Published:Updated:

`ஓவர் ஸ்பீடுக்கும் மேல; பயணிகள் மீது அக்கறையே இல்ல!’ -மைசூர் விபத்தை விவரிக்கும் இளம்பெண்

அம்ருதா
அம்ருதா

ஓவர் ஸ்பீடுக்கு கூட நாம் மனதில் ஒரு லிமிட் வைத்திருப்போம். அது அதையும் தாண்டிய வேகம். அது ஸ்லீப்பர் பஸ் எங்களால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை.

கோவை மாவட்டம் அவினாசியில் கேரள அரசுப்பேருந்து மீது டைல்ஸ் ஏற்றிச்சென்ற லாரி மோதிய விபத்தில் 19 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநரின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்து குறித்து இளம்பெண் ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ பிப்ரவரி 21-ம் தேதி நடந்த விபத்து குறித்து கூறுகிறது. இந்த விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Representation image
Representation image

அந்த வீடியோவில் கழுத்தில் பேண்டேஜ் அணிந்தபடி தோன்றும் அம்ருதா,``கேரள அரசுப்பேருந்து விபத்து குறித்து நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம். மீடியாக்களில் இந்த விபத்து குறித்து அதிகம் பேசப்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் பெங்களூரு - பெரிந்தல்மன்னா (Perintalmanna) இடையே இயக்கப்படும் தனியார் பேருந்து விபத்து குறித்து பேசுகிறேன். பிப்ரவரி 21-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு மைசூர் அருகில் உள்ள ஹன்சூர் (hunsur) பகுதியில் இந்த விபத்து நடந்தது. ஹன்சூர் ஒரு சிறிய கிராமம்தான். நள்ளிரவில் அந்தப்பகுதியில் விபத்து நடந்ததால் யாருக்கும் பெரிதாக தெரியவில்லை.

விபத்துக்குள்ளான பேருந்தில் நான் பயணித்தேன். நான் இந்த வீடியோ வெளியிடுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. இந்த விபத்து குறித்து வெளியான தகவல்கள் உண்மையில்லை. விபத்தில் பலியான பெண் மலையாளி என்றும் கார் மீது மோதாமல் இருக்க டிரைவர் பேருந்தைத் திருப்பியதால் விபத்து நடந்ததாக வெளியான தகவல்கள் உண்மையில்லை. அந்தப்பெண் மலையாளி இல்லை. அவர் எனக்கு அருகில் இருக்கும் சீட்டில்தான் இருந்தார். அவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். பெங்களூரில் பணியாற்றி வந்துள்ளார்.

அம்ருதா
அம்ருதா
`தந்தை இறந்தது தெரியாமல் பள்ளிக்குச் சென்ற மகள்!’-கேரள ஓட்டுநர் மரணத்தால் கலங்கும் உறவுகள் #Avinashi

பெங்களூரில் இருந்து 9.30 மணிக்கு பேருந்து புறப்பட்டது. பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் வேகமெடுத்தது. ஓவர் ஸ்பீட் என்று கூட சொல்ல முடியாது. ஓவர் ஸ்பீடுக்கு கூட நாம் மனதில் ஒரு லிமிட் வைத்திருப்போம். அது அதையும் தாண்டிய வேகம். அது ஸ்லீப்பர் பஸ், எங்களால் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. நாங்கள் அனைவரும் அந்தப்பக்கம் இந்தப்பக்கம் என உருண்டுக்கொண்டேதான் பயணிக்க முடிந்தது.

பஸ்ஸில் இருந்த சில பயணிகள் டிரைவரிடம் சென்று பேசினர். பஸ்ஸில் பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணி என நிறைய பேர் உள்ளனர். கொஞ்சம் வேகம் குறைவாக இயக்குங்கள் என கேட்டுக்கொண்டனர். நீங்கள் கவலைப்படும்படி ஒன்றும் இல்லை. இது நாங்கள் வழக்கமாக செல்லும் ரோடுதான் என டிரைவர் பதிலளித்தையடுத்து, அவர்கள் திரும்பிவிட்டனர். அதன்பின்னர் தான் நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த விபத்து நடந்தது. அப்போது பேருந்தில் பயணித்த சிலர் நல்ல உறக்கத்தில் இருந்தனர். விபத்து நடந்தபோது என்ன நடந்தது என யாருக்கும் தெரியவில்லை.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

தனியார் பேருந்து பர்மிட் இல்லாத சாலையில் பயணித்தது. ஹன்சூர் ஒரு கிராமப்பகுதி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியப்பகுதி இல்லை. சாலை இரண்டாகப் பிரியும் இடத்தில் வழி தெரியாமல் பேருந்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். பேலன்ஸ் இல்லாமல் பேருந்து ஒரு போஸ்டில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. சாலையிலிருந்து விலகி பேருந்து கவிழ்ந்து கிடந்தது. நான் லோயர் பெர்த்தில் பயணித்தேன். அப்பர் பெர்த்தில் இருந்து கிழே விழுந்தவர்களால் என்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. என்னை மீட்டு வெளியே கொண்டுவரும்போது, நான் பார்த்த காட்சி எனக்கு மிகுந்த வேதனையை அளித்தது.

நான் அந்தப் பேருந்தில் ஏறியபோது எங்களுக்கு உதவி செய்த க்ளீனர், கால் இல்லாமல் கிடந்தார். மேலும், ஒரு சிலருக்கு கை மற்றும் விரலில் காயம் இருந்தது. கர்ப்பிணிப் பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. நாங்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு வந்த போலீஸார், `இந்த சாலையில் பேருந்து வர என்ன காரணம்?' எனக் கேட்டனர். அதே கேள்விதான் எங்களுக்கும் எழுந்தது. அதன்பின்னர் அந்தப் பேருந்து நிர்வாகம் வேறொரு பேருந்தை எங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பேருந்தில் ஏறுவதற்கான தைரியம் எங்களுக்கு இல்லை.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

இந்த விபத்தில் இப்போதுதான் உயிர்பிழைத்துள்ளோம். மீண்டும் அதே நிறுவனத்தின் பேருந்தில் ஏற எப்படி தைரியம் வரும். வேறு வழியில்லாமல் அந்தப் பேருந்தில் ஏறினோம். நன்றாக விடிந்த பின்னர் காலை 7 மணிக்கு பேருந்து அங்கிருந்து புறப்படும்படி கேட்டுக்கொண்டோம். இரண்டாவது பேருந்தும் வயநாடு சாலையில் சென்ற வேகம் இருக்கே! நாங்கள் உயிரோடு வீடு திரும்பியதே ஆச்சர்யமாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்கிறோம் என்ற நினைவே அவர்களுக்கு இல்லை. இந்த அணுகுமுறை எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவர்களின் பொறுப்பற்ற தன்மையை வெளியே கூற வேண்டும் என்பதற்காகத்தான் பேசுகிறேன். கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் காவல்துறையினர் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

This is the truth and reality about the Bangalore - Perinthalmanna Route Kallada Bus accident that happened near Hunsur...

Posted by Amrutha Menon on Saturday, February 22, 2020
அடுத்த கட்டுரைக்கு