Published:Updated:

ஆற்றில் சடலமாக ஒதுங்கிய மகன்; அதிர்ச்சியில் உயிரிழந்த தாய்! - புதுச்சேரி சோகம்

ஆற்றில் குளிக்கப்போன மகன் காணாமல்போன தகவலைக் கேள்விப்பட்டு மாரடைப்பால் மயங்கி விழுந்த தாயும் மகனும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுச்சேரி, சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் வேலு என்பவரின் மகன் ஜீவா. இவர், நேற்று முன்தினம் மாலை அரியாங்குப்பம் காசநோய் மருத்துவமனை எதிரிலுள்ள ஆற்றில் தனது நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்றார். அங்கு அவருடைய நண்பர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, ஜீவா தனியாக ஆற்றில் குளிப்பதற்காக இறங்கியிருக்கிறார். அந்தப் பகுதி சுற்றுலா மையத்துக்காக ஆழப்படுத்தப்பட்டிருப்பதை அறியாமல் இறங்கிய ஜீவா நீரில் மூழ்கினார்.

ஜீவா
ஜீவா

அதில் அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக தவளக்குப்பம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் போலீஸார் மற்றும் தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரவு வரை தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. ஜீவா ஆற்றில் மூழ்கிய செய்தியைக் கேட்ட அவரின் தாயார் முத்துலட்சுமி வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். அவருக்கு ஏற்கெனவே இதயநோய் இருந்தது. அதையடுத்து முத்துலட்சுமியை மீட்ட அவருடைய உறவினர்கள் உடனடியாக அவரை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஜீவா
ஜீவா
PremKumar SK

அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார். இந்தநிலையில் நேற்று காலை ஜீவாவின் சடலம் அந்தப் பகுதியில் கரை ஒதுங்கியது. அவரது சடலத்தை மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அதேநேரத்தில் அங்கு சிகிச்சையில் இருந்த முத்துலட்சுமியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகனும் தாயும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம்  அவர்களுடைய உறவினர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர்: `ஊழியர் மர்ம மரணம்?!’ - திமுக எம்.பி நடத்தும் முந்திரி ஆலைமீது உறவினர்கள் புகார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு