Published:Updated:

`வெடித்த காஸ் சிலிண்டர்; மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன்!'-ஈரோட்டில் காதல் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

விபத்து
விபத்து

குடும்பத்தை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால், மகளின் இறப்புக்கு கூட பெற்றோர் வர மாட்டேன் எனச் சொல்லியிருக்கின்றனர்.

ஈரோடு குளத்துப்பாளையம், மேட்டையன்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - நந்தினி தம்பதி. ரமேஷ் சொந்தமாக ஜே.சி.பி வண்டியை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவர்களுக்கு வினிஸ் (7), தீபேஸ் (4) என இரு மகன்கள் இருக்கின்றனர். எல்.கே.ஜி படிக்கும் இளைய மகனை தம்பதி இருவரும் டூவீலரில் சென்று பள்ளியில் விட்டுவிட்டு வீட்டுக்கு வந்திருக்கின்றனர். ரமேஷ் வேலை விஷயமாக வெளியே சென்றுவிட, உடல்நிலை சரியில்லாத மூத்த மகன் வீட்டில் இருந்திருக்கிறான். வீட்டுக்கு வெளியே கட்டப்பட்டிருந்த ஆட்டுக்கு சிறுவன் தண்ணீர் வைக்கச் சென்ற சமயம், வீட்டிலிருந்து பயங்கரமான தீ கிளம்பியிருக்கிறது. உடனே `உள்ள இருக்க எங்க அம்மாவைக் காப்பாத்துங்க’ என கதறியபடி அந்தச் சிறுவன் அக்கம்பக்கம் உதவிகேட்டு ஓடியிருக்கிறான்.

சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடு
சிலிண்டர் வெடித்து தரைமட்டமான வீடு

உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த பிறகுதான் வீட்டிலிருந்த கேஸ் சிலிண்டர் வெடித்திருக்கிறது என்ற விவகாரம் தெரிந்திருக்கிறது. இதற்கிடையே, தகவல் கேட்டு ஓடிவந்த கணவர் ரமேஷ் தீயில் சிக்கி அலறிக்கொண்டிருந்த மனைவியைக் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். பலரும் தடுத்தபோதிலும், உள்ளே சென்ற ரமேஷுக்கு தலை, முதுகு என பல இடங்களில் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டன.

தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைப்பதற்குள், நந்தினி தீயில் கருகி பலியாகிவிட்டார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு உயிரிழந்த நந்தினி, தீக்காயமடைந்த ரமேஷ் ஆகிய இருவரையும் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து எப்படி நடந்ததென சித்தோடு போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

`வெடித்த காஸ் சிலிண்டர்; மனைவியைக் காப்பாற்ற முயன்ற கணவன்!'-ஈரோட்டில் காதல் தம்பதிக்கு நேர்ந்த சோகம்

``உடம்பு சரியில்லாத எனக்கு டீ வச்சுத் தரேன்னு அம்மா கேஸை பத்த வைக்கப் போனுச்சு. அது வெடிச்சு எங்க அம்மாவைக் கொன்னுடுச்சே” என அந்த 7 வயது சிறுவன் போலீஸாரிடம் கலங்கியிருக்கிறான். பள்ளிக்குச் சென்ற 4 வயது மகன் வீட்டுக்கு அழைத்துவரப்பட, என்ன நடந்ததென தெரியாமல் அம்மாவைக் கேட்டு அழுதிருக்கிறான். இதற்கிடையே, உயிரிழந்த நந்தினியின் பெற்றோரை வரவழைக்க போலீஸார் போனில் பேசியிருக்கின்றனர். `எங்களோட சம்மதத்தை மீறி ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டா. அவ என்ன ஆனா எங்களுக்கு என்ன?... எங்களோட சின்னப் பொண்ணுக்கு கல்யாணம் விஷயமா பத்திரிகை வைக்கிற வேலையில இருக்கோம். எங்களால வரமுடியாது’ எனச் சொல்லியிருக்கின்றனர். தீ விபத்தில் நந்தினி உடல்கருகி பலியாக, காப்பாற்றச் சென்ற அவருடைய கணவர் 60 சதவிகிதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

அடுத்த கட்டுரைக்கு