Published:Updated:

திருவாரூர்: வயலில் நடவுப் பணி; அறுந்து கிடந்த மின்கம்பி! - பெண் தொழிலாளி பரிதாப பலி

நீடாமங்கலம்
News
நீடாமங்கலம்

``சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள், மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் நிகழக்கூடும்... இவற்றை மாற்றி, புதிதாக மின்சாரக் கம்பிகள் அமைக்க வேண்டும்.”

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூரில், வயலில் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயப் பெண் தொழிலாளர், மின்சாரம் தாக்கிப் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்வாரிய அலுவலர்களின் அலட்சியத்தின் காரணமாகவே இந்த விபரீத சம்பவம் நிகழ்ந்திருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

மின்கம்பி தாக்கி பெண் பலி
மின்கம்பி தாக்கி பெண் பலி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகில் உள்ள தென்கொண்டார் இருப்பு கிராமத்தில் வசித்துவரும் ராஜப்பன் என்பவரின் மனைவி சாரதாம்பாள். 58 வயதான விவசாய கூலித் தொழிலாளியான இவர், நேற்று திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆதனூரில் வசிக்கும் தனது உறவினரான கவுசல்யாவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது அப்பகுதியிலுள்ள விவசாய நிலத்தில் நடைபெற்ற நடவுப் பணிக்காக சாரதாம்பாள் சென்றிருக்கிறார். இவர் நாற்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நிலத்தில் மின்சாரக் கம்பி அறுந்த நிலையில் கிடந்திருக்கிறது. அதை இவர் கவனிக்காததால், எதிர்பாராதவிதமாக மிதித்திருக்கிறார். அதன் காரணமாக மின்சாரம் பாய்ந்து, சாரதாம்பாள் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற விவசாய தொழிலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். உடனே, நீடாமங்கலம் காவல்துறையினரும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, வழக்கு பதிவு செய்தனர். சாரதாம்பாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மின்கம்பி - பெண் பலி
மின்கம்பி - பெண் பலி

இந்தச் சம்பவம் குறித்து ஆதங்கத்தோடு பேசும் இப்பகுதி மக்கள், ``சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட மின்சாரக் கம்பிகள், மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் உள்ளன. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஆபத்துகள் நிகழக்கூடும்... இவற்றை மாற்றி, புதிதாக மின்சாரக் கம்பிகள் அமைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டேதான் இருந்தோம். ஆனாலும் மின்வாரிய அலுவலர்கள் இதில் அக்கறை காட்டவில்லை, இவர்களது அலட்சியத்தால்தான் தற்போது மின்சாரக் கம்பி அறுந்து விழுந்து சாரதாம்பாள் உயிரிழந்திருக்கிறார்’’ என்கிறார்கள்.