Published:Updated:

தொடர் கனமழை... பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் பலி! - தஞ்சாவூரில் சோகம்

சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுவர் இடிந்து விழுந்து விபத்து

தொடர் மழை காரணமாக பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், குடிசை வீட்டில் தூங்கிய தாய், மகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு பொங்கல் பண்டிகை நேரத்தில் இது போன்று மழை பெய்ததாகவும், தற்போது பெய்து வரும் தொடர் மழை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும், பட்டுக்கோட்டை அருகே பக்கத்து வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் தாய், மகள் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுவர் இடிந்து விழுந்து விபத்து

பட்டுக்கோட்டை அருகேயுள்ள வீரக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வரப்பிரசாதம் (52). விவசாயக் கூலித் தொழிலாளி. இவரின் மனைவி மேரி (45). இவர்களுக்கு உதயா, விண்ணரசி, நிவேதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இரண்டாவது மகள் விண்ணரசிக்கு மட்டும் திருமணமான நிலையில், அவர் கணவருடன் வசித்துவருகிறார். 

வரப்பிரசாதத்துக்குச் சொந்தமாக வீட்டுமனைக்கான இடம் இல்லாததால், தன் தம்பி அந்தோணிசாமியின் வீட்டுக்கு அருகிலேயே கீற்றா வேயப்பட்ட குடிசை வீடு அமைத்து குடும்பத்துடன் வசித்துவந்தார். மிகச் சிறிய குடிசை வீடான அந்த வீட்டுக்குச் சுவர்கள்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயக் கூலி வேலை மட்டுமே செய்துவந்ததால், போதுமான வருமானமில்லாமல் வறுமை சூழ்ந்த நிலையிலேயே வேறு வழியில்லாமல் இளம்பெண்களான தனது மகள்கள் மற்றும் மனைவியுடன் வரப்பிரசாதம் அந்தச் சின்னக் குடிசை வீட்டில் வசித்துவந்திருக்கிறார்.

இந்தநிலையில் பட்டுக்கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்துவந்தது. இதனால் தனது வீட்டில் படுக்க முடியாததால் வரப்பிரசாதம், அவருடைய மூத்த மகள் உதயா இருவரும் அருகேயுள்ள மற்றொருவர் வீட்டுக்குத் தூங்கச் சென்றனர். குடிசை வீட்டில் மேரியும் ப்ளஸ் டூ படித்துவரும் நிவேதாவும் தூங்கியிருக்கிறார்கள்.

சுவர் இடிந்து விழுந்து விபத்து
சுவர் இடிந்து விழுந்து விபத்து

தொடர்மழையால் வரப்பிரசாதத்தின் தம்பி அந்தோணிசாமியின் வீட்டுச் சுவர் ஈரத்தில் ஊறிப்போயிருந்திருக்கிறது. இந்தநிலையில் இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில், அந்தோணிசாமியின் ஓட்டு வீட்டின், மண் சுவர் திடீரென இடிந்து அருகிலிருந்த வரப்பிரசாதத்தின் கூரை வீட்டின் மேல் விழுந்தது.

அது, நான்கு புறமும் கீற்றுகளால் வேயப்பட்ட குடிசை வீடு. இடிந்த சுவர், தூங்கிக்கொண்டிருந்த மேரி, நிவேதாஇருவர் மீதும் விழுந்தது. இதில் தாய், மகள் இருவரின் மூச்சும் வீட்டுக்குள்ளேயே அடங்கி, உயிரிழந்துவிட்டரை்.

வீட்டுச் சுவர் இடிந்து விழுந்த சத்தம் கேட்டு மற்றொரு வீட்டில் படுத்திருந்த வரப்பிரசாதமும் உதயாவும் பதறியடித்து ஓடி வந்தனர். அக்கம்பக்கத்தினரும் அந்த இடத்தில் திரண்டனர்.

இடிந்த சுவர், கீற்று இவைகளுக்கு இடையே மடிந்து கிடந்த மேரி, நிவேதா உடல்களை தீயணைப்புத்துறை போலீஸார் உதவியுடன் அருகிலிருந்தவர்கள் மீட்டனர். அப்போது வரப்பிரசாதம், `முழுசா நாலு பேர் வாழ முடியாத வீட்டில் எப்படியும் நமக்கு வெளிச்சம் வரும் என கடும் கஷ்டத்துக்கு இடையே இங்கேயே வாழ்ந்துவந்தேன். எந்த வசதியும் இல்லாத வீட்டில் பொம்பளைப் புள்ளைக கஷ்டபடுவதை நெனச்சு பல நாள் கலங்கியிருக்கேன்.

மேரி
மேரி

இந்தநிலைமையில, `பெஞ்ச மழையால வீடு ஈரமாயிடுச்சு. இதுக்குள்ள எப்பிடி படுப்பீங்க... நீங்களும் மூத்தவளும் பக்கத்து வீட்டுல போய்ப் படுத்துத் தூங்குங்க’ன்னு மேரி சொன்னா. அதனால நானும் பெரிய மகளும் பக்கத்து வீட்டுக்குப் போய்த் தூங்கினோம். அப்போதான் சுவர் இடிஞ்சு மேரியும் நிவேதாவும் உயிரிழந்துட்டாங்க. இது வெறும் கனவாக இருக்கக் கூடாதா?” என இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்ட இருவரது உடலையும் கட்டிக்கொண்டு வரப்பிரசாதம் கதறினார். அம்மாவும் தங்கையும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து, வாய்விட்டு அழக்கூட முடியாமல் அப்படியே அதிர்ச்சியில் உறைந்திருந்தார் உதயா .

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். இருவரது உடல்களும் உடற்கூறாய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் கந்தசாமியிடம் பேசினோம், ``வரப்பிரசாதம் பல ஆண்டுகளாக அரசுக்கிட்ட இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டுவந்தார். `ஒரு இடம் கிடைச்சுட்டா அரசின் பசுமை வீடோ அல்லது எப்பாடுபட்டாவது சொந்தமாக ஒரு சின்ன வீட்டையோ கட்டி என் குடும்பத்தை சந்தோஷமாக வாழவைப்பேன்’ என அடிக்கடி கூறுவார். `நம்பிக்கையோடு இருங்க... நல்லது நடக்கும்’ எனப் பலரும் கூறிவந்தனர்.

இந்தநிலையில் சுவர் இடிந்து விழுந்து அவரின் மனைவியும் மகளும் உயிரிழந்திருக்கிறார்கள். இதை எங்களாலேயே தாங்க முடியவில்லை. வரப்பிரசாதத்தின் நிலைமை பரிதாபத்துக்குரியது.

 நிவேதா
நிவேதா

பாதிக்கப்பட்டிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், மேலும், தொடர் மழை பெய்துவருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிசை, மண் சுவரால் கட்டப்பட்ட வீடுகளில் வசித்துவருபவர்களை, பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பதற்கான ஏற்பாட்டை வருவாய்த் துறையினர் எடுக்க வேண்டும்" என்று சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு