயிர்களைப் பறிகொடுத்தப் பிறகும் நம் அரசுகள் அதில் அக்கறைகாட்டுவதேயில்லை.

மருத்துவமனையில் சத்யநாராயணமூர்த்தி ஆறுதல்
மருத்துவமனையில் சத்யநாராயணமூர்த்தி ஆறுதல்

போபால் விஷவாயு விபத்துக்குப் பிறகு, இதுபோன்ற எண்ணற்ற வாயுக்கசிவு விபத்துகளைச் சந்தித்துவிட்டோம். இன்னமும் இதே நிலையில் தான் நம்முடைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன என்பது வேதனைக் குரிய விஷயம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு