Published:Updated:

`பாதுகாப்புனு நினைச்சுதான் போகச் சொன்னேன்.. ஆனா?!'- மெட்ரோ விபத்தில் மனைவியை பறிகொடுத்த வாலிபர்!

சுமார் 9 மீட்டர் உயரத்திலிருந்து சுவரின் முனைப் பகுதி செங்குத்தாக மௌனிகாவின் தலையில் விழுந்ததால் அவர் அலறியபடி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

metro accident
metro accident ( twitter )

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 24 வயது மௌனிகா. இல்லத்தரசியான இவர் குகத்பல்லி (Kukatpally) பகுதியில் வசித்துவந்துள்ளார். இவரின் கணவர் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். இந்தத் தம்பதிக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், நேற்று தன் தோழியுடன் மெட்ரோவில் பயணம் செய்துள்ளார் மௌனிகா. அப்போது பலத்த மழை பெய்ததால் அமீர்பேட் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள நடைபாதையில் நின்றுகொண்டிருந்தார். அங்கு மக்கள் கூட்டமும் அதிகம் இருந்துள்ளது. சரியாக நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு மௌனிகா நின்றிருந்த இடத்துக்கு மேலே உள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து அவரது தலையில் விழுந்துள்ளது.

metro accident
metro accident
twitter

சுமார் 9 மீட்டர் உயரத்திலிருந்து சுவரின் முனைப் பகுதி செங்குத்தாக மௌனிகாவின் தலையில் விழுந்ததால் அவர் அலறியபடி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார். மௌனிகாவின் தலை மற்றும் காதுகளிலிருந்து ரத்தம் கொட்டியுள்ளது. உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து முதலுதவி செய்வதற்குள் சம்பவ இடத்திலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. இதுபற்றிப் பேசிய ஹைதராபாத் மெட்ரோ இயக்குநர் என்.வி.எஸ் ரெட்டி, ``மெட்ரோ கான்கிரீட் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் இளம் பெண் உயிரிழந்துள்ளது மிகவும் துர்திர்ஷ்டவசமானது. விபத்து நடந்த காரணம் பற்றி மிகவும் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறோம். ஹைதராபாத்தில் உள்ள அனைத்து , மெட்ரோ நிலைய கட்டடங்களின் தன்மையையும் பரிசோதிக்கக் கூறியுள்ளேன்.

இறந்த இளம் பெண்ணுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசை நாங்கள் கேட்டுக்கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். மௌனிகா இறப்பு தொடர்பாக எஸ்.ஆர் நகர் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தன் மனைவி ஆட்டோவில் செல்வதாகக் கூறியதாகவும் தானே அவரை மெட்ரோவில் பயணிக்கும்படி வற்புறுத்தியதாகவும் கூறி வருந்தியுள்ளார் மௌனிகாவின் கணவர் ஹரிகாந்த். தன் மனைவி இறப்பதற்கு முன்பு நடந்த சம்பவங்கள் பற்றி `தி இந்து' ஊடகத்திடம் பேசியுள்ளார், ``என் மனைவி மௌனிகா, அவரின் தோழி லிகிதாவுடன் வெளியில் செல்வதாகப் புறப்பட்டார். முதலில் ஆட்டோ அல்லது பேருந்தில் செல்வதாக என்னிடம் கூறினார்.

metro accident
metro accident
twitter

ஆனால், நான்தான் மெட்ரோவில் பயணித்தால் எளிமையாக இருக்கும், விரைவாகவும் பயணிக்க முடியும் என்பதற்காக இதை வலியுறுத்தினேன். அவர் மீது சுவர் விழுவதற்கு சரியாக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்தான் மௌனிகாவையும், லிகிதாவையும் என் காரில் அழைத்துச் சென்று எஸ்.ஆர் நகர் மெட்ரோ நிலையத்தில் இறக்கிவிட்டுச் சென்றேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் மருத்துவமனையிலிருந்து போன் செய்து மௌனிகா இறந்த செய்தியை லிகிதா என்னிடம் கூறினார்" எனக் கூறியுள்ளார்.

லிகிதா அமீர்பேட்டில் உள்ள கோச்சிங் அமைப்பில் சேர்வதற்காக திட்டமிட்டிருந்தார். இதற்காக அமீர்பேட்டில் ஹாஸ்டல் பார்க்க செல்லும்போதுதான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. `` `குகத்பல்லியிலேயே தங்கிக்கொள். அப்போதுதான் மௌனிகா உன்னைப் பார்க்க வசதியாக இருக்கும்'' என நான் லிகிதாவை ஏற்கெனவே கூறியிருந்தேன். ஆனால், அமீர்பேட்டில் தனது நண்பர்கள் இருப்பதால் அங்கு செல்வதாக கூறினார். அதற்காக அமீர்பேட்டில் உள்ள ஹாஸ்டலில் வசதிகள் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கத்தான் இருவரும் சென்றனர்" என மனைவியின் இறப்பால் கண்ணீர் வடிக்கும் ஹரிகாந்த், ``மெட்ரோவில் பயணித்தால் பாதுகாப்பாக இருக்கும் என நினைத்துதான் அவர்களை மெட்ரோவில் செல்லச் சொன்னேன்.

Harikanth
Harikanth
twitter

ஆனால், மெட்ரோவிலேயே பாதுகாப்பில்லாமல் என் மனைவி இறந்துள்ளார். மழை பெய்யும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மெட்ரோ நிலையங்களின் கீழ் தஞ்சமடைகிறார்கள். இனி அவர்களை போன்றவர்களுக்கு இத்தகைய விபத்துகள் மீண்டும் நிகழக் கூடாது. அனைத்து நிலையங்களிலும் உள்ள கட்டமைப்புகளின் வலிமையை சரிபார்க்க வேண்டும்" என அரசை வலியுறுத்தியுள்ளார்.

news credit - thehindu